அமைச்சரை பாராட்டிய அதிமுக புதிய பாலம் கட்டிக் கொடுத்ததால் நெகிழ்ச்சி

 

பாடாலூர், ஜூன் 13: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்தில் நேற்று முன்தினம் பல்வேறு நலத்திட்ட பணிகளை முன்னாள் ஒன்றிய குழு தலைவரும், திமுக ஒன்றிய செயலாளருமான என்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். மேலும் முடிவடைந்த பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கும் திறந்து வைத்தார். அப்போது, பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.89 கோடி மதிப்பில், ஜெமீன் பேரையூர் – அருணகிரிமங்கலம் சாலையில் மருதையாற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் திறப்பு விழா ஜெமீன் பேரையூரில் நடந்தது.

அதே ஊருக்கு, மாக்காய்குளத்தில் இருந்து ரூ.85 லட்சம் மதிப்பில் சாலை பலப்படுத்தும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது, அதிமுகவை சேர்ந்த மூத்த தொண்டர் செல்லப்பிள்ளை (78), நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு நேரில் வந்து போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை பாராட்டியதோடு, பாலம் கட்டி கொடுத்ததற்கு நன்றியும் தெரிவித்தார்.

பதிலுக்கு அமைச்சர் சிவசங்கர் பரஸ்பரத்துடன் அவருக்கு கைகுலுக்கி வணக்கம் தெரிவித்ததோடு, போட்டோவும் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மாற்றுக்கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், தங்கள் ஊரின் தலைமுறை கனவை நிறைவேற்றி தந்த அமைச்சரை தேடிவந்து பாராட்டி நன்றி தெரிவித்த அதிமுக மூத்த தொண்டர் செல்லப்பிள்ளையையும், அவரது பாராட்டை ஏற்றுக் கொண்டு அவருடன் சாமானியனாக உரையாடிய அமைச்சர் சிவசங்கரையும் அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

 

The post அமைச்சரை பாராட்டிய அதிமுக புதிய பாலம் கட்டிக் கொடுத்ததால் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: