செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் குஜராத்தின் மேகானி என்ற பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
வைகோ (மதிமுக): அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கிய செய்தி அதிர்ச்சி தருகிறது. புறப்பட்ட சிறிது தூரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து, குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்து நெஞ்சை உலுக்குகிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் சதித் திட்டம் ஏதேனும் உள்ளதா என்பது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் விரிவாக ஆராய்ந்து, இனி வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், ஐந்து நிமிடங்களில் விபத்துக்கு ஆளாகியுள்ளது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, விபத்துக்கான காரணத்தை கண்டறிய நீதி விசாரணை நடத்த வேண்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா): அகமதாபாத் அருகே பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது அதிர்ச்சிக்குரியது. பயணிகளில் பலர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
அன்புமணி (பாமக): ஏர்இந்தியா விமானம் குடியிருப்பின் மீது விழுந்து தீப்பிடித்ததாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றன. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
டிடிவி.தினகரன் (அமமுக): அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகி பயணித்த குழந்தைகள், வெளிநாட்டவர் உள்பட பலர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் விஜய் (தவெக): அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜவாஹிருல்லா (மமக): அகமதாபாத் அருகே விமானம் விபத்துக்குள்ளானது அதிர்ச்சி அளிக்கிறது. பயணிகளில் பலர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் பெரும் வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சரத்குமார்: அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கிய சம்பவம் பேரதிர்ச்சியை அளிக்கிறது. இந்த கோர விபத்தில் சிக்கி 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது மிகக்கொடுமையான ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்க்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
The post அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்: குடும்பத்தினருக்கு ஆறுதல் appeared first on Dinakaran.