பாலக்காடு, ஜூன் 13: கேரளாவில் தென்மேற்குப்பருவமழை தீவிரம் அடைய துவங்கியுள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. கண்ணூர், காசர்க்கோடு ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் பிறப்பிக்கப்பட்டது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் எல்லோ அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், இதனால் கடல் பிரதேசங்களில் வசிக்கின்ற மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலில் கொந்தளிப்பு அதிகப்படியாக உள்ளதால் மீனவர்கள் மீன் பிடிக்க படகுகளில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கன மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்படுகிறது. இதனால் காட்டாற்று வெள்ளம், மண்ணரிப்பு போன்றவை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால் மலைப்பயணங்களை பொது மக்கள் ரத்து செய்து கொள்வது நல்லது என அறிவுரை வழங்கப்பட்டது. வயநாடு மாவட்டத்தில் மீண்டும் ஒரு காட்டாற்று வெள்ளத்தால் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளன. அப்பகுதியில் பெரியளவில் பாதிப்பு இல்லை. இருப்பினும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
The post கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் appeared first on Dinakaran.