கடலூர் : 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் பணியமர்த்தினால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என
ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் அனைத்து அலுவலர்கள், தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய் துறையினரால் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறுகையில், ‘‘இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன்”என ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியரால் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. 2025 ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் அற்ற தமிழகம் என்ற இலக்கை அடையும் பொருட்டு, மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு செயல்படும் மாவட்ட அளவிலான குழந்தை தொழிலாளர் தடுப்பு படை உறுப்பினர்களால் கடந்த 4 ஆண்டுகளில் 4661 கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 31 குழந்தை வளரிளம் பருவ தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர்.
குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக பொதுமக்கள் வேலையளிப்பவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஜூன் 2025 மாதம் முழுவதும் கடலூர் மாவட்டத்தில் துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் 14 மற்றும் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் பணியமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். மீறினால் வேலையளிப்பவருக்கு குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தால் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் மற்றும் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதமும் விதிக்கப்படும்.
குழந்தை தொழிலாளர் எவரேனும் பணிபுரிவது தெரியவந்தால் பொதுமக்கள் 1098 மற்றும் 155214 என்ற எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது, என்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், பயிற்சி ஆட்சியர் மாலதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவி, உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
The post வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் பணியமர்த்தினால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை appeared first on Dinakaran.