கொடும்பாளூர் அகழ்வாராய்ச்சி பணியை நிறுத்தியது ஒன்றிய அரசு

விராலிமலை: கொடும்பாளூர் அகழ்வாராய்ச்சி பணியை ஒன்றிய அரசு தொல்லியல் துறை திடீரென்று நிறுத்தி வைத்துள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ளது கொடும்பாளூர், பல்வேறு வரலாற்று சின்னங்கள் புதைந்துள்ள பகுதி. ஏறத்தாழ 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான புராதன நகரம் என்று வரலாற்று ஆய்வாளர்களும், கல்வெட்டு ஆய்வுகளும் கூறுகின்றன. கொடும்பாளூரில் குடியிருப்புகள் அமைந்துள்ள அக்ரஹாரம் மேட்டுப்பகுதி காலி இடங்களில் ஒன்றிய தொல்லியல் துறையின் திருச்சி வட்ட பிரிவு சார்பில் அகழாய்வு பணி கடந்த ஜனவரி 12ம் தேதி தொடங்கப்பட்டது.

இங்கு அகழாய்வில் புதைந்த வீடுகளுக்கு அடையாளமாக நான்கு அடியில் செங்கல் கற்களினால் எழுப்பப்பட்ட மேல் சுவர் அதன் அடியில் மண்ணாலான சுவரும் முதல் கட்டமாக வெளிப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அக்காலத்தில் நெசவு தொழிலுக்கு பயன்படுத்திய தக்களி, கொண்டை வடிவில் ஊசி, வட்டக்கல், கூர் வடிவிலான எழும்புகள் கிடைத்தன. தொடர்ந்து நடைபெற்று வந்த அகழாய்வில் பண்டையகால தங்கத்தில் செய்யப்பட்ட குண்டு மணி, அழகிய வடிவிலான மூடப்பட்ட மண் பானை, வட்டக்கல், கிடைத்திருந்தது.

தொடர்ந்து நடைபெற்று வந்த அகழாய்வு பணியில் புதைந்து கிடக்கும் வரலாற்று சின்னங்கள் வெளிவருவதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்பட்டிருந்த நிலையில் ஒன்றிய தொல்லியல் துறை பணிகளை 25 நாட்கள் நிறுத்தியுள்ளது. மேலும் தற்போது குழிகள் மீது தார்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளது. பணிகள் மேற்கொள்ள ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அகழ்வாராய்ச்சி இயக்குநராக பணியில் இருந்த அனில் குமார் என்பவரை திடீரென்று இடமாற்றம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. வரலாற்று சின்னங்கள் வெளிவரத்தொடங்கிய வேளையில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய வரலாறு வெளிவருவதில் விருப்பம் இல்லாமல் ஒன்றிய அரசு செயல்படுகிறதோ என்று வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

The post கொடும்பாளூர் அகழ்வாராய்ச்சி பணியை நிறுத்தியது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Related Stories: