பள்ளி வளாகத்தில் பாலியல் தொல்லை கொடுத்தால் மாணவிகள் துணிந்து புகார் கொடுக்க வேண்டும்

*பெரம்பலூர் சார்பு நீதிபதி சரண்யா பேச்சு

பெரம்பலூர் : பள்ளி வளாகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் துணிந்து புகார் கொடுக்க முன்வர வேண்டும் என பெரம்பலூர் சார்பு நீதிபதி சரண்யா தெரிவித்துள்ளார். தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின் படியும், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமாகிய இந்திராணி ஆலோசனையின் படி, பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான சட்ட விழிப்புணர்வு மற்றும் பாலியல் துன்புறுத்தல் குறித்தான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், பெரம்பலூர் சார்பு நீதிபதியுமாகிய சரண்யா கலந்து கொண்டு பேசுகையில்;
குழந்தைகளுக்கான சட்டங்கள் குறித்தும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஏதேனும் குறைகள் இருந்தால் பெற்றோர்களிடமோ, பள்ளி நிர்வாகத்திடமோ அல்லது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவிலோ புகார் தெரிவிக்கலாம்.

பள்ளி வளாகத்தில் மாணவிகளுக்கு ஏதேனும் பாலியல் தொல்லை ஏற்பட்டால் பயம் இல்லாமல் துணிந்து புகார் கொடுக்க முன்வர வேண்டும். பெண் குழந்தைகள் நல்ல முறையில் படித்து முன்னேற வேண்டும். படிப்பில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பெற்றோர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் நல்ல பெயரை வாங்கி தருவதற்கு மாணவ, மாணவிகள் செயல்பட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். மேலும், மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிப்பதை பற்றித் தெளிவாக எடுத்துரைத்தார்.

இதில் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சட்ட பாதுகாப்பு உதவி வழக்கறிஞர்கள் ரோகினி, யாழினி மற்றும் சமூக நலத்துறை ஊழியர் ரேகா ஆகியோர் கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கான சட்டங்கள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தனர். முன்னதாக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜூ வரவேற்றார். முடிவில் இயற்பியல் முதுகலை ஆசிரியர் கமலஹாசன் நன்றி தெரிவித்தார்.

The post பள்ளி வளாகத்தில் பாலியல் தொல்லை கொடுத்தால் மாணவிகள் துணிந்து புகார் கொடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: