முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாற்ற புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 72,000 பேருக்கு அடிப்படை பயிற்சிகள்

*இணை இயக்குனர் தகவல்

நாமக்கல் : முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தை மாற்றிட, புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 72 ஆயிரம் பேருக்கு அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக இணை இயக்குனர் பொன் குமார் தெரிவித்தார். தமிழகத்தில் வசிக்கும் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்க தெரியாதவர்களுக்கு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன் மூலம், அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு எண்ணறிவு கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, நாமக்கல் மாவட்டத்தில் 901 மையங்களில் 12 ஆயிரத்து 889 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 901 மையங்கள் செயல்படுகின்றன.

எழுத்தறிவு பயிற்சி அளிக்கும் பணியில் 897 தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையங்களில் பயின்று வரும் கற்போர்களுக்கான மதிப்பீட்டு தேர்வு வரும் 15ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்விற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட இணை இயக்குனர் பொன் குமார் கலந்துகொண்டு பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் 2025-26ம் கல்வி ஆண்டில் 12,889 கற்போர்கள் தேர்வு எழுத உள்ளனர். அனைத்து கற்போர்களும் தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக அனைத்து மையங்களும் அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்க வேண்டும்.

கற்போர்களின் வசதிக்கேற்ப அவர்கள் பணிபுரியும் இடத்திற்கு சென்றும், அல்லது வீட்டிற்கும் சென்று தன்னார்வலர்கள் தேர்வு நடத்த வேண்டும். இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாற்ற வேண்டும்.

இதற்காக பள்ளி அளவில் குடியிருப்பு வாரியாக கல்லாதவர்களை கண்டறிந்து, ஒருவரும் விடுபடாமல் மையங்களில் சேர்த்து அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு கற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுவரை மாவட்டம் முழுவதும் 72 ஆயிரம் பேருக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், முழு எழுத்தறிவினை கள அளவில் உறுதிப்படுத்திக்கொண்டு கிராம நிர்வாக அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர்கள் கையொப்பமிட்ட பள்ளி அளவிலான சான்றிதழ்கள் மற்றும் வட்டார வளமைய அளவிலான சான்றிதழ்கள், மாவட்ட திட்ட அலுவலகத்தில் தன்னார்வலர்கள் வழங்க வேண்டும்.இவ்வாறு இணை இயக்குனர் தெரிவித்தார்.

புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையங்களின் கற்போர்களுக்கு பயிற்சி அளித்து வரும், நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் ஆகிய வட்டாரங்களின் தன்னார்வலர்களுக்கு, நாமக்கல் மாவட்டத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாற்றுவதற்கான ஆலோசனைகளை இணை இயக்குனர் வழங்கினார். தன்னார்வலர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு பொருள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம், மாவட்ட கல்வி அலுவலர்கள் பச்சமுத்து, விஜயன், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தை இந்தாண்டு நவம்பரில் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாற்ற கல்வித்துறை அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக கொல்லிமலை, போதமலை பகுதிக்கு கல்வித்துறை அதிகரிகள் நேரில் சென்று முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்கள் குறித்து கணக்கெடுப்பு பணியில், கடந்த 4 மாதத்திற்கு முன் ஈடுபட்டனர்.

தற்போது அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களிலும் கடந்த 2023ம் ஆண்டு முதல் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை மாவட்டம் முழுவதும் 72 ஆயிரம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாற்ற புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 72,000 பேருக்கு அடிப்படை பயிற்சிகள் appeared first on Dinakaran.

Related Stories: