2வது நாளிலும் பவுலர்கள் ஆதிக்கம்; பரபரப்பான கட்டத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்: சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்?

லண்டன்: 2023-25ம் ஆண்டுக்கான ஐசிசி 3வதுடெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் பைனல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-தென்ஆப்ரிக்கா அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக பியூ வெப்ஸ்டர் 72. ஸ்டீவன் ஸ்மித் 66ரன் அடித்தனர். தென்ஆப்ரிக்கா பவுலிங்கில் ரபாடா 5 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்ரிக்கா முதல் நாள்ஆட்டநேர முடிவில் 22 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 43ரன் எடுத்திருந்தது. 2வதுநாளான நேற்று கேப்டன் பவுமா 36, டேவிட் பெடிங்காம் 46 ரன் அடித்தனர். 57.1 ஓவரில் 138 ரன்னுக்கு தென்ஆப்ரிக்கா ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய பவுலிங்கில் கேப்டன் கம்மின்ஸ் 6 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 74 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் கவாஜா 6, கேமரூன் கிரீன் 0 , லாபுசாக்னே 22, ஸ்டீவன் ஸ்மித் 13, டிராவிஸ் ஹெட் , பியூ வெப்ஸ்டர் தலா 9 , கம்மின்ஸ் 6 ரன்னில் அவுட் ஆகினர். 73 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்த நிலையில்,அலெக்ஸ் கோரி -ஸ்டார்க் 8வது விக்கெட்டிற்கு 61ரன் எடுத்து சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். கேரி 43 ரன்னில் அவுட் ஆனார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 8விக்கெட் இழப்பிற்கு 144ரன் எடுத்திருந்தது. தென்ஆப்ரிக்க பவுலிங்கில் ரபாடா, நிகிடி தலா 3 விக்கெட் எடுத்தனர்.

இன்னும் 2 விக்கெட் கைவசம் இருக்க ஆஸ்திரேலியா 218ரன் முன்னிலை பெற்றுள்ளது. 3வதுநாளான இன்று தென்ஆப்ரிக்கா விரைவில் ஆல்அவுட் செய்த பின்னர் இலக்கை எட்டிப்பிடிக்க போராடும். 2வதுநாளான நேற்றும் 14 விக்கெட் சரிந்தது. பிட்ச் பவுலர்களுக்கு சாதகமாக இருப்பதால் ஆட்டம் பரபரப்பான நிலையை அடைந்துள்ளது. 3வதுநாளான இன்றே ஆட்டத்தின் முடிவு கிடைக்கும் என தெரிகிறது. இதனால் ஆஸி.யை வீழ்த்தி தென்ஆப்ரிக்கா முதன்முறையாக ஐசிசி பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

 

The post 2வது நாளிலும் பவுலர்கள் ஆதிக்கம்; பரபரப்பான கட்டத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்: சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்? appeared first on Dinakaran.

Related Stories: