வாகன போக்குவரத்து மிகுந்த மீனாட்சிபுரம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படுமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த இரு மாநில எல்லையான மீனாட்சிபுரம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரிலிருந்து பிரிந்து செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளான கோட்டூர் ரோடு, கேரள மாநிலம் செல்லும் மீன்கரை ரோடு சீனிவாசாபுரம், பாலக்காடு ரோடு, வடுகபாளையம் பிரிவு பகுதியில் இருந்த ரயில்வே கேட் ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டு வாகனங்கள் விரைந்து செல்ல வசதியாக அடுத்தடுத்து உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது.

தற்போது அந்த வழியாக அனைத்து ரக வாகனங்கள் தங்கு தடையின்றி சென்று வருகிறது. இதில், பொள்ளாச்சியை அடுத்த தமிழ்நாடு எல்லைப்பகுதியில் உள்ள மீனாட்சிபுரத்தில் உள்ள ரயில்வே கேட் வழியாக, கேரள மாநிலத்தின் பல்வேறு பல்வேறு இடங்களுக்கும், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிக்கும் தொடர்ந்து வாகன போக்குவரத்து உள்ளது.

தமிழ்நாடு-கேரள மாநிலம் என இரு மாநிலங்களின் எல்லைப்பகுதியான மீனாட்சிபுரம் வழியாக அனைத்து வகையான வாகனங்கள் சென்று வருகிறது. பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் பெரும்பாலும் மீனாட்சிபுரம் ரயில்வே கேட்டை கடந்துதான் செல்ல வேண்டும். இப்பகுதியில் இரவு, பகல் என தொடர்ந்து வாகன போக்குவரத்து உள்ளது.

மீனாட்சிபுரம் ரயில்வே இருப்பு பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டதால் இந்த வழியாக திருச்செந்தூர், சென்னை, பாலக்காடு, கோவை இணைப்பு உள்ளிட்ட ரயில் சேவை தினமும் தொடர்ந்துள்ளது. தற்போது மின்மயமாக்கல் பணி நிறைவடைந்த நிலையில் உள்ளதால் இந்த வழியாக வருங்காலங்களில் ரயில் போக்குவரத்து மேலும் அதிகமாக வாய்ப்புள்ளது.

ரயில் போக்குவரத்து அதிகமாக இருக்கும்போது, அந்நேரத்தில் வாகனங்கள் அடுத்தடுத்து விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்படும். அந்த இடத்தில் ரயில்வே மேம்பாலம் அமைத்தால் ரயில் இயக்கம் நேரத்தில், வாகனங்கள் எந்த சிரமமுமின்றி விரைந்து செல்ல ஏதுவாக இருக்கும் என்றும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர தேவை சிறப்பாக இருக்கும் என்றும், மீனாட்சிபுரம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்க வேண்டும் என்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே பல இடங்களில், ரயில்வே கேட் அமைந்துள்ள பகுதிகளில் வாகனங்கள் விரைந்து செல்ல வசதியாக ரயில்வே மேம்பாலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் எந்த சிரமமுமின்றி செல்வதுடன், அவசர தேவையான ஆம்புலன்ஸ்சும் தங்கு தடையின்றி விரைந்து செல்கிறது.

இதுபோல், இருமாநில வாகனங்கள் அதிகம் அதிகம் வந்து செல்லும் பகுதியில் ஒன்றான, மீனாட்சிபுரம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைத்தால் பல்வேறு பணி நிமிர்த்தமாக செல்பவர்களுக்கு எந்த இடையூறும் இருக்காது என்பதால், அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வாகன போக்குவரத்து மிகுந்த மீனாட்சிபுரம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: