சின்னமனூர் : நெற்பயிரில் சாகுபடியில் மணிலா அகத்தியின் பங்கு குறித்து வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, ‘‘செஸ்பேனியா ரோஸ்ட்ரேட்டா எனப்படும் மணிலா அகத்தி, நீர்த் தேக்கமுள்ள நெல் பயிரிடும் நன்செய் நிலங்களில், நன்றாக வளர்ந்து, காற்றிலிருந்து அதிக தழைச்சத்தினைக் கிரகித்து, தண்டு மற்றும் வேர் முடிச்சுகளில் தேக்கி மட்கிய பிறகு விரைவாக நெல்லுக்குத் தரும் தன்மையுடையது.
மணிலா அகத்தியை நெல் வயலில் ஊடுபயிராகப் பயிரிடலாம். முப்பது நாட்கள் வயதான மணிலா அகத்தி நாற்றுகளை 1.5 மீட்டர் இடைவெளியில் (10 முதல் 12 வரிசை நெற் பயிருக்கிடையில் ஒரு வரிசை மணிலா அகத்தி) தென் கிழக்குப் பருவமழை காலத்தில் (ஜீன் மற்றும் செப்டம்பர்) முதல் நெற்பயிரில் ஊடுபயிராகப் பயிரிட்டு, 45 முதல் 50 நாட்களில் 30 செ.மீ உயரத்தில் வெட்டி, வெட்டிய பகுதியை மண்ணில் மிதித்து விட வேண்டும்.
மீதமுள்ள தண்டுப்பகுதியை மறுதாம்பு வளர்ச்சிக்காக விட வேண்டும். இதிலிருந்து கிடைக்கும் தழையை அறுவடையின்போது மடக்கி உழுத ஏழு நாட்களில் நெற்பயிரை நடவு செய்தால் இரண்டாவது நெற்பயிர் அதிக வளர்ச்சியையும், மகசூலையும் கொடுக்கிறது.
இது பசுந்தாள் உரமிடாத நெற்பயிரைக் காட்டிலும் 50 சதவீதம் அதிக தானிய மகசூலைத் தருவதுடன், நீண்ட கால நெல் உற்பத்திக்கு ஏதுவாக மண்வளத்தைப் பாதுகாக்கிறது.
மேலும் எக்டருக்கு 1.5 டன் தழையைக் கொடுப்பதன் மூலம் 13 கிலோ கிராம் தழைச்சத்து கிடைக்கிறது. இதனால் நெற் பயிரின் மகசூல், சாதாரணமாக நெற்பயிரை மட்டும் தனியாகப் பயிர் செய்வதைவிட அதிகரிக்கிறது.
மணிலா அகத்தியை பதியன் முறையில் நடவு செய்தால் விரைவில் தழை மகசூல் அதிகரிப்பதோடு குறைந்த காலத்தில் விதையைப் பெருக்கலாம்.
பதியன் முறையில் குச்சிகளை (15 முதல் 20 செமீ நீளம்) சாணக் கரைசலில் நனைத்து நடுவதால் முளைப்புத்திறன் துரிதப்படுவதோடு அதிக வேர்கள் வர ஏதுவாகிறது.
அத்துடன் சாணக் கரைசலில் நனைத்து நட்ட கட்டைகள் 90 சதம் நல்ல முறையில் வளர்கின்றன. இவ்வாறு நெற்பயிர் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
The post நெற்பயிரில் ஊடுபயிராக பயிரிடப்படும் மணிலா அகத்தி மண்வளத்தைப் பாதுகாக்கிறது appeared first on Dinakaran.