குன்னூர், ஜூன் 13: சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குன்னூர் தீயணைப்புத்துறை சார்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிக்க வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் போராடி வருகின்றன. ஆனாலும் இன்னும் பல இடங்களில் குழந்தை தொழிலாளர் முறை இருக்கத்தான் செய்கிறது. அதைத் தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நாள் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நீலகிரி மாவட்டம் குன்னூர் தீயணைப்பு துறையினர் சார்பில் நேற்று தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் குமார் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இதுகுறித்து நிலைய அலுவலர் குமார் பேசுகையில் ‘‘குழந்தை தொழிலாளர் முறை என்பது குழந்தைகளின் பருவத்தையே நரகமாக்கி விடுகிறது. குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்களுடைய எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடுகிறது. பெரும்பாலும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை இந்த குழந்தை தொழிலாளர் முறை தடுத்து விடுகிறது. எனவே தங்களின் குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து குழந்தைகளிடமும் இதுகுறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.
The post குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.