சென்னை, ஜூன் 13: மந்தைவெளியில் ரூ.151 கோடியில் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையம் அமைக்கப்படவுள்ளது, என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் இணைந்து உருவாக்கிய சிறப்பு நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம், மந்தைவெளி பேருந்து முனையம் மற்றும் பணிமனையில் நவீன சொத்து மேம்பாட்டு கட்டிடத்திற்கான ஒப்பந்தத்தை ரூ.151 கோடி மதிப்பில் (ஜிஎஸ்டி மற்றும் தற்காலிகத் தொகை உட்பட) வெளியிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2, வழித்தடம் 3ல் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையமான மந்தைவெளி மெட்ரோ நிலையத்தின் நுழைவு/ வெளியேறும் கட்டமைப்புகள், தற்போதைய மந்தைவெளி பேருந்து நிலையம் மற்றும் பணிமனை வளாகத்திற்குள் திட்டமிடப்பட்டுள்ளன.
இதன் சிறப்பம்சமாக, இந்த நிலத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்தும் நோக்கில், மெட்ரோ ரயில் நிலைய நுழைவு/ வெளியேறும் இடம், பேருந்து நிறுத்தம் மற்றும் புறப்படும் இடத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லறை மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த சொத்து வளர்ச்சி கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ கட்டமைப்பும் பேருந்து நிலையமும் ஒருங்கிணைந்த பன்முக போக்குவரத்து வசதிகளுடன் கூடிய இந்த கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 29,385 சதுர மீட்டர் ஆகும். இதில் 2 கட்டிடங்கள் அமையவுள்ளன. 2 கட்டிடங்களின் மாடியிலும் சூரிய மின்கல அமைப்புகள் (solar panels) அமைக்கப்படவுள்ளது.இதன் மூலம் கட்டிடத்தின் நிலைத்தன்மை மற்றும் பசுமை கட்டிட தரநிலைகளை பின்பற்றவும் உதவும். இந்த திட்டம் சென்னையில் போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டை நோக்கிய ஒரு முக்கிய படியாகும்.
நில பரப்பளவு மற்றும் கட்டிட பரப்பளவு: நிலம்-1: 3,031 சதுர மீட்டர் (0.745 ஏக்கர்), நிலம்-2: 3,594 சதுர மீட்டர் (0.88 ஏக்கர்). நிலம்-1ன் மொத்த கட்டிட பரப்பளவு 13,419 சதுர மீட்டர் மற்றும் நிலம்-2 இன் கட்டிட பரப்பளவு 15,966 சதுர மீட்டராகும். இரு நிலங்களும் ராமகிருஷ்ண மடம் சாலை மற்றும் அதனுடன் உள்ள இணைப்பு சாலைகளில் இருந்து இருமுக சாலை அணுகுமுறையை பெறும் வகையில் அமைக்கப்படுகின்றன.
கோபுரம்-ஏ: 2 அடித்தளங்கள் கொண்ட வாகன நிறுத்துமிடம் 184-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் 96 நான்கு சக்கர வாகனங்களுக்கான வசதிகளை வழங்கும். தரைத்தளத்திலிருந்து 7வது தளங்கள் வரை வணிக / அலுவலக இடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் பெருநிறுவன அலுவலகங்கள், வரவேற்பு ஓய்வறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான பிரத்யேக இடங்களும் அமைய உள்ளன.
கோபுரம்-பி: 2 அடித்தளங்கள் கொண்ட வாகன நிறுத்துமிடம் 318 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 96 நான்கு சக்கர வாகனங்களுக்கான வசதிகளை வழங்கும்.
தரைத்தளத்திலிருந்து ஏழாவது தளங்கள் வரை சில்லறை விற்பனை இடங்கள், வரவேற்பு ஓய்வறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான பிரத்யேக இடங்கள் அமைய உள்ளன.
The post ரூ.151 கோடியில் வணிக வளாகத்துடன் மந்தைவெளி பேருந்து முனையம்: மெட்ரோ நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.