திருவள்ளூர், ஜூன் 14: திருவள்ளூர் அரசு மருத்துவனையிலிருந்து தலைமை தபால் நிலையம் வரை உள்ள கால்வாய்களில் இருந்த அடைப்பை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையால் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனை அருகிலிருந்து தலைமை தபால் நிலையம் வரை செல்லும் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகார்கள் தெரிவித்தனர். இதனையடுத்து பருவ மழை தொடங்க இருப்பதால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருவள்ளூர் மாவட்ட நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் கட்டுமானத் துறை கோட்டப் பொறியாளர் டி.சிற்றரசு மேற்பார்வையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் கால்வாய் பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அதன்படி நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் கட்டுமானத் துறை உதவி கோட்டப் பொறியாளர் கே.மதியழகன் மேற்பார்வையில் உதவி பொறியாளர்கள் அரவிந்தன், மகாலிங்கம் முன்னிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகிலிருந்து தலைமை தபால் நிலையம் வரை உள்ள கால்வாய்களில் இருந்த அடைப்பை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணைந்து இந்த பராமரிக்கும் பணியினை மேற்கொண்டு வருவதால் வரும் மழைக்காலத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் கட்டுமானத் துறை உதவி கோட்டப் பொறியாளர் கே.மதியழகன் தெரிவித்தார்.
The post திருவள்ளூர் அரசு மருத்துவமனை – தலைமை தபால் நிலையம் வரை கால்வாய் சீரமைப்பு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.