அன்னதானத்தால் உடல் பாதிப்பு அரசு மருத்துவமனையில் மேலும் 11 பேர் அனுமதி

மதுரை, ஜூன் 13: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே எஸ்.கல்விமடையில் உள்ள கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 6ம் தேதி முதல் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிலையில், அன்னதானம் சாப்பிட்ட ஏராளமானோருக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் விருதுநகர், திருப்புவனம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். நேற்று முன்தினம் வரை மதுரை அரசு மருத்துவமனையில் 11 சிறுவர்கள், 55 பெண்கள், 41 ஆண்கள் என 107 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், நேற்று கர்ப்பிணி உள்ளிட்ட மேலும் 11 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால் இங்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி கூறும்போது, ‘சிகிச்சையில் இருப்போர் நல்ல நிலையில் உள்ளனர். ஓரிரு நாளில் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். உணவுடன், குடிநீர் காரணமாகவும் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. சுகாதாரத்துறையினர் உணவு மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்’ என்றார்.

The post அன்னதானத்தால் உடல் பாதிப்பு அரசு மருத்துவமனையில் மேலும் 11 பேர் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: