* 5 மருத்துவ மாணவர்களும் பலி 44 பேர் படுகாயம்
* குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்த சோகம்
அகமதாபாத்: அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு நேற்று மதியம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், வானில் பறக்க துவங்கிய 30 வினாடிகளில் விழுந்து வெடித்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமான பயணிகள் உட்பட 246க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் விமானம் மோதி வெடித்ததில் 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்தனர். 44 பேர் படுகாயமடைந்தனர். விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் விபத்தில் பலியாகி உள்ளார். உலகையே உலுக்கி உள்ள இந்த கோர விபத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார்.
அப்போது, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட விமானி, விமான பயணத்தில் உச்சகட்ட அவசர நிலையை குறிக்கும் ‘மேடே’ என்ற அபாய அழைப்பை விடுத்தார். அடுத்த சில விநாடிகளில் விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்து சிதறியது. விமான நிலையத்தில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள மேகனிநகரில் பிஜே மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி கட்டிடத்தின் மீது விமானம் மோதி வெடித்தது. வானில் விமானம் பறக்க தொடங்கிய 30 வினாடிகளில் இவை எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.
இந்த விமானம் அகமதாபாத்தில் இருந்து எங்கும் நிற்காமல் நேரடியாக லண்டன் செல்வதால் ஒரு லட்சம் லிட்டருக்கும் அதிகமான எரிபொருள் விமானத்தில் இருந்தது. இதனால் விமானம் விழுந்த அடுத்த நிமிடம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. மிகப்பெரிய தீப்பிழம்புடன் விமானத்தின் முன்பகுதி, வால்பகுதி தவிர மற்ற அனைத்து பகுதிகளும் எரிந்து சாம்பலாகின. வானை முட்டும் அளவுக்கு கரும்புகை அந்த பகுதியில் எழுந்தது. விமானத்தின் மூக்கு பகுதி மாணவர் விடுதியின் உணவருந்தும் பகுதியிலும், வால் பகுதி மற்றொரு விடுதி கட்டிடத்தின் விளிம்பிலும் மோதின.
அதிகளவு எரிபொருளுடன் விமானம் வெடித்து சிதறியதால் அப்பகுதி முழுவதும், எரிந்து கருகிய நிலையில் விமான பயணிகளின் சடலங்கள் சிதறிக் கிடந்தன. பலரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் இருந்த 246 பேர் பலியாகினர். ஒரே ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விமானத்தில் பயணித்த பாஜ மூத்த தலைவரும், குஜராத் முன்னாள் முதல்வருமான விஜய் ரூபானியும் உயிரிழந்தார்.
மேலும், மருத்துவ மாணவர் விடுதியில் இருந்த 5 மாணவர்கள் பலியாகினர். 44 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த சமயத்தில் மேகனி நகர் பகுதியில் மருத்துவ மாணவர்கள் உட்பட பொதுமக்கள் 200 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இதில், 25 மாணவர்கள் இறந்திருக்கக் கூடும் எனவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின. இந்த விமான விபத்து தொடர்பான விபத்து வீடியோ சமூக ஊடகங்களில் பரவி உலகையே உலுக்கி உள்ளது. விபத்தில் பலியானோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும், உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் பயணித்த பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டினர், 7 பேர் போர்த்துகீசியர்கள் மற்றும் ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் என ஏர் இந்தியா நிறுவனம் கூறி உள்ளது. விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு தருவதாகவும் சேதமடைந்த மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தை சீரமைத்து தருவதாகவும் ஏர் இந்தியாவின் டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. விபத்து தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக ஏர் இந்தியா மற்றும் போயிங் நிறுவனங்கள் கூறி உள்ளன. தேவைப்பட்டால் தங்களின் விசாரணை குழுவை அனுப்பி வைப்பதாக அமெரிக்காவும் உதவிக்கரம் நீட்டி உள்ளது.
* அகமதாபாத் விமானநிலையம் தற்காலிகமாக மூடல்
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. அனைத்து விமான நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. அதன்பின் மாலை 4.05 மணிக்கு மேல் சிறிய அளவிலான விமான போக்குவரத்து தொடங்கியது. அதுவரை அகமதாபாத் செல்லும் அத்தனை விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன.
* ஜூன் விமான விபத்து மாதம்
2025 ஜூன் மாதம் விமான விபத்துகள் நிறைந்த மாதமாகத்தான் அறியப்படுகிறது. ஜூன் பிறந்து இன்றுடன் 13ஆம் தேதிதான் ஆகிறது. அதற்குள் அகமதாபாத் விபத்தையும் சேர்த்து 25 விமான விபத்துகள் நடந்துள்ளன. விமானங்கள், சிறிய விமானங்கள், ஹெலிகாப்டர்கள் போன்றவை விபத்தில் சிக்கி உள்ளன. அதன் விவரம்:
ஜூன் 1 அமெரிக்காவின் ஹாம்ப்ஷெயர், ஹெவனில் விபத்து
ஜூன் 2 அமெரிக்காவில் 2 இடங்களில் விபத்து
ஜூன் 3 வெனிசுலாவில் 2 இடத்திலும், அமெரிக்காவிலும் விபத்து
ஜூன் 4 அமெரிக்காவின் காபரூக் நகரில் விபத்து
ஜூன் 5 அமெரிக்காவில் 3 நகரங்களில் விபத்து
ஜூன் 7 அமெரிக்காவின் 4 நகரங்களில் விபத்து
ஜூன் 8 அமெரிக்காவின் 6 நகரங்களில் விபத்து
ஜூன் 10 அமெரிக்காவின் கமாஸ் நகரில் விபத்து
ஜூன் 12 இந்தியாவின் அகமதாபாத் நகரில் விபத்து
* மங்களூரு சம்பவத்துக்கு பிறகு நடந்த பெரிய விபத்து
துபாயில் இருந்து ஏர் இந்தியா போயிங் 737 விமானம் கடந்த 2010 மே மாதம் 22ம் தேதி மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறில் மலைப்பகுதியில் மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 166 பயணிகளில் 158 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்துக்கு பிறகு அகமதாபாத்தில் நேற்று பெரிய விபத்து நடந்துள்ளது.
* 1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் வெடித்து சிதறியது
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பயண தூரம் சுமார் 6,874 கிமீ ஆகும். இந்த தூரத்தை ஏர் இந்தியாவின் போயிங் ட்ரீம்லைனர் விமானம் 9 மணி நேரத்தில் சென்றடையும். இந்த ரக விமானங்களில் வானில் பறக்கும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சுமார் 10 ஆயிரம் லிட்டர் எரிபொருள் செலவாகும். இதனால், விபத்துக்குள்ளான விமானத்தில் மொத்த கொள்ளவான 1.26 லட்சம் லிட்டர் விமான பெட்ரோல் நிரப்பப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் புறப்பட்ட 30 வினாடிகளில் விமானம் விழுந்து நொறுங்கியபோது மொத்த எரிபொருளும் ஒரே நேரத்தில் தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதனால், ஒரே நேரத்தில் பல குண்டுகள் வெடித்தது போன்ற பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது. விமான பயணிகளில் பெரும்பாலானவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி போய்விட்டன.
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பன்ஸ்வாரா பகுதியைச் சேர்ந்த டாக்டர் கோமி வியாஸ் என்பவர் உதய்பூர் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவரது கணவர் டாக்டர் பிரதீக் ஜோஷி லண்டனில் பணி புரிந்து வந்தார். இதனால், தனது 3 குழந்தைகளுடன் லண்டனிலேயே கணவருடன் செட்டிலாக முடிவு செய்த கோமி வியாஸ் தனது வேலையை ராஜினாமா செய்தார். குடும்பத்துடன் மீண்டும் ஒன்று சேரும் மகிழ்ச்சியில் கோமி வியாஸ், பிரதீக் ஜோஷி தம்பதியர் தங்கள் 3 குழந்தைகளுடன் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தனர். கடைசியாக விமானத்தில் இருந்தபடி அவர்கள் மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்து தங்கள் சமூக ஊடக கணக்கில் பகிர்ந்தார். திடீரென ஏற்பட்ட விபத்தில் இவர்கள் குடும்பமே உடல் கருகி பலியாகினர்.
அகமதாபாத் விமான விபத்தில் அத்தனை பேரும் பலியாகி இருக்கக்கூடும் என்ற நிலையில் அதிர்ஷ்டவசமாக ஒரு பயணி மட்டும் உயிர் தப்பி உள்ளார். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியான அவர் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்ற விஸ்வாஷ் குமார் ரமேஷ்(40). அவரது குடும்பம் 20 ஆண்டுகளாக இங்கிலாந்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள தனது உறவினர்களை சந்திப்பதற்காக விஸ்வாஷ் குமார் ரமேஷ் இங்கு வந்தார். மீண்டும் இங்கிலாந்து செல்ல, தனது சகோதரர் அஜய்குமார் ரமேசுடன்(45) புறப்பட்டார். ஏர் இந்தியா விமானத்தில் 11ஏ என்ற இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார்.
எல்லாம் மிக விரைவாக நடந்தது. இந்த விபத்தில் எனக்கு மார்பு, கண்கள், கால்களில் காயம் ஏற்பட்டது. விமானத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட நான் எழுந்தது பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து பயந்து விட்டேன். என்னைச் சுற்றி உடல்கள் இருந்தன. பீதியில் நான் எழுந்து ஓடினேன். என்னைச் சுற்றிலும் வெடித்துச்சிதறிய விமானத்தின் பாகங்கள் கிடந்தன. யாரோ என்னைப் பிடித்து ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார்கள். எனது சகோதரர் அஜய் விமானத்தில் வேறு வரிசையில் அமர்ந்திருந்தார். இப்போது அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தயவுசெய்து அவரைக் கண்டுபிடிக்க எனக்கு உதவுங்கள்’ என்று கூறினார்.
* கொடூரமான காட்சிகளால் வேதனை: கார்கே
குஜராத்தின் அகமதாபாத்தில் பல பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்த பேரழிவு தரும் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இந்த கொடூரமான காட்சிகளைப் பார்ப்பது மனதை வேதனைப்படுத்துகிறது. பயணிகள், விமானி மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு எங்கள் மனமார்ந்த அனுதாபங்கள் மற்றும் பிரார்த்தனைகள். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்குமாறு காங்கிரஸ் நிர்வாகிகளை நான் கேட்டுக்கொள்கிறேன்.
* அமித்ஷா நேரில் ஆய்வு
அகமதாபாத் விமான விபத்து குறித்து நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் மோடி உத்தரவுப்படி, உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத் புறப்பட்டார். முன்னதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி மற்றும் அகமதாபாத் காவல்துறை ஆணையர் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். விபத்து நடந்த இடத்தை நேற்றிரவு அமித்ஷா பார்வையிட்டார்.
* என் மனம் உடைந்துவிட்டது ராகுல் காந்தி
அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய பயணிகள் மற்றும் விமானிகளின் குடும்பங்கள் உணரும் வலி, பதட்டம் கற்பனை செய்ய முடியாதது. இந்த கடினமான தருணத்தில் எனது எண்ணங்கள் அவர்கள் ஒவ்வொருவருடனும் உள்ளன. நிர்வாகத்தின் அவசர மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு உயிரும் முக்கியம், ஒவ்வொரு நொடியும் முக்கியம். இந்த விபத்தால் எனது மனம் உடைந்து விட்டது.
* இங்கிலாந்து மன்னர் சார்லஸ் அதிர்ச்சி
அகமதாபாத் விமான விபத்தில் 53 இங்கிலாந்து பயணிகள் உள்பட பலர் பலியானது குறித்து அறிந்ததும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,’அகமதாபாத்தில் நடந்த பயங்கரமான நிகழ்வுகளால் நானும் எனது மனைவி ராணி கமிலாவும் மிகவும் அதிர்ச்சியடைந்தோம்’ என்று தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் பற்றிய தகவலை வெளியிட டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகத்துடன் இணைந்து அதிகாரிகள் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* வார்த்தைகளால் விவரிக்க முடியாது: பிரதமர் மோடி
அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து குறித்து பிரதமர் மோடி கூறுகையில்,’ விமான விபத்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயத்தை உடைக்கிறது. இந்த விபத்து எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சோகமான நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பணியாற்றி வரும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளேன்’ என்று தெரிவித்தார்.
* நிலைகுலைந்து விட்டேன்: இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர்
அகமதாபாத் விமான விபத்தில் 53 பிரிட்டிஷ்காரர்கள் சிக்கினர். இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கூறுகையில்,’ பிரிட்டன் பிரஜைகளை ஏற்றிக்கொண்டு லண்டனுக்கு சென்ற விமானம் இந்தியாவின் அகமதாபாத் நகரில் விபத்துக்குள்ளான காட்சிகள் வெளியாகி என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. நிலைமை குறித்து எனக்குத் தொடர்ந்து தகவல் கிடைத்து வருகிறது. இந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
* நெஞ்சை பதற வைக்கும் பேரழிவு ஜனாதிபதி முர்மு
இது நெஞ்சை பதற வைக்கும் பேரழிவு. இந்த துயரமான விமான விபத்து குறித்து அறிந்து நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட மக்களுடன் உள்ளன. விவரிக்க முடியாத இந்த நேரத்தில் தேசம் அவர்களுடன் நிற்கிறது.
* எங்கு பார்த்தாலும் வெடித்து சிதறிய விமான பாகங்கள், மனித சடலங்கள்
விமான விபத்து நடந்த அகமதாபாத் பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவர்களின் விடுதி மற்றும் குடியிருப்புகளைச் சுற்றி மனித உடல்கள் சிதறிக் கிடந்தன. மேலும் வெடித்துச்சிதறிய விமான பாகங்கள் காணப்பட்டன. விமானம் கட்டிடத்தின் மீது மோதியபோது, ஒரு குண்டு வெடிப்பு போன்ற சத்தம் கேட்டது. ஒரே நேரத்தில் விமானமும் கட்டிடமும் தீப்பிடித்தன. விமானம் மருத்துவ விடுதியின் சாப்பாட்டு அறையில் விழுந்து நொறுங்கியது. மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதி கட்டிடங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதி முழுவதும் பெரும் புகைமண்டலமாக காட்சியளித்தது. இது பார்ப்பவர்கள் மனதில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.
* பலியானவர்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனை
விமான விபத்தில் பலரின் உடல் கருகி விட்டது. இதனால் பலியானவர்களை அடையாளம் காண முடியவில்லை. எனவே இறந்தவர்களின் அடையாளங்களை அறிய டிஎன்ஏ பரிசோதனைகள் நடத்தப்படும் என்று குஜராத் சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இறந்தவரின் பெற்றோர் அல்லது குழந்தைகள் போன்ற நெருங்கிய உறவினர்கள் அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் பிஜே மருத்துவக் கல்லூரியின் கசோட்டி பவனில் டிஎன்ஏ மாதிரிகளை வழங்க மாநில சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் தனஞ்சய் திவேதி அறிவித்தார்.
* விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு டாடா குழுமம் சார்பில் தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா குழும தலைவர் என் சந்திரசேகரன் இதைத்தெரிவித்தார். மேலும் விமான விபத்தில் சேதம் அடைந்த பிஜே மருத்துவ விடுதியைக் மீண்டும் கட்டிக்கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
* விமான விபத்திற்கான காரணம் என்ன?
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களில் இயந்திரக் கோளாறு அல்லது பறவை மோதியது ஆகியவையும் இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு கமாண்டர் கூறுகையில்,’ விமான விபத்தின் வீடியோக்களைப் பார்க்கும்போது, புறப்படுவதற்குத் தேவையான உந்துதலை என்ஜின்கள் பெற முடியவில்லை. இதன் விளைவாக அது புறப்பட்ட சில நொடிகளில் விழுந்திருக்கலாம்’ என்றார். இன்னொருவர்,’இது ஒரு இயந்திரக் கோளாறு காரணமாக ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஏனெனில் இதுபோன்ற சூழ்நிலையில், விமானம் ஊசலாடிக் கொண்டிருக்கும், ஆனால் இங்கே, விமானம் நிலையாக இருந்தது.
எனவே, இரண்டு என்ஜின்களும் செயலிழந்து போகும் வாய்ப்பு உள்ளது. இரண்டு என்ஜின்களிலும் உந்துவிசை இழப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இவை மட்டுமே சாத்தியக்கூறுகள். மேலும் பறவை மோதி இரண்டு என்ஜின்களும் தீப்பிடித்து எரிந்திருந்தாலும் இது நிகழலாம். விமானத்தின் எடை அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருந்திருக்கலாம் என்ற கருத்துக்கள் எழுந்தாலும், அப்படி இருந்தால் விமானம் புறப்படுதல் சாத்தியமில்லை’ என்று தெரிவித்தார்.
* எதுவுமே சரியில்லையே அமெரிக்க நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானம் சரியாக உள்ளமைக்கப்பட்டதாக தெரியவில்லை. முதல் பார்வையில் விபத்து ஆச்சரியமாக உள்ளது என்று அமெரிக்க விமான பாதுகாப்பு ஆலோசகர் ஜான் எம் காக்ஸ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,’ இந்த விஷயத்தில் மிகவிரைவாக முடிவு எடுப்பது தவறு என்றாலும், விமான விபத்து தொடர்பான வீடியோவை பார்த்த போது விமானம் ஏற முயற்சித்தபோது அனைத்தும் சரியான நிலையில் இருந்ததா என்பது சந்தேகம் தான். ஏனெனில் விமானத்தின் முன்பகுதி உயர்ந்து, பின்னர் தலைகீழாக சரிகிறது. எனவே விமானம் போதுமான அளவு உயர்த்தப்படவில்லை என்பதைக் குறிக்கிறது’ என்றார்.
பாதுகாப்பு பொறியியலில் நிபுணத்துவம் பெற்ற யார்க் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பேராசிரியரான ஜான் மெக்டெர்மிட் கூறுகையில்,’முதல் பார்வையில் விபத்து மிகவும் ஆச்சரியமாகத் தோன்றியது. விமானம் 200 மீட்டர் அல்லது 650 அடிக்கு மேல் ஏறவில்லை. இப்படிப்பட்ட சூழலில் விமானிகள் உடனே புறப்படுவதை நிறுத்தலாம். ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்தப் பிரச்சினை மிகத் திடீரென ஏற்பட்டதாகத் தெரிகிறது’ என்றார். இதற்கிடையே இந்த விபத்தில் இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா சார்பில் புலனாய்வு குழு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் வெடித்துச் சிதறிய கோர விபத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த துணை விமானி கிளைவ் குந்தர் உயிரிழந்தார். கர்நாடகாவின் கடலோரப் பகுதியைச் சேர்ந்த விமானி கிளைவ் குந்தர் மும்பையில் வசித்து துணை விமானியாகப் பணிபுரிந்துவந்தார். 1,100 மணி நேரம் விமானப் பயண அனுபவத்தைக் கொண்டிருந்தவர். அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் துணை விமானியாக சென்ற நிலையில், விமான விபத்தில் அவரும் உயிரிழந்தார்.
The post அகமதாபாத் விமான நிலையம் அருகே விமானம் விழுந்து நொறுங்கி 246 பேர் பலி: லண்டன் புறப்பட்ட 30 வினாடிகளில் பயங்கர விபத்து appeared first on Dinakaran.