மீனம்பாக்கம், ஜூன் 14: அந்தமானில் இருந்து நேற்று காலை 10.35 மணிக்கு புறப்பட வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் தனியார் பயணிகள் விமானம், பகல் 12.55 மணிக்கு சென்னைக்கு வந்து சேரும். அதன்பின்னர் அந்த ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் இருந்து பகல் 1.35 மணிக்கு, மும்பைக்கு புறப்பட்டுச் செல்லும். ஆனால், நேற்று காலை அந்தமானில் இருந்து புறப்பட வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, அந்தமானில் இருந்து புறப்படாமல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டது. பிற்பகல் வரை இயந்திர கோளாறு சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து அந்தமான்- சென்னை ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ரத்து என்று அறிவிக்கப்பட்டது.
இதேபோல், சென்னையில் இருந்து மும்பைக்கு நேற்று பகல் 1.35 மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், நேற்று ரத்து என்று அறிவிக்கப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த சுமார் 130 பயணிகள் மாற்று விமானங்களில், மும்பைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதேபோல் அந்தமானில் இருந்து சென்னை வரவேண்டிய பயணிகளுக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுவதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக, அந்தமான்- சென்னை, சென்னை- மும்பை ஆகிய 2 தனியார் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அதில் பயணிக்க இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
The post இயந்திர கோளாறு காரணமாக அந்தமான், மும்பை விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.