விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டார். விபத்து எப்படி நடந்தது என்பதை அறிய கருப்பு பெட்டியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. நேற்று மாலை 5 மணி அளவில் பிஜே மருத்துவகல்லூரி மாணவர் விடுதியின் மேற்கூரையில் இருந்து கருப்பு பெட்டி மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில், ஆய்வகத்துக்கு அனுப்பப்பட உள்ளது. இதன்பிறகே, விபத்துக்கான உண்மையான காரணம் தெரியும் என்று விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர்.
இந்த விபத்து குறித்து இந்தியாவின் விமான விபத்து விசாரணை அமைப்பு (ஏஏஐபி) முதன்மை விசாரணையை மேற்கொண்டு வருகிறது. மேலும் இங்கிலாந்தின் விமான விபத்து விசாரணைப் பிரிவு மற்றும் அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் சார்பிலும் விசாரணை நடத்த குழுவினர் இந்தியா வந்துள்ளனர். இதற்கிடையே கோரமான விபத்து என்பதால் பலரது உடல்கள் கருகிய நிலையில் காணப்படுவதால் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணும்பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுவரை 50 உடல்களுக்கு பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு டிஎன்ஏ மாதிரிகள் அடிப்படையில் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
என்ஐஏ ஆய்வு: தேசிய புலனாய்வு அமைப்பின் குழுவினர் நேற்று அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். இந்த குழுவுடன் மற்ற ஒன்றிய விசாரணைக்குழு அதிகாரிகளும் இருந்தனர். மேலும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள விமான விபத்து புலனாய்வுப் பணியகம் நேற்று விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. விமான விபத்து நடந்த இடத்தில் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை நேற்று காலையில் முடிவடைந்ததாக துணைத் தலைமை தீயணைப்பு அதிகாரி துருமித் காந்தி தெரிவித்தார். இதை ெதாடர்ந்து அகமதாபாத் நகர காவல்துறை விமான விபத்து மரணம் தொடர்பான வழக்கைப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அகமதாபாத் விமான விபத்து குறித்து டாடா குழும தலைவர் என். சந்திரசேகரன் கூறுகையில், ‘ஏர் இந்தியாவைபொறுத்தவரையில் விமான விபத்து குறித்த அதன் தகவல் தொடர்புகளில் வெளிப்படையாக இருக்கும். உண்மைகளை நாங்கள் சரிபார்த்தவுடன், இந்த துயரம் எவ்வாறு நடந்தது என்பது பற்றிய எங்கள் தகவல்தொடர்புகளில் நாங்கள் வெளிப்படையாக இருப்போம். எங்கள் பொறுப்புகளிலிருந்து, சரியானதைச் செய்வதிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம். இந்த இழப்பை நாங்கள் சுமப்போம். நாங்கள் மறக்க மாட்டோம்’ என்று தெரிவித்தார்.
* பிரிட்டிஷ் உயர் ஆணையர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
அகமதாபாத் விமான விபத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 53 பேர் பலியாகி விட்டது குறித்து இந்தியாவுக்கான பிரிட்டிஷ் உயர் ஆணையர் லிண்டி கேமரூன் நேற்று அகமதாபாத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார். அப்போது ஏர் இந்தியா விமான விபத்து குறித்த உண்மைகளை அறிய இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
அகமதாபாத் விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த விமானிகள், பயணிகள் உள்பட 241 பேர் பலியாகி விட்டாலும் 11ஏ என்ற இருக்கையில் பயணித்த விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்ற ஒற்றை பயணி மட்டும் பெரிய அளவிலான காயம் இல்லாமல் உயிர் தப்பி உள்ளார். யாருமே பிழைக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்ட நிலையில் ரமேஷ் மட்டும் பிழைத்தது, அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. பிரதமர் மோடி நேற்று ரமேசை சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் தான் தப்பித்தது குறித்து ரமேஷ் கூறியதாவது: விமானம் புறப்பட்ட உடனேயே அனைத்தும் சிக்கிக் கொண்டது போல் நாங்கள் உணர்ந்தோம். விமானத்தில் பச்சை மற்றும் வெள்ளை விளக்குகள் இயக்கப்பட்டன. புறப்படுவதற்காக விமானத்தின் வேகம் அதிகரிக்கப்பட்டதாக நான் நினைத்தேன். அது கட்டிடத்தில் மோதியது. இதெல்லாம் என் கண் முன்னே நடந்தது. நான் அமர்ந்திருந்த இடம் விமானம் மோதிய விடுதி பக்கத்தில் இல்லை. அது விடுதியின் தரைத் தளம். மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் நான் அமர்ந்திருந்த இடத்தில் அந்தப் பகுதி தரைத் தளத்தில் விழுந்தது.
நான் வெளியே விழுந்தேன். என்னைச்சுற்றிலும் சடலங்கள் கிடந்தன. எதிர் பக்கத்தில் ஒரு கட்டிடச் சுவர் இருந்தது, விமானம் அந்தப் பக்கத்தில் முழுவதுமாக மோதியிருந்தது. அதனால் அந்தப் பக்கத்திலிருந்து யாரும் வெளியே வர முடியவில்லை. பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இருந்து நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. தீ விபத்து ஏற்பட்டபோது, என் இடது கையும் எரிந்தது. பின்னர் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி என்னிடம் கேட்டார். நான் எப்படி காப்பாற்றப்பட்டேன் என்று என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால் நான் கண்களைத் திறந்தபோது, நான் உயிருடன் இருந்தேன். நான் எப்படி அற்புதமாக உயிர் தப்பினேன் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை’ என்றார்.
முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி 1206 என்ற எண்ணை தனது அதிர்ஷ்ட எண்ணாக கருதிய நிலையில் அதே தேதியில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். குஜராத் மாநிலம், அகமதபாத்தில் டந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜவின் மூத்த தலைவருமான விஜய் ரூபானியும் ஒருவர். இவரது மகள் லண்டனில் வசித்து வருகிறார். இவரது மனைவி அஞ்சலிபென்னும் மகளுடன் இருக்கிறார். இந்நிலையில் தனது மகளை பார்ப்பதற்காக லண்டன் செல்வதற்காக விமானத்தில் விஜய் பயணித்தார். துரதிஷ்டவசமாக விமான விபத்தில் அவர் உயிரிழந்தார்.
விஜய் ரூபானி 1206 என்ற எண்ணை தன்னுடைய அதிர்ஷ்ட எண்ணாக கருதியுள்ளார். இவரது காரின் பதிவு எண் 1206 ஆகும். இதேபோல் இவரது இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணும் 1206 ஆக இருந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 2டி இருக்கை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும், பயணிகள் பட்டியலின் 12வது பெயராக ரூபானியின் பெயர் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் அந்த எண் இப்போது அவரது இறுதி பயணத்தின் தேதியாக 12/06 (ஜூன் 12ம் தேதி) மாறியுள்ளது.
The post அகமதாபாத் விபத்தில் 265 பேர் பலி விமானத்தின் கருப்பு பெட்டி சிக்கியது: கல்லூரி விடுதி மாடியில் இருந்து மீட்பு appeared first on Dinakaran.