திருக்கழுக்குன்றம், ஜூன் 14: வாயலூர் கிராமத்தில் பல வாரங்களாக நிறுத்தப்பட்ட சாலைப்பணியால் மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறனர். எனவே, இப்பணியினை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாயலூர் ஊராட்சியில் அடங்கிய காரை திட்டு, ஐந்துகாணி, இருளர் குடியிருப்பு, உய்யாலிகுப்பம் ஆகிய பகுதிகளின் வழியாக கிழக்கு கடற்கரையை இணைக்கும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள பிரதான சாலை ஒன்று உள்ளது. இப்பகுதிகளில் வசிக்கின்ற சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் இந்த சாலையைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்து காணப்பட்டதால், இச்சாலையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். இந்த, பழுதடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையின்படி, புதிய சாலை அமைக்க ரூ.1 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனாலும் பணிகள் குறித்த நேரத்தில் ஆரம்பிக்காததால், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்தனர். இதனையடுத்து, தாமதமாக கடந்த மாதம் சாலை அமைக்கும் பணி ஆரம்பித்தது.
ஆனால், வெறும் ஜல்லிக்கற்களை மட்டும் கொட்டி, களைத்துவிட்டு ஆரம்ப வேகத்திலேயே பணி நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. இதனால், கொட்டி களைத்து விட்ட ஜல்லிக்கற்கள் கூர்மையாக உள்ளதால், அதில் நடந்து செல்பவர்களின் கால்களை பதம் பார்ப்பது மட்டுமின்றி, வாகனங்களின் டயர்களையும் கிழித்து விடுவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஏற்கெனவே, தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பணி மீண்டும் நிறுத்தம் செய்யப்பட்டு கிடப்பது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு நிறுத்தப்பட்ட சாலைப்போடும் பணியை உடனடியாக முடிக்க வேண்டுமென்று சம்மந்தப்ட்ட அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வாயலூர் கிராமத்தில் கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி: மாணவர்கள், பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.