வேலூர், ஜூன் 14: வேலூர் மற்றும் காட்பாடியில் மொத்தம் ரூ.61.06 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு ரயில்வே மேம்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறை திருவண்ணாமலை தரக்கட்டுப்பாடு கோட்டப்பொறியாளர் சரவணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாங்காய் மண்டி அருகில் சென்னை-கிருஷ்ணகிரி சாலையில் வேலூர்-காட்பாடி ரயில் நிலையங்கள் இடையே லெவல் கிராசிங் எண் 128க்கு பதில் ரூ.37.63 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல் காட்பாடி-லத்தேரி ரயில் நிலையங்கள் இடையே ஜாப்ராபேட்டையில் ரயில்வே லெவல் கிராசிங் எண் 55க்கு பதிலாக புதிய ரயில்வே மேம்பாலம் ரூ.23.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
இவ்விரு ரயில்வே மேம்பால பணிகளில் ஜாப்ராபேட்டையில் நடந்து வரும் பணி நவம்பர் மாதத்திலும், வேலூர் மாங்காய் மண்டி அருகில் நடந்து வரும் ரயில்வே மேம்பால பணி அடுத்த ஆண்டு துவக்கத்திலும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இரண்டு ரயில்வே மேம்பால பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை திருவண்ணாமலை தரக்கட்டுப்பாடு கோட்டப்பொறியாளர் சரவணன் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறும் உத்தரவிட்டார். ஆய்வின்போது, வேலூர் திட்டங்கள் உட் கோட்ட பொறியாளர் ஞானசேகரன், உதவி பொறியாளர்கள் அசோக்குமார், விக்னேஷ், சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
The post ரூ.61.06 கோடி செலவில் ரயில்வே மேம்பால பணிகள் தீவிரம் திருவண்ணாமலை தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் ஆய்வு வேலூர் மற்றும் காட்பாடியில் appeared first on Dinakaran.