நேற்று மதியம் நடந்த அகமதாபாத் விமான விபத்து; 1.25 லட்சம் லிட்டர் எரிபொருளும் எரிய உதவிய வெயில்: மீட்புப் பணிகளில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து பரபரப்பு தகவல்

அகமதாபாத்: நேற்று மதியம் கடுமையான வெயிலுக்கு மத்தியில் நடந்த அகமதாபாத் விமான விபத்தின் போது விமானத்தில் இருந்த 1.25 லட்சம் லிட்டர் எரிபொருளை தீப்பற்றி எரிந்ததால், மீட்புப் பணிகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று மதியம் புறப்பட்ட 30 வினாடிகளில் மேகானி நகர் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்து நொறுங்கியது; இதில் 241 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் 1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் (1,25,000 லிட்டர்) இருந்ததாகவும், விபத்தின் போது இது எரிபொரு வெடித்து சிதறியதாகவும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த எரிபொருள், 6,874 கிமீ தொலைவு கொண்ட அகமதாபாத் – லண்டன் பயணத்திற்கு தேவையான அளவாக நிரப்பப்பட்டதாகவும், ஒரு மணி நேரத்திற்கு சுமார் 10,000 லிட்டர் செலவாகும் வகையில் நிரப்பப்பட்டிருந்தது. விமானம் விழுந்த உடனேயே இந்த எரிபொருள் தீப்பிடித்து, பயங்கரமாக வெடித்து சிதறியது.

இதனால் மருத்துவக் கல்லூரி விடுதியின் உணவு அரங்கு உட்பட பல பகுதிகள் தீயில் கருகின. இந்த வெடிப்பு, விமானத்தின் முன்பகுதி மற்றும் வால்பகுதி தவிர மற்ற பகுதிகளை முற்றிலும் சாம்பலாக்கியது; மேலும் கரும்புகை மண்டலம் அகமதாபாத் நகரின் பல பகுதிகளில் பரவியது. 1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் தீப்பற்றி எரிந்ததால், விபத்தின் தீவிரத்தை பன்மடங்கு அதிகரித்தது. விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதால், தரையில் இருந்தவர்களும் பாதிக்கப்பட்டனர்; சுமார் 60 பேர் படுகாயமடைந்தனர். எரிபொருள் வெடித்ததால் ஏற்பட்ட தீயை அணைப்பது மிகவும் சவாலாக இருந்தது. இதனால் மீட்புப் பணிகள் பல மணி நேரம் தாமதமாகின. இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு படை, உள்ளூர் காவல்துறை இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஆனால் எரிபொருளின் உயர் வெப்பநிலை காரணமாக உயிர் பிழைத்தவர்களை மீட்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருந்தது.

ஒரே ஒரு பயணியான விஸ்வாஸ்குமார் ரமேஷ் (இருக்கை 11A), அவசர வெளியேறு கதவுக்கு அருகில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். மீட்கப்பட்ட உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் பிரேத கிடங்கில் குளிரூட்டப்பட்ட அறைகளில் பராமரிக்கப்படுகின்றன; அங்கு டிஎன்ஏ பரிசோதனைகள் மூலம் அடையாளம் காணப்படுகின்றன. இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், ‘மதிய வேளையில் விபத்து நடந்துள்ளது; உயர் வெப்பநிலை மற்றும் எரிபொருள் வெடிப்பு காரணமாக யாரையும் உயிருடன் மீட்க முடியவில்லை’ என்று கூறினார். விமான விபத்து குறித்து விமான விபத்து விசாரணை அமைப்பு, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க விசாரணை அமைப்புகளின் ஆதரவுடன் ஆய்வு செய்து வருகிறது.

எரிபொருள் வெடிப்பு விபத்தின் தீவிரத்தை அதிகரித்தாலும், விபத்துக்கான முதன்மை காரணங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இரட்டை இயந்திர தோல்வி, பறவை மோதல் அல்லது விமான பராமரிப்பு குறைபாடு போன்றவை சாத்தியமான காரணங்களாக பரிசீலிக்கப்படுகின்றன. விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது; இதன் முடிவுகள் 10-15 நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் மேலாண்மை மற்றும் விமான பராமரிப்பு நடைமுறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தை இந்த விபத்து வலியுறுத்துகிறது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மேற்பார்வையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

 

The post நேற்று மதியம் நடந்த அகமதாபாத் விமான விபத்து; 1.25 லட்சம் லிட்டர் எரிபொருளும் எரிய உதவிய வெயில்: மீட்புப் பணிகளில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: