பெங்களூருவில் 11 பேர் பலி எதிரொலி வெற்றி கொண்டாட்டத்துக்கு புதிய கட்டுப்பாடுகள்: ஆர்சிபிக்கு தடையா? பிசிசிஐ நாளை ஆலோசனை

பெங்களூரு: பெங்களூரு துயர சம்பவத்தை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பட்டம் வென்ற அணிகளுக்கான கொண்டாட்டங்களுக்கு புதிய விதிமுறைகள் வகுப்பது குறித்து முடிவெடுக்க பிசிசிஐ உச்ச கவுன்சில் கூட்டம் நாளை (14ம் தேதி) நடக்கிறது. 18வது சீசன் ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்களுக்கான பாராட்டு விழா பெங்களூரு எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 4ம் தேதி நடந்தது.

அப்போது ஒரே நேரத்தில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக காவல்துறை, கர்நாடக கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு, ஆர்சிபி அணி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து ஆர்சிபி அணி மட்டுமின்றி கர்நாடக அரசுக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஐபிஎல் கொண்டாட்டம் குறித்து விவாதிக்கவும் புதிய விதிமுறைகளை உருவாக்கவும் பிசிசிஐ உச்ச கவுன்சில் கூட்டம் நாளை (ஜூன் 14) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆன்லைனில் நடக்கும் இந்த கூட்டத்தில் பெங்களூருவில் ஏற்பட்ட துயர சம்பவம் குறித்து அறிக்கை அளிக்கப்படும் எனவும், இனி கிரிக்கெட் போட்டிகளில் பட்டம் வென்ற அணிகளுக்கான கொண்டாட்டங்களுக்கு புதிய விதிமுறைகள் வகுப்பது குறித்து விவாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ தரப்பில், ‘பெங்களூரில் நடந்த வெற்றிக் கொண்டாடத்தில் நடந்தது போன்ற எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் தேவை என்பது உணர்ந்துள்ளோம். அதற்காக வெற்றிக் கொண்டாடட்டத்தின் போது என்ன மாதிரியான நடைமுறைகளை, விதிகளை கடை பிடிக்க வேண்டும் என்பது குறித்து உயர்மட்டக் குழு கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம். கூட்டம் பயனுள்ளதாக இருக்கும்.வெற்றிக் கொண்டாடம் குறுித்து ஆர்சிபி அணி பிசிசிஐக்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஆர்சிபி அணியின் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டமோ, அணியை தடை செய்யும் யோசனையோ பிசிசிஐயிடம் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பெங்களூருவில் 11 பேர் பலி எதிரொலி வெற்றி கொண்டாட்டத்துக்கு புதிய கட்டுப்பாடுகள்: ஆர்சிபிக்கு தடையா? பிசிசிஐ நாளை ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: