சென்னை: புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் நாளை காலை 10 மணிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை நடத்துகிறார். பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நிலவி வரக்கூடிய நிலையில் தன்னுடைய உயிர் இருக்கும் வரை தானே தலைவராக நீடிக்கப்போவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார். மேலும் அன்புமணி தரப்பு ஆதரவாளர்களை பொறுப்பிலிருந்தும் அன்புமணி நீக்கி வருகிறார். சட்ட விதிகள் படி பாமகவை தன்வசம் படுத்தக்கூடிய பணியை அன்புமணி தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக மாவட்ட அளவில் பொதுக்குழுவை கூட்டி பாமக தலைவர் அன்புமணி தலைமையில் 2026 தேர்தலுக்காக உழைப்போம் என்ற தீர்மானம் நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மாவட்ட அளவிலான பொதுக்குழுவை கூட்டி மாவட்ட தலைவர், செயலாளர்களை நியமிக்கவும் அன்புமணி உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்றால் மட்டுமே தலைவர், செயலாளர் பதவிகளில் தொடரக்கூடிய வகையில் தீர்மானம் நிறைவேற்றி அதனை மாநில தலைமைக்கு அனுப்பவும் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. பாமக கட்சி விதிகளின் படி மாநில தலைவர்களை எவ்வாறு பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வார்களோ அதேபோல மாவட்ட அளவிலும் தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுக்குழுவால் தேர்தெடுக்கப்பட்ட தலைமைக்கு மட்டுமே கட்சியில் அதிகாரம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் நோக்கத்தில் இந்த திட்டங்களை அன்புமணி வகுத்திருப்பதாக கூறப்படுகிறது. மாவட்ட பொதுக்குழுவை கூட்ட அன்புமணி அறிவுறுத்தியுள்ள நிலையில் ராமதாஸ் நாளை ஆலோசனை நடத்துகிறார். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் நாளை காலை 10 மணிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை நடத்துகிறார். வட மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுடன் தைலாபுரம் இல்லத்தில் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
The post பாமகவை தன்வசப்படுத்தும் அன்புமணி?.. புதிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் நாளை முக்கிய ஆலோசனை appeared first on Dinakaran.