பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம் சட்டமன்ற தேர்தலில் 78 தொகுதியை கேட்கும் பாஜ: அதிமுக தலைவர்கள் கடும் அதிர்ச்சி

சேலம்: தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து 78 தொகுதிகளை பெறவேண்டும் என பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் அதிமுக தலைவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் பாஜ- அதிமுக கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், கூட்டணி ஆட்சி அமையும் வகையில் அதிமுக 2 தொகுதியில் போட்டியிட்டால், பாஜ ஒரு இடத்தில் போட்டியிடவேண்டும் என்ற வகையில் தொகுதிகளை பிரிக்க வேண்டும்.

ஒரு சில சட்டமன்ற தேர்தலில் பாஜ 2ம் இடம் வந்தது. அதிமுக 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 19.4 சதவீதம் ஓட்டுகள் கிடைத்தது. பாஜ கூட்டணி 11.4 சதவீத ஓட்டுக்கள் பெற்றது. அதிமுக- பாஜ பலத்தின் அடிப்படையில் தொகுதி பங்கீட்டை பெறவேண்டும் என கூறியுள்ளார். இதன்படி பாஜ 78 தொகுதிகளை கேட்கிறது. அண்ணாமலையின் இந்த கடிதம் எடப்பாடி மற்றும் அதிமுக தலைவர்கள், தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய ஆதரவாளரும், அதிமுக வக்கீலுமான மணிகண்டன் கூறியதாவது: அண்ணாமலையின் முக்கிய நோக்கமே, பாஜ- அதிமுக கூட்டணி வரக்கூடாது என்பது தான். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி உடைய முக்கிய காரணமே அண்ணாமலைதான். வானத்தை வில்லாக வளைப்பேன் என பிரதமர் மோடியிடம் பேசினார். இவரது பொய்யான பேச்சை நம்பிய டெல்லி தலைமை, தனியாக போட்டியிட வைத்தது.

ஆனால் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. மத்தியில் ஆட்சி அமைப்பதிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்திருந்தால் குறைந்தது 15 இடங்களை வென்றிருக்கலாம். இதன்பின்னரே இவரை அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் புரிந்து கொண்டதுடன், பாஜ மாநில தலைவர் பதவியை பறித்தனர்.
சமீபத்தில் மதுரையில் நடந்த பாஜ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், அண்ணாமலையை அமித்ஷா கடுமையாக எச்சரிக்கை செய்தார். இதையும் மீறி அதிமுக கூட்டணியை உடைக்க முழுமுயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கூட்டணி குறித்து பேசுவதற்கு அவர் தேர்தல் பொறுப்பாளர் அல்ல. 31 தேசிய பொதுக்குழு உறுப்பினர்களில் ஒருவர் தான். பாஜவின் மாநில தலைவர்களில் யார் வீட்டிலாவது வருமானவரித்துறை சோதனை நடத்தியது இல்லை. ஆனால் அண்ணாமலையின் உறவினர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்தது. அவரை பாஜ மேலிடம் கட்டம் கட்டி வைத்துள்ளது. அவரது நோக்கம் தேர்தலில் தோல்வியை தழுவ வேண்டும். அதிமுகவை அழிக்க வேண்டும், பாஜ தமிழ்நாட்டில் கால் ஊன்ற விடக்கூடாது என்பதுதான். உடனடியாக பாஜ தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* கூட்டணி ஆட்சி அல்ல.. பாஜ ஆட்சிதான்… அண்ணாமலை பரபரப்பு பேட்டி
கோவையில் நேற்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: அதிமுக போட்டியிடும் தொகுதிகளில், பாதி தொதியில் பாஜ போட்டியிட வேண்டும் என கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியதாக வெளியான தகவல் உண்மையல்ல. பாஜ தொண்டனாக உயிருள்ள வரை கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுவேன். 2026 தேர்தலில் யார் எவ்வளவு சீட் என்பதை தலைவர்கள் முடிவு செய்வார்கள், என்னை பொறுத்தவரை பாஜ நிறைய சீட் நிற்க வேண்டும்.

கட்சி முடிவிற்கு கட்டுப்பட்டு சில இடங்களில் வாயை மூடிக் கொண்டு இருக்கிறேன். சில இடங்களில் பேசுகிறேன். எனக்கு யார் மீதும் காழ்ப்புணர்ச்சி இல்லை. கூட்டணி ஆட்சி குறித்து நான் எதாவது பேசினால் தேவையில்லாமல் பஞ்சாயத்து ஆகிவிடும். கூட்டணி ஆட்சி, கீட்டணி ஆட்சி என்று இல்லாமல் பாஜ ஆட்சி என்று நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.இன்றைக்கு எங்கள் கட்சியின் தலைவர்கள் முடிவெடுத்து இருக்கிறார்கள். அந்த முடிவுக்கு தொண்டனாக நாங்கள் கட்டுப்படுகிறோம்.

இது பற்றி எங்கள் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுவார். பாஜவை தவெக சித்தாந்த எதிரி என்கிறது. பாஜ அமைக்கும் கூட்டணி பொருந்தும் கூட்டணியாக இருக்கும். அதிமுக-பாஜ இடையே கொள்கை முரண்கள் இருப்பது உண்மைதான். இரு கட்சிகளுக்கும் ஒத்துபோகும் குறைந்தபட்ச செயல்திட்டங்கள் இரு கட்சி தலைவர்கள் சேர்ந்து முடிவு செய்வார்கள். அண்ணா பல்கலை பிஆர்ஓ நடராஜன் தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் மன்னிப்பு கேட்க முடியாது. அதை நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம் சட்டமன்ற தேர்தலில் 78 தொகுதியை கேட்கும் பாஜ: அதிமுக தலைவர்கள் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: