பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே சாலையில் திடீர் பள்ளம்: அதிகாரிகள் ஆய்வு


பெரம்பூர்: பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள சாலையில் நேற்று காலை 8 மணியளவில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. உடனடியாக அப்பகுதி மக்கள் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், செம்பியம் போக்குவரத்து உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சுடலைமணி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தடுப்புகள் வைத்து போக்குவரத்தை சரிசெய்தனர். அந்த பகுதியில், 6 அடி ஆழத்திற்கு கீழ் மெட்ரோ வாட்டர் ராட்சத பைப்லைன் செல்வதால் உடனடியாக குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி 6வது மண்டல குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய பகுதி பொறியாளர் மைதிலி, பகுதி துணை பொறியாளர் சுரேஷ்குமார், மாநகராட்சி உதவி பொறியாளர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சுமார் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்திருக்கலாம் எனவும், பள்ளம் விழுந்த பகுதியிலிருந்து சுமார் 50 அடி தூரத்தில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருவதால் அதனால் பாதிப்பு ஏற்பட்டதா எனவும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பின்னர், பள்ளத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தேவைப்படும் பட்சத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும், என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். கனரக வாகனங்கள் மட்டும் மாதவரம் நெடுஞ்சாலை மேல்பட்டி பொன்னப்பன் தெரு, பி.பி சாலை வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் பெரம்பூர் ரயில் நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே சாலையில் திடீர் பள்ளம்: அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: