கடவுளை கட்சிக்கு பயன்படுத்தக் கூடாது முருக பக்தர்கள் மாநாடுக்கு தடை விதிக்கக் கோரி மனு: விரைவில் விசாரணைக்கு வருகிறது

மதுரை: முருக பக்தர்கள் மாநாட்டிற்கு தடை கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டது. இந்து முன்னணி சார்பில் வரும் 22ம் தேதி மதுரை பாண்டிகோவில் அருகேயுள்ள திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த வளாகத்திற்குள், முருக பெருமானின் அறுபடை வீடு திருக்கோயில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கு அனுமதி வழங்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யயப்பட்டது.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, மாநாட்டுக்கான முன் ஏற்பாடுகளை செய்யலாம். ஆனால் எவ்வித பூஜைகளும் செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்க தலைவர் அரங்கநாதன், இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், அறுபடை வீடுகளுக்கு குறிப்பிட்ட ஆகம முறைப்படியே பூஜை செய்ய வேண்டும்.

அறுபடை வீடுகளில் அறங்காவலர் குழு அனுமதி பெற்று, பாலாலயம் அமைத்து மூலவருக்கு உரிய பூஜைகள் செய்து, உற்சவரை மட்டுமே வெளியே கொண்டு வர முடியும். இந்த மாநாட்டில் அமைக்கப்படும் அறுபடை வீடுகளில், மூலவர் சிலை, அமைக்கவே முடியாது. உற்சவர் சிலையும், ஆகமப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தியபின்பே பூஜை செய்ய முடியும். இந்து முன்னணி கோரும் இரு வேளை பூஜை என்பதும் ஆகமத்திற்கு முரணானது.

அறுபடை வீடுகளுக்கு மாதிரிகள் அமைக்க முடியாது. இந்து முன்னணியின் செயல் மக்களை ஏமாற்றும் செயல். இந்து சமய அறநிலையத்துறை ஒப்புதலையும் பெறவில்லை. எனவே, அறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைத்து, பூஜை செய்ய அனுமதிப்பது, கோடிக்கணக்கான முருக பக்தர்களின் நம்பிக்கையை அவமதிப்பதாகும். எனவே அறுபடை வீடுகளை அரசியலுக்கு கடவுளை கட்சிக்கு பயன்படுத்த தடை விதித்து, அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

The post கடவுளை கட்சிக்கு பயன்படுத்தக் கூடாது முருக பக்தர்கள் மாநாடுக்கு தடை விதிக்கக் கோரி மனு: விரைவில் விசாரணைக்கு வருகிறது appeared first on Dinakaran.

Related Stories: