திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தாமதமின்றி தொகையை வழங்க வேண்டும்

*குறைதீர்வு கூட்டதில் விவசாயிகள் வலியுறுத்தல்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், டிஆர்ஓ ராம்பிரதீபன், எஸ்பி சுதாகர், வேளாண் இணை இயக்குநர் கண்ணகி உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், விவசாயிகள் தரப்பில் தெரிவித்த கோரிக்கைகள் விபரம் வருமாறு:

திருவண்ணாமலை மாவட்டத்தில், பிஎம் கிசான் நிதி உதவி பெற தகுதியான விவசாயிகளுக்கு, விரைவில் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இத்திட்டத்தில் பயன் பெற்ற விவசாயிகள் பலருக்கு கடந்த சில மாதங்களாக உதவி தொகை நிறுத்தப்பட்டுள்ளது.திருவண்ணாமலை அருணாச்சலா சர்க்கரை ஆலை மற்றும் போளூர் தரணி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்று வழங்க வேண்டும்.

நாயுடுமங்கலம் மற்றும் கேட்டவரம்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் புதிதாக கட்டப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை விரைவில் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் விவசாயிகளுக்கு வழங்கிய விதைநெல் முளைப்புத் திறன் குறைவாக உள்ளது. போதுமான மகசூல் கிடைக்கவில்லை. எனவே, தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

நெல், நிலக்கடலை மற்றும் தக்கைப்பூண்டு விதைகளை வேளாண்மை துறையின் மூலம் பருவகாலத்தில் விவசாயிகளுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயிர் காப்பீடு தொடர்பாக முத்தரப்புக் கூட்டம் நடத்தி, தனிநபர் பயிற்சிதத்திற்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கிணறுகளுக்கு இதுவரை இழப்பீடு கிடைக்காமல் பல விவசாயிகள் தவிக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தாமதமின்றி கொள்முதல் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைத்தரகர்களின் தலையீடுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விவசாயிக்கு தெரிவித்தனர்.இந்நிலையில், உயர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயி ஒருவர் வேப்பிலை மாலை அணிந்தபடி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினர்.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தாமதமின்றி தொகையை வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: