* என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார்
* குலசாமி என கூறி நெஞ்சில் குத்தினார்
திண்டிவனம்: சமரச பேச்சுவார்த்தை டிராவில் முடிந்ததாக கூறி உள்ள ராமதாஸ், நிர்வாகிகளை சந்திக்கவிடாமல் மானபங்கப்படுத்திவிட்டார், என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார், குலசாமி என கூறி நெஞ்சில் குத்தினார் என்று அன்புமணி மீது மீண்டும் சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமகவில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே அதிகாரப்போட்டி உச்சகட்டத்தை எட்டியது. இதையடுத்து கடந்த மாதம் 29ம் தேதி தைலாபுரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணி மீது சரமாரி குற்றச்சாட்டுகளை கூறினார்.
தொடர்ந்து, அன்புமணி ஆதரவு 55 மாவட்ட செயலாளர்கள், 33 மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில, ஒன்றிய, நகர, வன்னியர் சங்கம் என பல்வேறு அணிகள் நிர்வாகிகளை அதிரடியாக நீக்கி, புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்தார். இதையடுத்து பாஜவின் சமரச முயற்சியால் அன்புமணியும், அவரைத் தொடர்ந்து பாஜ தூதர்களாக ஆடிட்டர் குருமூர்த்தி,சைதை துரைசாமி ஆகியோரும் ராமதாசை சந்தித்து பேசினர். ஆனால், அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் பொதுக்குழுவை கூட்டி ஆதரவை திரட்ட அன்புமணி திட்டமிட்டுள்ள நிலையில், ராமதாசும் பொதுக்குழுவை கூட்டி பலத்தை நிரூபிக்க தயாராகி வருகிறார்.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனக்கும், செயல் தலைவருக்கும் (அன்புமணி) போய்க் கொண்டிருக்கிற பிரச்னைகள் முழுசும் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. சிறந்த ஆளுமைகள் உள்ள 2 பேர், சமரச பேச்சுவார்த்தைக்காக அவர்கள் இங்கே வந்தார்கள், நான் அங்கே போனேன். பேசினோம், பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடைசியில் டிராவில் முடிஞ்சு போச்சு, ஒரு முடிவுக்கு வரல. இதற்கு முன்பாக 14 பஞ்சாயத்துக்கள் நடந்தது. நான் தொடங்கிய 34 அமைப்புகள்.
அந்த 34 அமைப்புகளிலே ஒன்றிரண்டு பேரை அல்லது 4 பேர் எனக்கு பஞ்சாயத்து பண்ண வந்தார்கள். என்ன அதிசயம் அனைவரும் ஒரே விதமான தீர்ப்பையே சொன்னார்கள். என்ன தீர்ப்பு என்றால், நான் இங்கே இருந்து கொண்டு கட்சியை வளர்ப்பது, அவர் (அன்புமணி) வெளியே போய் மக்களை பார்ப்பது என்ற தீர்ப்புதான். பிறகு மற்ற 2 பேரும் வந்தார்கள். அவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர தயார் என கூறினேன். அதற்காக கௌரவ தலைவர், சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் இருவரையும் நீங்கள் போய் பார்த்துவிட்டு வாருங்கள்..
நான் சொல்றது மாநாட்டுக்கு 15 நாட்களுக்கு முன்பு, பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறேன் என சொல்லி அனுப்பினேன். அவர்களும் காலையில் உங்களை பார்க்க வருகிறோம் என்று அன்புமணியிடம் சொன்னார்கள். ஆனால், அவர் வரவேண்டாம், போனிலே சொல்லுங்கள் என கூற அது சிறப்பாக இருக்காது என கூறியுள்ளனர். மேலும் அய்யா மாநாடு மேடையிலேயே எழுதி கொடுக்கிறார் என்று சொல்கிறார் என்று கூறியபோது, அதற்கு அவரை நம்ப முடியாது என தெரிவித்துள்ளார். ஆக நான் தயாராக இருந்தும் அப்படி நடந்தது.
மாவட்ட செயலாளர்கள் வருகையை தடுத்து நிறுத்தி என்னை பார்க்கக் கூடாது என்று அவரே ஒவ்வொருவருக்கும் (அன்புமணி) தொலைபேசியில் பேசி என்னை மானபங்கம் செய்தார். அன்று அமைதி காத்திருந்தால் அதிகாரம் தானாக அன்புமணிக்கு வந்திருக்கும். ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கும் அதிகாலை 3 மணி வரை தொலைபேசியில் பேசி, போகாதீர்… போகாதீர்… என்றார். தப்பித்தவறி 8 பேர் மட்டுமே வந்தனர். மீதி பேர் என்ன நடக்குதுன்னு, ஏது நடக்குதுன்னு தெரியாம புரியாம நின்னுட்டாங்க. மாவட்ட செயலாளர்களிடம் ஒரு பொய்யான தகவலை சொல்லி என்னை அடிப்படை உறுப்பினரில் இருந்து எடுக்கப் போகிறார், இதற்கு உனக்கு சம்மதமா?
அதனால நீ போகாதே என்று கேள்வி எழுப்பி தடுத்துள்ளார். கட்சியிலிருந்து அவரை எடுக்க வேண்டிய அவசியம் என்ன?. இதை ஒரு மூடன் செய்வானா, ஒரு முட்டாள் செய்வானா, ஒரு முண்டம் செய்வானா, ஒரு மூர்க்கன் செய்வானா இந்த வேலையை?. அதனால அந்த மாதிரியான நிகழ்ச்சி இல்லாமல் ஒத்துப்போயிருந்தால் ஓரிரு ஆண்டுகளில் நானே முன்னின்று அவருக்கு மீண்டும் முடி சூடியிருப்பேன். 3 ஆண்டுகளுக்கு முன்பு முடிசூட்டுவிழா நடந்தது. அப்போதுதான் அவர் தலைவரானார். அன்று நான் ஆனந்த கண்ணீர் விட்டேன்.
46 ஆண்டுகள் உழைத்து உருவாக்கி கட்டிக் காத்த கட்சியில் இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைமை ஏற்க எனக்கு உரிமை இல்லையா?. எனக்கு உரிமை இல்லையா என்று கேட்பதே எனக்கு அவமானமாக இருக்கிறது. ஒவ்வொரு செங்கல் ஆக பார்த்துப் பார்த்துக் கட்டிய பாட்டாளி மக்கள் கட்சி என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகின்ற அளவுக்கு அவர்களுடைய செயல்பாடுகள் இருந்தன, இருக்கின்றன. எனது மனக் குமுறல்கள் என்னவென்றால், என்னை எங்கள் குலசாமி என்று சொல்லிக் கொண்டு என் நெஞ்சுக் கொளைகளில் குத்துகிறார்கள். எங்களுக்கு எல்லாம் அய்யாதான் என்று சொல்லிக் கொண்டே என்னை அதல பாதாளத்தில் தள்ள நினைக்கிறார்கள். அனைத்தும் அய்யாதான் என்று சொல்லிக் கொண்டே என்னை அவமானப்படுத்துகிறார்கள்.
அய்யாவின் புகழை, பெருமையை, பேசுவதையே எங்கள் பெருமை என்று சொல்லிக் கொண்டு சிறுமைப்படுத்துகிறார்கள், அய்யாவின் லட்சியமே எங்கள் லட்சியம் என்று சொல்லிக் கொண்டே என்னையே இலக்காக்கி குறிவைத்து தாக்குகின்றனர். இதையெல்லாம் நான் உருவாக்கிய சமூக நீதிப்பேரவை ஊடக வலைதள பிரிவும் எனக்கெதிராக செய்கிறது. என் கைவிரல் கொண்டே நான் என் கண்ணைக் குத்திக் கொண்டேன். உயிருள்ள என்னை எல்லா வகையிலும் உதாசீனம் செய்துவிட்டு என் உருவப்படத்தை மட்டும் வைத்து உற்சவம் செய்கின்றனர். என்னை நடைபிணம் ஆக்கி என் பெயரில் நாடு முழுவதும் நடைபயணம் செய்யப் போகிறார்களாம். இது எல்லாமே நாடகம், அதில் ஒவ்வொருவரும் நடிகர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
* 2026 தேர்தல் முடியும் வரை நானே தலைவர்
நிருபர்: ஒரு மாத காலமாக கட்சியில் நீடிக்கும் குழப்பத்திற்கு தீர்வாக அன்புமணிக்கும், தொண்டர்களுக்கும் நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்?
ராமதாஸ்: நீங்கள் சொல்கிற மாதிரியே இந்த தேர்தல் (2026) முடிந்த பிறகே எல்லா வாய்ப்பும் இருக்கு. அதுவரைக்கும் நானே தலைவர். என்னை தலைவராக ஏற்பதுதான் ஒரே தீர்வு. அதன்பிறகு எல்லாவற்றையும் வாரிக்கொண்டு செல்லட்டும். அதாவது நிர்வாகக் குழுவில் உள்ள 19 பேரில் ஒருவர் இவரை (அன்புமணி) லேசாக விமர்சித்தார். அப்போது அவர் பயந்தார். ஏனென்றால் துப்பாக்கி அவரிடம் இருந்திருந்தால் சுட்டே இருப்பார். அப்படிப்பட்ட சூழல். அப்போதுதான் நான் சொன்னேன். நமது தலைவருக்கு தலைமைப் பண்பு இல்லை என்று சொன்னேன். யாரிடமும் தொலைபேசியில் அவர் பேச மாட்டார். இப்போதுதான் கூவிகூவி அழைக்கிறார். வாங்க வந்து பிரியாணி சாப்பிட்டு போங்க… களைப்பா இருக்கிறீங்க… தண்ணீர் குடிங்க… ஒரு போன் நம்பர் உங்களுக்கு கொடுக்கிறேன். அந்த நம்பரில் அழையுங்கள் என்கிறார்.
* பொதுக்குழுவை கூட்டி விரைவில் புதிய தலைவர்
நிருபர்: பாமக பொதுக்குழு நடந்து 3 வருடம் ஆகிவிட்டது. அப்படி பார்க்கும்போது பாமக பொதுக்குழுவால் நியமிக்கப்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை நீக்க முடியுமா?.
ராமதாஸ்: 3 வருடத்தில் அவரது பதவி முடிந்துவிட்டது. தலைவர் என்பது 3 வருடம்தான். மறுபடியும் ஒரு பொதுக்குழு கூடி தேர்ந்தெடுக்கும். பொதுக்குழுவை கூட்டி விரைவில் தேர்ந்தெடுப்போம். நிறுவனர் எப்போ நினைக்கிறாரோ அப்போது பொதுக்குழுவை கூட்டுவார்.
* தவெகவுடன் கூட்டணியா?
கேள்வி: தவெகவுடன் பாமக பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி வருவகிறதே?
பதில்: இதுவரை இல்லை. கட்சியின் மூத்த தலைவர்களுடன் பேசியபிறகு முடிவு செய்வோம்.
நிருபர்: பல்வேறு பதவிகளை கட்சியில் நீங்க போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் அன்புமணி தலைவராக நீடிப்பார் என வடிவேல் ராவணன் அறிக்கை விட்டிருக்கிறாரே?
ராமதாஸ்: ஆமாம்.. ஆமாம்.. எங்கள் பொதுச்செயலாளர் எங்கே இருக்கிறார் என்று உங்களுக்குத்தான் தெரியும். நாங்கள் அவரை தேடிக் கொண்டிருக்கிறோம். அவர் விண்ணில் இருக்கிறாரா, எங்கே தரையில் இருக்கிறாரா, 7 ஸ்டார் ஓட்டலில் இருக்கிறாரா? 5 ஸ்டார் ஓட்டலில் இருக்கிறாரா? பாரீன் சரக்கோடு இருக்கிறாரா அல்லது சாதாரண தண்ணீர் குடித்துக் கொண்டு இருக்கிறாரா என்பது தெரியவில்லை. பொதுச்செயலாளரை கண்டுபிடித்து கொடுத்தால், ரூ.100 பரிசு தருகிறேன். தொகை குறைவாக இருக்கிறது என்று எண்ண வேண்டாம், கண்டுபிடித்து தாருங்கள் என பதிலளித்தார். இதற்கிடையே, சென்னையில் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகளில் சிலர் நேற்று அன்புமணியை சந்தித்து நியமன கடிதம் பெற்றபோது, அவர்களுடன் வடிவேல் ராவணனும் உடனிருந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
* அன்புமணி நீக்கமா?
நிருபர்: இந்த பேச்சுவார்த்தை சரிப்பட்டு வரவில்லை என்றால், அன்புமணியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விடுவீர்களா?.
ராமதாஸ்: அன்புமணியை நீக்க மாட்டேன். அதை செய்ய மாட்டேன்.
நிருபர்: தலைவர் மாற்றப்பட்டு விட்டார் என்று முறைப்படி தேர்தல் ஆணையத்தில் கடிதமோ அல்லது தகவல் தெரியப்படுத்த வேண்டுமே?.
ராமதாஸ்: ஆமாம். அதெல்லாம் சட்டங்கள், செய்துதான் ஆக வேண்டும். ஆனால் இந்த சிக்கல் போய்க்கொண்டு இருப்பதால் இதெற்கெல்லாம் ஒரு தீர்வு வந்து முடிந்துவிடும் என்பதால் அதை கொடுக்கவில்லை.
* யாருக்கு அதிகாரம்?
நிருபர்: பாமக நிறுவனருக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் அதிகாரம் கிடையாது. தலைவரான எனக்குதான் அந்த அதிகாரம் இருக்கிறது. அதனால் நீக்கப்பட்ட நீங்கள் அனைவருமே பணிகளை செய்யுங்கள் என அன்புமணி கூறியுள்ளார். அப்படியெனில் பாமகவில் யாருக்கு அதிகாரம்??
ராமதாஸ்: அதுதான் நான் சொல்லி விட்டேனே. நான்தான் நிறுவனர், தலைவர். ஓட்டுப்போடுகிற மக்கள், வாக்களிக்கிற மக்கள். அவர்கள் 18 வயதோ, 90 வயதோ அவர்கள் எல்லோரும் என்பக்கம்தான் இருக்கிறார்கள். இதை ஒரு கிராமத்தில் சென்று சொல்லிப் பாருங்கள். எனக்கு மக்கள்தான் முக்கியம், நாடுதான் முக்கியம். பாமக ஒரு சாதிக்கான கட்சி அல்ல. தமிழ்நாட்டில் உள்ள 324 சாதியினர் சம நிலையோடு, இருக்க வேண்டும். சமூக நீதி பெற வேண்டும், கல்வி பெற வேண்டும், பொருளாரத்தில் சிறந்து விளங்க வேண்டும் என பாடுபட்டு வருபவன் இந்த ராமதாஸ்.
* ராமதாசுக்கே பிறகே அன்புமணி
‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. இந்த காலத்துக்கு அது பொருந்தாது. தந்தைக்கு பிறகே தனயன், அய்யாவுக்கு பிறகே அன்புமணி. இது இப்போது எல்லோரும் சொல்லுகின்ற வார்த்தை. குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம். ஆனால், தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. இதுவே நீதி, நேர்மை, தர்மம் ஆகும். இதுவே உளவியல் நியதியும் ஆகும். இதுவே சாஸ்திர சம்பிரதாயமும் ஆகும்’ என்று ராமதாஸ் கூறினார்.
* 7 ஆண்டுகளுக்கு முன்பே அன்புமணிக்கு தலைவர் ஆசை -டெல்லியில் நடந்த பேச்சு
ராமதாஸ் கூறுகையில், ‘நான் 7 வருடத்துக்கு முன்பே டெல்லிக்கு மோடியை பார்க்க சென்றிருந்தேன். கௌரவ தலைவர் ஜி.கே.மணி, அன்புமணி என நாங்கள் 3 பேரும் சென்றோம். அப்போது அன்புமணி நான் கட்சியைப் பார்த்துக்கிறேன் என்றார். எனக்கு ஒன்னும் புரியல. பிறகு விமானத்தில் ஏறினோம். இருக்கையிலே எனக்கு பின்னால் அவர் உட்கார்ந்திருந்தார். அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. நான் ஒன்னும் பேசவில்லை. அப்பா நான் தப்பா சொல்லி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்றார். அப்போது 2 சொட்டுக் கண்ணீர் அங்கு உட்கார்ந்தபடி விட்டேன். பின்னர் அங்கிருந்து மீனம்பாக்கம் வந்து எதுவும் பேசாமல் தைலாபுரம் வந்தேன். ஆக அப்போதே அந்த மாதிரி (கட்சியை கைப்பற்றும்) ஒரு எண்ணம் இருந்திருக்கிறது. அதன்பிறகு அவர் எப்படி தலைவர் ஆனார் என்பது சிலருக்கு தெரியும், ஒருசிலருக்கு தெரியாது’ என்றார்.
கேள்வி: உங்கள் கூட இருக்கிற அன்பழகன்தான் (மாநில தலைமை நிலைய செயலாளர்) பணம் வாங்கிக் கொண்டு மாவட்ட நிர்வாகிகளை நியமிக்கிறதா? அன்புமணி கூறியிருக்கிறார். அது உண்மை தானா?
ராமதாஸ்: (அருகில் அமர்ந்திருந்த அன்பழகனை பார்த்து, நீ வாங்கினாயா, எவ்வளவு வாங்கின நீயே சொல்லு… என்று கூற சிரிப்பொலி எழுந்தது) பக்கத்தில்தானே இருக்கிறார்… கேளுங்களேன்… அன்பழகன் பணம் வாங்கிவிட்டு இந்த நாட்டிலேயே இல்லை, சுற்றிக் கொண்டே இருக்கிறார். சிங்கப்பூர், அமெரிக்கா எல்லாம் போயிட்டாருன்னு சொன்னாங்க. அப்புறம் பார்த்தா இங்குதான் இருக்கிறார், நிற்கிறார். அவரிடம்தான் கேட்கணும்.
* அதிமுக நிலைதான் பாமகவுக்கா?
நிருபர்: அதிமுகவிலும் இந்த மாதிரி சண்டை நிலவியபோது குருமூர்த்திதான் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த கட்சி நான்காக உடைந்துவிட்டது. அந்த மாதிரியான ஒரு சூழல் பாமகவுக்கும் வந்து விடுமோ என்ற பயம் உங்கள் தொண்டர்கள் மத்தியிலும் இருக்கிறதே?
ராமதாஸ்: உங்களது நல்லெண்ணம் இதுதானா?
நிருபர்: கூட்டணி உள்ளிட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியும், இப்படிப்பட்ட பிரச்னை இருப்பதால் பாமகவில் யாரை அணுக வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளதே?
ராமதாஸ்: பாமகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்புகின்ற கட்சிகளுக்கு எல்லாம் தெரியும். நல்லது, கெட்டது எல்லாம் அவர்களுக்கு தெரியும். அதனால் அவர்கள் முடிவு செய்வார்கள்.
* அன்புமணிக்கு பதவி கேட்டு வந்த செளமியா மாமா என்றார்… ஏம்மா என்றேன்…
ராமதாஸ் கூறுகையில், ‘மனவருத்தத்தில் இருந்த நான் ஒருநாள் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தேன். அங்கு வந்த சௌமியா, மாமா என்றார்… ஏம்மா என்றேன்… இன்று புதன்கிழமை, அடுத்த புதன்கிழமை நாள் நன்றாக இருக்கிறது, மண்டபம் பார்த்துவிட்டேன். ஓய்வறியா உழைப்பாளி, தியாகச் செம்மல் ஜி.கே.மணியை மாற்றிவிடலாம் என்று. அவரும் வந்தார், நானும் சொன்னேன். அவருக்கு ஜோசியத்தில் நம்பிக்கை உண்டு. அதனால் அதற்கு அவர் ஒன்றரை மாதம் பொறுத்து செய்யுங்கள் என்று சொன்னார். நானும் சரி என்றேன். பிறகு சௌமியாவையும் வரவழைத்து கூறினேன். பிறகு ஒன்றரை மாதத்துக்குபின் அந்த நாளும் வந்தது. முடிசூட்டும் விழாவும் நடந்தது. அப்போது அவரை தேர்ந்தெடுத்தோம். அவரை ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தேன். என் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் யாரும் கட்சி நிகழ்ச்சிக்கோ, மற்ற அரசியலிலோ ஈடுபடக் கூடாது என்று சொன்னேன். ஆனால், இப்போது நடப்பதெல்லாம் உங்களுக்கு தெரியும்’ என்றார்.
கேள்வி: இவ்வளவு ஆண்டுகளாக நிறுவனராக இருந்துதான் தேர்தலை சந்தித்திருக்கிறீர்கள். ஆனால் இந்தமுறை தலைவராக இருந்து தேர்தலை சந்திக்க நினைப்பதற்கான காரணம் என்ன?.
பதில்: இந்த கட்சியையே சரியாக அவர் வழிநடத்தல என்பதுதான். ஒரு 40 தொகுதி, 50 தொகுதி என தேர்ந்தெடுத்து வேலை செய்தோம். ஆனால் அதற்கு கொஞ்சம்கூட அவர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அதனால நாம கொஞ்சம் வலுவாக இருந்தால்தான் கூட்டணி பேசுவதற்கு நம்மிடம் வருவார்கள். நாமும் வெற்றி பெறலாம். அவர்களும் வெற்றி பெறலாம். அதற்கு அவர் உழைப்பதற்கு தயாராக இல்லை.
என்னிடம், தர்மபுரியில் அவர் நிற்கப்போகிறார் என்று பல ஆண்டுகளாக சொல்லி வந்தார். அங்குதான் நின்றார். கடைசியாக நடந்த தேர்தலின்போது இங்கு வந்தார், அவரிடம் நான் தர்மபுரியில் யார் நிற்கப் போவது என்று கேட்டேன். அதற்கு நான்தான்… நான்தான்… நான்தான்.. என்றார். அப்புறம் பார்த்தா… காலையிலே பாரத் மாதா கி ஜே என்ற சத்தம். அப்புறம்தான் தெரிந்தது. பிறகு அறுசுவையுடனான பதார்த்தங்கள் எல்லாம் போனது. அவருக்கு (அண்ணாமலைக்கு) டிபன் கொடுத்தாங்க, அதுவும் எனக்கு தெரியாது. அதன்பிறகு என்னிடம் நான் நிற்கவில்லை, சவுமியாதான் நிற்குதுன்னு சொன்னார்.
அதற்கு நான் பொதுக்குழுவில் பேசியபடி இந்த மாதிரியெல்லாம் நம்ம குடும்ப பெண்கள் வேண்டாம் அப்படின்னு சொன்னதற்கு எதிர்மாறாக ஏன் நிற்கக் கூடாதா? என்றார். அதன்பிறகு தர்மபுரிக்கு வேட்பாளரையே அறிவித்து விட்டோம். அரசாங்கம் என்ற ஒருநபரை. அதுவும் ஊடகங்களில் எல்லாம் வந்துவிட்டது. அப்புறம் எனது சின்ன மகள், பெரிய பேரன் எல்லோரும் சேர்ந்து என்கிட்ட கெஞ்சி, கூத்தாடி, வாதாடி எல்லாம் பண்ணி, சரி எல்லோரும் இவ்வளவு நேரம் கூத்தாடுகிறார்கள், வாதாடுகிறார்கள், பேசுகிறார்கள் என்பதால் சரி நின்றுட்டு போட்டும் என்றேன். அவர்களும் அன்புமணியிடம் அதை சொல்ல, அப்பா மாற்றிக் கொள்ள மாட்டாரு… அவர் உறுதியாக நிற்பாரு… நம்ப முடியாதுன்னு…, அப்புறம் உண்மையாகத்தான் சொல்றேன் என்றதும் சவுமியா வந்தது. அப்புறம் பேசி நானும் கையெழுத்து போட்டேன்.
* முயலுக்கு 4 கால்னு சொன்னா அன்புமணி 3 கால்னு சொல்வாரு…
கேள்வி: அன்புமணி உங்களது பேச்சுக்கு கட்டுப்பட்டு இருந்தார், தற்போது கட்டுப்பாட்டை மீறி மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு பாஜ பின்புலத்தில் இருப்பதாக நினைக்கிறீர்களா?
பதில்: பின்புலம் எதுவும் இல்லை. இன்னொன்னு அவர் யார் சொன்னாலும் கேட்க மாட்டார். நான் உங்களிடம் கேட்கிறேன். முயலுக்கு எத்தனை கால்கள் என கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள், 4 கால்கள் என்று, ஆனால் அவர் 3 கால்கள்தான் என்று சொல்வார். இதை நிறுத்தி 4 கால்தான் என்று சொன்னால் பிரச்னையே முடிஞ்சு போயிடும். தந்தை என்னை செயல் தலைவராக இருக்க சொல்லி இருக்கிறார். நான் செயல் தலைவராக இருந்து செயல்படுவேன். அதுவும் வேண்டாம் என்று அவர் சொன்னால் சாதாரண தொண்டனாக இருந்து அவர் காட்டும் வழியில் செல்வேன் என்று அன்புமணி கூறியிருக்க வேண்டும். ஆனால் அந்த நிலையில் தற்போது அவர் இல்லை.
* அன்புமணி விமர்சன வீடியோ வைரல்: ராமதாஸ் பதிலடி
பாமகவில் சமூக நீதி பேரவை வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவராக இருந்த பாலுவை நீக்கிவிட்டு கோபி என்பவரை ராமதாஸ் தலைவராக நியமித்துள்ளார். இதுதொடர்பாக அக்கட்சியின் வழக்கறிஞர்கள், நிர்வாகிகள் நேற்று முன்தினம் சென்னையில் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் அன்புமணி உரையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் அன்புமணி, இன்னைக்கும் ஒரு அறிவிப்பு வந்திருக்கு.. திடீரென்று வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் தலைவராக ஒருவரை நியமனம் செய்திருக்கிறார்கள். எனக்கு இது மிகுந்த அதிர்ச்சி. நியமனம் செய்யப்பட்ட அவர் என்னை பொறுத்தவரை அடிப்படையிலே ஒரு வழக்கறிஞராக கூட தகுதியில்லாதவர். ஒரு வழக்கறிஞருக்கான தன்மை எதையும் அவரிடம் நான் பார்த்தது கிடையாது. எந்த தகுதியும் கிடையாது.
நம்முடைய வழக்கறிஞர் பாலு தலைமையிலே 22 ஆண்டுகாலமாக வழக்கறிஞர் சமூக நீதி பேரவை மிக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாங்கள் கட்சி சார்பிலே, களத்திலே வேகமாக செயல்பட எங்களுக்கு தைரியம் கொடுப்பது வழக்கறிஞர்களும், சமூக நீதி பேரவையும்தான். எதுவந்தாலும் பார்த்துக் கொள்ளலாம், பாலு இருக்கிறார் என்று கூறியுள்ளார். அவர் பேசும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்து உள்ள ராமதாஸ், ‘பாலு சரியில்லை என்பதாலே சமூக நீதிப் பேரவை தலைவரை மாற்றிப் போட்டு இருக்கிறோம். ஏனென்றால் ஒருத்தரே இருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு முன்பும் சமூக நீதிப் பேரவை நிர்வாகிகள் இருந்தனர். அவர்களும் இவரை விட திறமைசாலிகள். பிறகு வேறு கட்சிக்கு போய் விட்டார்கள். ஆனால் இன்றைக்கும் என்னுடன் பாசமாக இருக்கிறார்கள்’ என்றார்.
The post சமரச பேச்சு டிராவில் முடிந்தது: அன்புமணி மீது ராமதாஸ் மீண்டும் சரமாரி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.