உழவர்களுக்கு பச்சைத்துரோகம் செய்துவிட்டு பகல் வேஷம் போடுகிறார் எடப்பாடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி

சென்னை: உழவர்களுக்கு பச்சைத் துரோகம் செய்துவிட்டு பகல் வேஷம் போடுகிறார் எடப்பாடி என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தலைவாசலில் 1100 ஏக்கர் நிலத்தில் சுமார் ரூ.1,025 கோடி மதிப்பீட்டில், மிகப் பெரிய கால்நடைப் பூங்காவை துவக்கி வைத்தது பற்றி பழனிசாமி பெருமை அடிக்கிறார். நான்கு ஆண்டுகள் அவர்தான் முதல்வராக இருந்தார். நான்கு ஆண்டுகள் வாரிச் சுருட்டுவதற்கும் ஒன்றிய பாஜ அரசுக்கு பாதம் தாங்கியாகவும் சேவை செய்யவே அவருக்கு நேரம் போதவில்லை.

2021 சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில் ஓட்டுக்காக அவசர அவசரமாகத் திட்டங்களைத் தொடங்கி வைத்தவர் பழனிசாமி. தேர்தலுக்கு 2 மாதம் முன்பு பழனிசாமி கொண்டு வந்த திட்டங்கள் அத்தனையும் தேர்தல் காலப் புஸ்வாணங்கள். அந்த வரிசையில் தான் தலைவாசலில் கால்நடைப் பூங்காவை உருவாக்கினார். அது நிறைவடையும் முன்பே அதில் ஒரு பகுதியை 2021ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி திறந்து வைத்தார் பழனிசாமி. அதாவது 2021 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நாளுக்கு நான்கு தினங்களுக்கு முன்பு அந்தத் திட்டத்தை அவசரகதியில் கொண்டு வந்தார். தான் கொண்டு வந்த திட்டம் என தம்பட்டம் அடிக்கும் பழனிசாமி, அந்த திட்டத்தை திமுக தடுத்து விட்டது எனவும் சொல்கிறார். இந்த முரண்பாடுதான் பச்சைப்பொய் பழனிசாமியை அம்பலப்படுத்துகிறது.

விவசாயிகளை வஞ்சிக்கும் மூன்று வேளாண்மை சட்டங்களைக் கொண்டு வந்த போது அதனை ஆதரித்து தினமும் கதாகாலட்சேபம் நடத்தியவர் பழனிசாமி. உழவர்களின் துரோகி யார் என்பதை விவசாயிகள் நன்கு அறிவர். உழவர்களுக்குப் பச்சைத்துரோகம் செய்துவிட்டு பகல்வேஷம் போடுகிறார். டெல்டா விவசாயிகளின் போராட்டத்தாலும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நெருக்கடியாலும் டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துவிட்டு மறுபுறம் ஒன்றிய பாஜ அரசுக்குப் பயந்து அந்த பரிந்துரையைக் கூட ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல் இருந்தது இதே கோழை பழனிசாமிதான்.

அதிமுக ஆட்சியில் காவிரி மேலாண்மை ஆணையம், நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டு காவிரியில் நமது உரிமை பாதுகாக்கப்பட்டது எனச் சொல்லியிருக்கிறார் பழனிசாமி. ‘ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்’ என்று 2018 பிப்ரவரியில் தீர்ப்பு சொன்னது உச்ச நீதிமன்றம். ஸ்கீம் என்றால் என்ன என விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு மனு செய்து, கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்காக நாடகம் நடத்தியது. அதற்கு பழனிசாமி அரசும் பக்க வாத்தியம் வாசித்தது. அன்றைக்கு எஜமான விசுவாசத்தைக் காட்டிய கோழை பழனிசாமியா காவிரியைப் பற்றிப் பேசுவது? வரும் தேர்தலில் போலி விவசாயி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post உழவர்களுக்கு பச்சைத்துரோகம் செய்துவிட்டு பகல் வேஷம் போடுகிறார் எடப்பாடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: