நெல்லை : நெல்லை மாவட்டத்தில் கார் பருவ நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர். குறித்த நேரத்தில் பாபநாசம் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அதிக மழை கிடைக்கும். இந்த பருவமழை காலத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் நிரம்பி விடும்.
இதன் மூலம் மார்ச் 31ம் தேதி வரை பிசான பருவ நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். அதன் பிறகு ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்கள் கடும் கோடை காலமாகும். இதனால் குடிநீர் தேவையின் அவசியம் கருதி பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும்.
ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கினால் கார் பருவ நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படும். எனினும் ஜூன் மாதம் குறித்த நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்காது. ஆனால் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை குறித்த காலத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே மே இறுதியில் தொடங்கியது. இதனால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு அதிக நீர்வரத்து இருந்தது. இதன் காரணமாக பாபநாசம், ேசர்வலாறு அணைகளின் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியது.
அணைகளின் நீர்மட்டம் உயர்ந்ததால் கார் பருவ நெல் சாகுபடிக்கு கடந்த ஜூன் 3ம் தேதி பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் திறக்கப்பட்டன. நேற்றைய நிலவரப்படி, பாபநாசம் அணையின் நீர்மட்டம் 123.70 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 641 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைப்பகுதியில் 2 மிமீ மழை பெய்துள்ளது.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 126.44 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 93 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 92.95 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 45 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளை துவக்கி உள்ளனர். கார் பருவ நெல் சாகுபடியை முன்னிட்டு 5 ஆயிரம் ஏக்கரில் நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளது. நெல் சாகுபடிக்காக விவசாயிகள் நிலத்தை டிராக்டர் மூலம் உழும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு ஏக்கருக்கு டிராக்டர் உழவிற்கு ரூ.2 ஆயிரம் செலவாகிறது என விவசாயிகள் தெரிவித்தனர். அம்பாசமுத்திரம், முக்கூடல் கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பழவூர், சுத்தமல்லி, கொண்டாநகரம் பகுதிகளில் விவசாய நிலங்களில் நாற்று நடும் பணிகளும் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் பாலையா கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் கார் பருவ நெல் சாகுபடிக்கு குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைகளிலும் போதிய நீர் இருப்பு உள்ளது. இதனால் விவசாய பணிகளை குறித்த காலத்தில் துவங்கியுள்ளோம். இந்த ஆண்டு கார் சாகுபடி முழுமைக்கும் தண்ணீர் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.
உரங்கள் வருகை
நெல்லை மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) சந்திரபோஸ் கூறுகையில், ெநல்லை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் தயார் நிலையில் உள்ளது. தனியார் உரக் கடைகளிலும் உரங்கள் விற்பனைக்காக விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம், அயன் சிங்கம்பட்டி ஆகிய கூட்டுறவு சங்கங்களுக்கு முதல் கட்டமாக உரங்கள் விநியோகம் செய்யப்படும். கூட்டுறவு சங்கங்களின் தேவைக்காக இப்கோ நிறுவனத்தில் இருந்து காம்ப்ளக்ஸ், ஸ்பிக் நிறுவனத்தில் இருந்து யூரியா உரங்கள் இந்த வாரம் வந்து விடும். வருகிற திங்கள்கிழமைக்குள் கூட்டுறவு சங்கங்களுக்கு உரங்கள் அனுப்பப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post நெல்லை மாவட்டத்தில் கார் பருவ நெல் சாகுபடி பணிகள் தொடங்கியது appeared first on Dinakaran.