திருப்பூர், ஜூன் 13: திருப்பூரில் ஏற்றுமதியாளர்களின் வசதிக்காக துணைவன் ஏற்றுமதியாளர்கள் இணையதள சேவை நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு ஏஇபிசி துணைத்தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். திருச்சி சுங்கத்துறை தலைமை ஆணையர் விமலநாதன், முதன்மை ஆணையர் ரவிச்சந்திரன், ஏற்றுமதியாளா்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டெல்லியை சேர்ந்த மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரிய அதிகாரி மோகன்குமார் சிங் தொடங்கி வைத்தார். திருப்பூரில் வளர்ந்து வரும் ஏற்றுமதி சமூகத்தின் தேவைகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சுங்க பரிவர்தனைகளில் எழும் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வுகளை ஏற்படுத்தி தரும் நோக்கில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம், மத்திய அரசின் இந்திய சுங்க துறையுடன் இணைந்து திருச்சி சுங்க தடுப்பு மண்டலம் சார்பில் இந்த இணையதள சேவை தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதள சேவை குறிப்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் கருத்துக்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சுங்கத்துறைக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் இடையில் ஒரு இணைப்பு பாலமாக இந்த இணையதள சேவை இருக்கும். ஏற்றுமதியாளர்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்குகிறது. மேலும், இதில் ஏஇபிசி பொது மேலாளர் அபினந்தன் இணையதள சேவை குறித்து பேசினார்.
The post ஏற்றுமதியாளர்களுக்கான துணைவன் இணையதள சேவை அறிமுகம் appeared first on Dinakaran.