வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து; ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவதே நமது லட்சிய இலக்கு: இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் அறிக்கை

சென்னை: இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு,ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவதே நமது லட்சிய இலக்கு என்று இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் கூறியுள்ளார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.லெனின் பிரசாத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த மூன்று ஆண்டுகளாக என்னோடு பயணித்த சக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் பல கட்டப் போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள், பல நிகழ்ச்சிகள் என அயராமல் பாடுபட்ட அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு பக்க பலமாக இருந்த அனைத்து தலைவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது தலைமையில் இந்த மூன்றாண்டுகளில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு என்னால் மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். நாம் அனைவரும் பயணித்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி இன்றுடன் முடிந்தாலும் கூட அதன் மேல் இருக்கின்ற அன்பும் பற்றும் என்றும் குறையாது. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இளம் தலைவர் ராகுல் காந்தியின் கரங்களை வலுப்படுத்தி அவரை பிரதமர் ஆக்குவதே நமது லட்சிய இலக்காக கொண்டு தொடர்ந்து பயணிப்போம். புதிய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

The post வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து; ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவதே நமது லட்சிய இலக்கு: இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: