திருவள்ளூர், ஜூன் 14: கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில் ரூ.1423.50 கோடி மதிப்பில் அமைக்கப்படும் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா பணிகளை துறைமுக பொறுப்பு கழக தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், மப்பேடு ஊராட்சியில் ஒன்றிய அரசின் பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் 180.69 ஏக்கர் பரப்பளவில் ரூ. 1423.50 கோடி மதிப்பீட்டில் மப்பேடு பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா பணிகள் முடிவீச்சில் நடந்து வருகிறது. இதில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், நேஷனல் ஹைவே லாஜிஸ்டிக்ஸ், மேலாண்மை நிறுவனம் மற்றும் சென்னை துறைமுகம் ஆகியவை இணைந்து பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் பூங்காவை அமைக்க 2021ல் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா பணிகளை சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர் சுனில் பாலிவால், துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இந்த ஆய்வில், டிட்டோ நிர்வாக இயக்குனர் சந்தீப் நந்தூரி, சிட்கோ நிர்வாக இயக்குநர் செந்தில்ராஜ், மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திருவள்ளூர் வட்டாட்சியர் ரஜினிகாந்த் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
The post மப்பேட்டில் ரூ.1423.50 கோடியில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா: துறைமுக தலைவர், துணைத்தலைவர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.