குன்னூர் : குன்னூர் மார்க்கெட் விவகாரத்தில் கடைகளை காலி செய்ய நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியதால் ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு வியாபாரிகள் திட்டமிட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில், 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
குன்னூர் பகுதி மக்கள் மட்டுமல்லாமல் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்களும், பல்வேறு கிராமப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் மார்க்கெட்டிற்கு வந்து தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில் மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் கட்டிடம் பழமை வாய்ந்ததாக கூறி அப்பகுதியில் செயல்பட்டு வரும் கடைகளை இடித்து புதிதாக பார்க்கிங் வசதியுடன் கூடிய கடைகள் கட்ட தமிழக அரசு சார்பில் 41 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குன்னூர் மார்க்கெட் சங்கத்தினர் மார்க்கெட் பகுதியை இடித்தால் வியாபாரிகள் மட்டுமல்லாமல் இதனை நம்பியுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்படுவார்கள் என்பதால் வியாபாரிகள் பல்வேறு கட்ட போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் குன்னூர் நகராட்சி அதிகாரிகள் நேற்று முதற்கட்டமாக 324 கடைகளை 15 நாட்களுக்குள் காலி செய்யக்கூறி நோட்டீஸ் வழங்கினர்.
நான்கு கட்டமாக மார்க்கெட் கடைகளை புதுப்பிக்கும் பணி நடைபெற உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளிடம் தெரிவித்தனர். நோட்டீஸ் வழங்கியதற்கும் நகராட்சி கடைகளை இடிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் ரவியுடன் வியாபாரிகள் பலர் ஒன்று கூடி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
குறிப்பாக குன்னூரில் பிரசித்தி பெற்ற அந்தோணியார் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரியவுள்ளனர். இத்தகைய சூழலில் குன்னூர் மார்க்கெட் பகுதி முழுவதும் உள்ள கடைகளை அடைக்க சங்கத்தின் சார்பாக திட்டமிட்டு வரும் சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post குன்னூர் மார்க்கெட்டில் கடைகளை காலி செய்ய நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் விநியோகம் appeared first on Dinakaran.