திருக்கோவிலூர், ஜூன் 14: திருக்கோவிலூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் ரங்கராஜன் (எ) விக்னேஷ் (17). இவர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு 12ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள காட்டில் விறகு வெட்டி எடுத்து வருவதாக வீட்டில் கூறி சென்றுள்ளார். பின்னர் மாலை வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் பக்கத்து ஊரான நாயனூர் கிராமத்தை சேர்ந்த நாராயணன் (64) என்பவர் நேற்று காலை விறகு வெட்ட காட்டுப்பகுதிக்கு சென்றபோது விக்னேஷ் மரத்தில் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். இதனை பார்த்த நாராயணன் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலறிந்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு முன்பாக விக்னேஷின் பிரேதத்தை வைத்து அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார், விக்னேஷின் உறவினர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து அரகண்டநல்லூர் போலீசார், விக்னேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த திடீர் சாலை மறியலால் திருக்கோவிலூர்-வேட்டவலம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post திருக்கோவிலூர் அருகே 17 வயது சிறுவன் மர்ம சாவு appeared first on Dinakaran.