*இடு பொருட்கள் தடையின்றி வழங்க வலியுறுத்தல்
வேதாரண்யம் : மேட்டூர் அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து, நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றிய பகுதியில் குறுவை சாகுபடிக்காக பாரம்பரிய முறைப்படி பூஜைகள் செய்து விவசாயிகள் நேரடி விதை நெல் விதைப்பு மற்றும் நாற்றாங்கல் அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்களின் பாசனத்திற்காக நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்கான பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காவிரி கடைமடை பகுதியான நாகை மாவட்டத்திற்கு இன்னும் பத்து நாட்களுக்குள் தண்ணீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதியில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு, பணியை பாரம்பரிய முறைப்படி துவங்கியுள்ளனர். மேலும் ஒரு சில முன்னோடி விவசாயிகள் அப்பகுதியில் உள்ள குளத்து நீர் மற்றும் ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்தி நாற்றாங்கால் தயார் செய்தும், ஒரு சில இடங்களில் நடவு பணியும் நடைபெற்று காவிரி தண்ணீர் வருவதற்காக காத்திருக்கின்றனர்.
குறுவை சாகுபடிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் விதை, உரம் உள்ளிட்டவைகளை போதிய அளவு இருப்பு வைத்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் விரைவில் காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேர்ந்து, குறுவை சாகுபடி எதிர்பார்ப்பதை விட நல்ல பலன் கொடுக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நேரடி நெல் விதைப்பிற்கு முன்னதாக பாரம்பரிய முறைப்படி சூரிய பகவானை வழிபட்டு இந்தாண்டு குறுவை சாகுபடி செழிப்பாக இருக்க வேண்டுமென விவசாயிகள் பிரார்த்தனை செய்தனர்.
50ஆயிரம் ஹெக்டேரில்…
கடந்த ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5ஆயிரம் ஹெக்டேரில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 50ஆயிரம் ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்படலாம் என எதிதுர்பார்க்கப்படுகிறது.
The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக காவிரி நீரை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.