சென்னை, ஜூன் 13: சென்னை விமான நிலையத்தில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் விதமாக 4.3 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக் காலத்தில் திரிசூலம் மலையடிவாரம், ஜிஎஸ்டி சாலை மற்றும் மீனம்பாக்கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் ஒட்டுமொத்தமாக, சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் பெருக்கெடுத்து ஓடி, விமான நிலைய வளாகம் முழுவதும் தேங்கி நிற்கும். குறிப்பாக, விமானங்கள் நிறுத்தும் பகுதி, ஓடுதளப் பாதை போன்ற இடங்களில் பெருமளவு மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கும். இதனால், விமானங்கள் ரத்து, தாமதமாக இயக்கம், விமான நிலையம் தற்காலிகமாக மூடல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய விமான நிலைய ஆணையம் செயல்படுத்த முடிவு செய்தது. சென்னை ஐஐடி தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆலோசனையின்படி, சென்னை விமான நிலையத்தில் 4.3 கி.மீ தூரத்திற்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த கால்வாய் நேரடியாக அடையாறு ஆற்றில் இணைக்கும் வகையில் கட்டப்பட உள்ளது. இந்நிலையில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நேற்று பூமி பூஜையுடன் தொடங்கியது. இதில், விமான நிலைய உயர் அதிகாரிகள் மற்றும் ஐஐடி தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு ஆகியோர் கலந்துகொண்டனர். மழைநீர் வடிகால்வாய் பணிகள் வரும் நவம்பர், டிசம்பர் மாத பருவமழை காலத்திற்கு முன்னதாக கட்டி முடிக்க திட்டமிடப்படுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post சென்னை விமான நிலையத்தில் 4.3 கி.மீ. மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.