சென்னை, ஜூன் 13: சென்னையில் தற்போது நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகளால் பல இடங்களில் சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. மேலும் சென்னை குடிநீர் வாரியம், மின்சார வாரியம், கண்ணாடி இழைவடங்கள் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்காகவும் அவ்வப்போது சாலைகள் தோண்டப்படுகிறது. ஆனால் அவற்றை முறையாக சீரமைக்காமல் விட்டு விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கி விட்டதால், மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறது. மேலும் விரைவில் வடகிழக்கு பருவமழை காலமும் வர உள்ளது. இதனால் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், சென்னை குடிநீர் வாரியத்தால் பேருந்து தட சாலைகள் மற்றும் உட்புற சாலைகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வெட்டு பணிகளை சீரமைக்க வைப்பு நிதியை எதிர்நோக்காமல் மாநகராட்சியின் வருவாய் நிதியில் இருந்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் சாலை பள்ளங்களை சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, மாநகராட்சியின் பேருந்து சாலைகள் துறையோ, சம்பந்தப்பட்ட மண்டலமோ பணிகளுக்கான அளவீடுகளை தயார் செய்து நிர்வாக அனுமதி பெற்று ஒப்பந்தத்தை இறுதி செய்து பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
The post பருவமழை முன்னெச்சரிக்கையாக சாலை பள்ளம் சீரமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு: மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.