தூத்துக்குடி : குஜராத்தில் இருந்து தூத்துக்குடிக்கு மேலும் 35 ஆயிரம் டன் உப்பு இறக்குமதி செய்யயப்பட்டு உள்ளதால் உள்ளூர் உப்பு உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்ததாக தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிகளவு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு வேம்பார் முதல் பெரியதாழை வரை சுமார் 22 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. உப்பு உற்பத்தியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 20 லட்சம் முதல் 30 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தாண்டு முற்பகுதியில் அடுத்தடுத்து மழை பெய்தது. கடந்த இரு மாதத்திலும் மழை கொட்டித் தீர்த்ததால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் அனைத்து தேவைகளுக்கும் தேவையான அளவு உப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக குஜராத்தில் இருந்து கப்பல்களிலும், சரக்கு ரயில்கள் மூலமாகவும் உப்பு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் குஜராத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சுமார் 3 லட்சம் டன் வரையில் உப்பு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக உப்பு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு விலை குறைந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் தற்போது அடுத்த கட்டமாக குஜராத் மாநிலம் கன்ட்லா துறைமுகத்தில் இருந்து 34 ஆயிரத்து 690 டன் உப்பு, தூத்துக்குடிக்கு கப்பல் மூலமாக கொண்டு வரப்பட்டுள்ளது.
இதில் 6 ஆயிரம் டன் உப்பு பைகளில் அடைக்கப்பட்டு, எம்வி ஸ்டெல்லா பியூட்டி என்ற கப்பல் மூலம் கொழும்புக்கு அனுப்பப்படுகிறது, இந்தக் கப்பல் நாளை (14ம் தேதி) தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 16ம் தேதி மீண்டும் கன்ட்லா துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சுமார் 50 ஆயிரம் டன் குஜராத் உப்பு கப்பல் மூலம் கொண்டு வரப்படுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உப்பு விலை மேலும் சரிவடையும் என உள்ளூர் உப்பு உற்பத்தியாளர்கள் கவலையடைந்து உள்ளனர்.
The post குஜராத்தில் இருந்து தூத்துக்குடிக்கு மேலும் 35 ஆயிரம் டன் உப்பு இறக்குமதி appeared first on Dinakaran.