நன்றி குங்குமம் தோழி
“டீச்சர் நாங்களும் இதேபோல கதைகள் எழுதி புத்தகம் வெளியிடலாமா..?” என்கிற மூன்றாம் வகுப்பு மாணவர்களின் ஆர்வமான கேள்விதான் அவர்கள் எழுதிய கதைகளை புத்தகமாக வெளியிடத் தூண்டியது’’ என்கிறார் ஆசிரியை பூர்ணிமா. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியத்தில் உள்ள கன்னிகாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர், தன் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருகிறார்.
“பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை தாண்டி கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களும் மேம்படுத்திக்கொள்ள வேண்டிய திறன்களும் நிறைய உள்ளன. தமிழ் ஆசிரியராக நான் பணியாற்றும் பள்ளியில் என் மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டுவர வேண்டுமென்கிற முனைப்புடன் இருக்கிறேன்.
எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த அரசுப் பள்ளிகளில் ‘புத்தக பூங்கொத்து’ எனும் திட்டம் சில வருடங்களுக்கு முன்பே கொண்டுவரப்பட்டது என்றாலும் கொரோனா காலத்திற்கு பின் இத்திட்டம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. ‘புத்தக பூங்கொத்து’ திட்டத்தின் மூலம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நூலகம் அமைக்கப்பட்டிருக்கும். எங்க பள்ளியிலும் ஒரு நூலகம் உள்ளது. அதில் நிறைய சிறார் இலக்கிய நூல்கள் வைக்கப்பட்டிருக்கும். மாணவர்கள் அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம்.
நான் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பாசிரியராக இருப்பதால், என் வகுப்பு மாணவர்களுக்கு நடைமுறை வழக்கமாக புத்தக வாசிப்பை ஏற்படுத்த தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிவிடுவேன். அது ‘கதை நேரம்’ என்பதால், அந்த நேரத்தில் கதையை சொல்வேன். கதை சொல்லும் முன்பே நான் வாசித்து விடுவதால், மாணவர்களுக்கு அதனை உயிரோட்டமாக சொல்வேன். அந்த கதைகளை அவர்களே தேர்ந்தெடுத்து வருவார்கள்.
நான் கதையினை சொல்ல ெசால்ல அதை சுவாரஸ்யமாக ரசிப்பார்கள், உடன் கலந்துரையாடுவார்கள். கதை புத்தகங்கள் மட்டுமின்றி நான் சிறுவயதில் படித்தும், கேட்டும் தெரிந்துகொண்ட கதைகளையும் சொல்வேன். தினமும் கதை நேரத்திற்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்கிவிடுவேன். ஒரு நாள் இரண்டு மாணவர்கள் என்னிடம், ‘‘டீச்சர், இதேபோல நாங்களும் கதை எழுதி, அதை புத்தகமா போடலாமா?’’ என கேட்டனர். ஆனால் அடுத்த நொடியே அவர்கள், ‘‘பணம் நிறைய செலவாகுமா?’’ என்று கேட்டனர். மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பணம், செலவு குறித்து யோசிக்கிறார்கள் என்று நினைக்கும் போது ஆச்சர்யமாக இருந்தது.
ேமலும் இவர்கள் புத்தக வாசிப்பினை கேட்பது மட்டுமில்லாமல், சிறு வயதில் கதை எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை கண்டு ரொம்பவே பெருமைப்பட்டேன். உடனே அவர்களிடம், ‘‘சரி, நீங்க கதை எழுதுவதென்றால் நான் அதை புத்தகமாக வெளியிடத் தயாராக இருக்கிறேன்’’ என்றேன். மீண்டும் அவர்கள், ‘‘அதுக்குதான் பணம் செலவாகுமே டீச்சர்’’ என்றனர். பணச் செலவுகளை நான் பார்த்துக்கொள்வேன் என்பதை அவர்களுக்கு உறுதியளித்தேன்’’ என்றவர், மூன்றாம் வகுப்பு மாணவர்களின் கதை புத்தகங்கள் உருவான விதத்தை பகிர்ந்து கொண்டார்.
“மாணவர்கள் எழுதும் கதைகளை புத்தகமாக வெளியிடலாம் என்று முடிவு செய்த பின்னர், தினமும் அதற்கான செயலில் ஈடுபடத் தொடங்கினோம். முதலில் பறவைகள், விலங்குகளை வைத்து கதை எழுதலாம் என்று திட்டமிட்டு, அதில் அவர்களுக்குப் பிடித்த ஒன்றை தேர்ந்தெடுத்து அவர்களே கதாபாத்திரமாக மாறி கதை சொல்வார்கள். மூன்றாம் வகுப்பு மாணவர்கள்
கதை எழுதத் தொடங்கியதில் முதலில் வெளியிடப்பட்டது ‘திராட்சை தோட்டம்’ என்ற கதை தொகுப்பு.
அதில் மாணவி ஒருவர் மனதளவில் பாதிக்கப்பட்ட விஷயங்களை கதை மூலமாக தெரியப்படுத்தியிருந்தார். மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறு குழந்தைகளின் கதையில் பெரிதாக என்ன இருந்துவிடப் போகிறதென்று நாம் நினைக்கலாம். ஆனால் வீடும் சமூகமும் அந்த மாணவிக்குள் சில தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
அதுவே அவளின் சிந்தனையாக வெளிப்பட்டது. அவர்களின் கதைகளை ஆழமாக உற்றுநோக்கினால் ஒவ்வொரு கதைக்குள்ளும் மாணவர்கள் தங்களையே மையமாக வைத்திருக்கிறார்கள் என்பது புரியும். ‘திராட்சை தோட்டம்’ புத்தகத்தை தொடர்ந்து ‘ஐஸ் வண்டி’, ‘ஸ்கூல் போன யானைக்குட்டி’, ‘பரிசு வாங்கிய பனிக்கரடி’, ‘லெமன் ஜூஸ் குடிச்ச முயல்’ என 5 புத்தகங்களை வெளியிட்டுள்ளோம். ஒவ்வொரு கதை தொகுப்பிலும் 10 முதல் 12 மாணவர்களின் கதைகள் அடங்கியிருக்கும்.
குழந்தைகளின் உலகத்தில் எண்ணற்ற கற்பனைகள் இருக்கும். அவர்கள் கதைகளை எழுத முற்பட்டாலும் சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து கோர்வையாக கதையை எழுத்து வடிவில் கொண்டுவருவது சற்று சிரமமாக இருக்கும். எனவே அவர்கள் சொல்ல விரும்பும் கதையை பேச்சு வழக்காக அப்படியே சொல்வார்கள். அவற்றை மேம்படுத்துவதற்கு நான் சில குறிப்புகள் கொடுப்பேன். அதை திருத்திக்கொண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்ட கதையை என்னிடம் சொல்வார்கள்.
இவ்வாறு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒவ்வொரு மாணவரும் சொல்லும் கதைகளை நான் என் செல்போனில் பதிவு செய்துகொள்வேன். பின்னர் அதை காகிதத்தில் எழுதுவேன். இதில் கையெழுத்து மட்டுமே என்னுடையது… கதைகள் முற்றிலும் மாணவர்களுடையது. அவர்கள் குரல் வடிவில் சொன்னதை நான் எழுத்து வடிவில் கொடுத்திருக்கிறேன் அவ்வளவு தான். கதையின் எழுத்து நடையும் பேச்சு வழக்கில் அவர்கள் சொல்லும் விதத்திலேயே மழலை மொழியிலேயே கொடுத்துள்ளேன். கதையை படிக்கும் போது மாணவர்களே உங்கள் எதிரில் வந்து தங்கள் கதையை சொல்லும் உணர்வு கிடைக்கும்’’ என்றவர், அதனை புத்தகமாக வெளியிடுவதில் சில சிரமங்களை சந்தித்துள்ளார்.
‘‘புத்தக வெளியீட்டிற்காக பதிப்பகங்களை நாடிய போது, பதிப்பகத்தின் ப்ராண்ட் பெயர்களில் வெளியிடுவதற்கு அதிக பணம் செலவாகும் எனத் தெரிந்தது. எனவே என் மகன்களின் பெயர்களை கொண்டு ‘மணிமோகன்’ என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றை தொடங்கினேன். அதில் புத்தகங்களை வெளியிட்டேன். இதில் எந்த லாப நோக்கமும் கிடையாது. ஒவ்வொரு புத்தக அட்டையிலும் கதைகளை எழுதிய மாணவர்களின் பெயர் மட்டுமின்றி அவர்களின் புகைப்படங்களும் இடம் பெற்றிருக்கும். அவ்வப்போது நடைபெறும் புத்தக கண்காட்சிகளில் வைத்து புத்தக வெளியீடு செய்வேன். சில புத்தக கடைகளிலும் மாணவர்களின் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன” என்றவர் எதிர்கால திட்டங்களையும் பகிர்கிறார்.
‘‘அரசுப் பள்ளி மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டு வந்திருக்கிறீர்கள் என பலரும் வாழ்த்தினார்கள். எழுத்தாளர்களான மருதன், நிவேதிதா லூயிஸ் ஆகியோர் புத்தகங்களுக்கு வாழ்த்துரை எழுதியிருக்கின்றனர். இதையே என் மாணவர்களின் திறமைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன். மூன்றாம் வகுப்பு மாணவர்களின் கதைகளிலும் ஆழமான அர்த்தங்கள் இருக்கிறதென்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். யாருக்கு தெரியும் கதை எழுதிய என் மாணவர்கள் எதிர்காலத்தில் ஒரு எழுத்தாளராகவோ, திரைப்பட இயக்குநராகவோ உருவாகலாம். இவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்திறமை இருக்கிறது.
அவர்களின் எழுதும் திறனை மேம்படுத்த ‘கதை எழுதுவது எப்படி’ என்ற தலைப்பில் சிறார் எழுத்தாளர்களை வைத்து ‘கதை திருவிழா’ ஒன்றை நடத்த திட்டமிட்டிருக்கிறேன். சிலர் இதெல்லாம் வேண்டாத வேலை என்றனர். ஆனால் மாணவர்களுக்கு நான் ஆசிரியராக பணியாற்றுவதால்தான் எனக்கு வருமானம் கிடைக்கிறது. எனவே அவர்களை ஊக்கப்படுத்த இதை செய்வதில் எனக்கு பெருமைதான். ‘‘மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பினை கொடுக்கிறீர்கள், நாங்களும் புத்தகம் எழுதலாமா ? எங்களுக்கும் வாய்ப்பு தாருங்கள்’’ என மற்ற வகுப்பு மாணவர்கள் என்னிடம் அன்புடன் கேட்கின்றனர். நிச்சயம் பள்ளியில் எல்லா மாணவர்களுக்கும் வாசிப்பு மற்றும் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்துவேன்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்
The post மாணவர்களை சிறார் எழுத்தாளர்களாக உருவாக்கும் தமிழ் ஆசிரியை! appeared first on Dinakaran.