விழுப்புரம் : என் மூச்சு காற்று அடங்கும் வரை பா.ம.க. தலைவர் பதவியை அன்புமணிக்கு வழங்க மாட்டேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “2026 தேர்தலுக்கு பிறகு கொடுத்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அன்புமணியின் செயல்பாடுகளை பார்க்கும் போது என் மூச்சுக்காற்று அடங்கும் வரை தலைவர் பதவியை வழங்க மாட்டேன். குடும்பத்தை சேர்ந்த பெண்கள் அரசியலுக்கு வர கூடாது என கட்சி ஆரம்பிக்கும் போது கூறினேன் அதனை காப்பாற்ற முடியவில்லை.மாமல்லபுரம் மாநாட்டின்போதும் மாநாட்டுக்கு பிறகு நடப்பதை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது. தேர்தலுக்கு பிறகு தலைவர் பதவியை அன்புமணிக்கு தருவதாக நான் கூறியதற்கு கட்சியில் 100க்கு 99% பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடைசி வரை நீங்கள்தான் கட்சி தலைவராக இருக்க வேண்டும் என்று கூறினர்.
அன்புமணியின் செயல்பாட்டை பார்க்கும்போது மனக்குமுறல், ரத்த அழுத்தம் அதிகமாகிறது. அன்புமணிக்கு ஆதரவு அளிக்கும் ஒரு சதவீதம் பேர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒன்றிய அமைச்சர் பதவி கொடுத்த இரண்டரை ஆண்டுகளிலேயே ராஜினாமா செய்வதாக அன்புமணி கூறினார்.தந்தை, தாயை அன்புமணி மதிக்க வேண்டும், மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். மைக்கை தூக்கி அடிப்பது, பாட்டிலை தூக்கி வீசுவது இதுதான் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் செயலா?. கட்சி ஆரம்பித்த எனக்கே கட்டுப்பாடு போடுகிறார் அன்புமணி. சேலம், தருமபுரிக்கு போனால் மைக் வைத்து பேசக்கூடாது என எனக்கே கட்டுப்பாடு விதித்தார். அன்புமணியின் செயல்பாடுகள் மாநாட்டுக்கு பிறகு மிகவும் மோசமாகிவிட்டது. எனது நெஞ்சிலும் முதுகிலும் ஈட்டியால் குத்திவிட்டார்.
அன்புமணியை நினைக்கும்போதெல்லாம் மனத்தில் வலி ஏற்படுகிறது, அவரை நினைக்காமல் இருக்க முடியவில்லை, அது பாசத்தால் அல்ல. ராமரை போல் அன்புமணியை வனவாசம் செல்லுமாறு நான் கூறவில்லை, செயல் தலைவராக இருக்கவே கூறுகிறேன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று கூறினால் அதெல்லாம் பொய் என்று கூறுகிறார் அன்புமணி. எனக்கு கட்டளையிட அன்புமணி யார்?, அவருக்கு அந்த அதிகாரம் கொடுக்கவில்லை. பாமக இளைஞரணி தலைவர் பதவிக்கு பொருத்தமான நபர் போடப்படுவார்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post அன்புமணியை பார்த்தாலே BP ஏறுது; என் மூச்சுக் காற்று இருக்கும் வரை நானே பாமக தலைவர் : ராமதாஸ் அதிரடி appeared first on Dinakaran.