கட்டுமான பணிகளுக்கான உபகரணங்கள் அடைத்து வைப்பு பாளை. காந்தி மார்க்கெட்டை திறக்கக்கோரி கவுன்சிலர்கள் திடீர் தர்ணா

*பொதுப்பாதையை திறந்துவிட கோரிக்கை

நெல்லை : பாளை. மகாத்மா காந்தி மார்க்கெட்டை திறக்கக் கோரியும், அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள பொதுப் பாதையை திறக்கக் கோரியும் கவுன்சிலர்கள் திடீர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

பாளை. மகாத்மா காந்தி மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.42 கோடியில் புதுப்பிக்கப்பட்டு 430 கடைகளோடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 6ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாளை. மார்க்கெட்டை திறந்து வைத்தார்.

இருப்பினும் மார்க்கெட் கடைகளை வியாபாரிகளுக்கு வழங்குவதில் சிக்கல் நீடிப்பதால் இன்னமும் திறக்கப்படாமல் உள்ளது. பாளை. மார்க்கெட்டை திறந்து அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதோடு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாளை. மார்க்கெட்டை திறக்கக் கோரியும் அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள பொதுப் பாதையை திறந்து விடக் கோரியும், நெல்லை மாநகராட்சி 33வது வார்டு கவுன்சிலர் லட்சுமி உமாபதி சிவன், 9வது வார்டு கவுன்சிலர் சுப்புலட்சுமி குணா மற்றும் முன்னாள் கவுன்சிலர் உமாபதி சிவன், இளைஞர் காங்கிரஸ் ராஜீவ்காந்தி உள்ளிட்டோர் திடீர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

பாளை திருச்செந்தூர் சாலையில் இருந்து கிருஷ்ணன் கோயில் கீழத் தெருவிற்கு செல்லும் பொது பாதையானது மார்க்கெட் பகுதியில் தற்போது அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும் மாணவ, மாணவிகளும் வெகுதூரம் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது.

எனவே அந்த பொதுப் பாதையை திறந்து விட வேண்டும். பாளை மார்க்கெட்டிற்குள் சித்தா கல்லூரிக்கான கட்டுமானப் பணிகளுக்கான உபகரணங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் மார்க்கெட்டின் அழகு சீர் குலைந்து வருவதாகவும் அவற்றை அங்கிருந்து அகற்ற வேண்டும் எனக் கோரியும் கவுன்சிலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த திடீர் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சமூக விரோத செயல்கள் அதிகரிப்பு

பாளை. காந்தி மார்க்கெட்டிற்குள் சமீபகாலமாக சமூகவிரோத செயல்களும் அதிகரித்து வருகின்றன. அங்கு திறந்து கிடக்கும் கடைகளில் சில இடங்களில் மதுபாட்டில்கள் காணப்படுகின்றன. மேலும் இரவு நேரங்களில் மார்க்கெட்டிற்குள் நுழையும் சிலர் சமூக விரோத செயல்களையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பாளை. சித்தா கல்லூரியின் கட்டுமான பணிகளுக்கான பலகைகள் மற்றும் இரும்பு உபகரணங்கள் உள்ளிட்டவை அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

பலகைகளை செதுக்கும் பணிகளும் அங்கு நடப்பதால், வடநாட்டு தொழிலாளர்களும் அங்கு 4 கடைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் குடியும், கும்மாளமுமாக இருப்பதால், மார்க்கெட் திறக்கும் முன்பே கடைகள் மாசடைந்து வருவதாக கூறப்படுகிறது.

மார்க்கெட்டின் வெளிப்புற சுவர்கள் போஸ்டர்களின் கூடாரமாக காணப்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நேரில் அங்கு சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

The post கட்டுமான பணிகளுக்கான உபகரணங்கள் அடைத்து வைப்பு பாளை. காந்தி மார்க்கெட்டை திறக்கக்கோரி கவுன்சிலர்கள் திடீர் தர்ணா appeared first on Dinakaran.

Related Stories: