தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக இருப்பது டெல்டா மாவட்டங்கள் என்றால், அதற்கு உயிர்நாடி காவிரி நீர்தான்! அந்த காவிரி நீரை தேக்கி 16 மாவட்டங்களை செழிக்க வைக்கக்கூடிய மேட்டூர் அணையை கடந்த 4 ஆண்டுகளாக குறித்த தேதியில் திறந்து வைத்து விவசாயிகளின் வயிற்றில் பால்வார்த்த மகிழ்ச்சியோடு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சேலம் வந்திருக்கிறேன்.
அணையிலிருந்து, பொங்கி வரும் காவிரி போல உங்களையெல்லாம் பார்க்கின்றபோது எனக்கு மகிழ்ச்சி பொங்குகிறது. இந்த மகிழ்ச்சியை குறிப்பாக உழவர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியை கூட்டும் வகையில், தொடக்கத்திலேயே ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.
விவசாயிகள் ஒரு குவிண்டாலுக்கு இனி 2,500 ரூபாய் பெறுவார்கள். அதற்கேற்றாற் போல் சாதாரண ரகத்திற்கு 131 ரூபாய் எனவும், சன்ன ரகத்திற்கு இனி 156 ரூபாய் எனவும், இனி நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும். இதனால், சாதாரண ரகம் 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், சன்ன ரகம் 2 ஆயிரத்து 545 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படும். இதனால், 10 இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள்.
சேலம் மாவட்டம் சேர்வராயன் மலை – கல்வராயன் மலை – ஜருகுமலை – கஞ்சமலை – பச்சமலை – நகரமலை என்று மலைகள் சூழ்ந்திருக்கும் மாவட்டம். இங்கே மலை போல் மக்கள் நலத் திட்டங்களை வழங்குகின்ற இந்த அரசு விழாவில் பங்கேற்று, உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் நான் பெருமை அடைகிறேன்!
இந்த விழாவை மிகப் பிரமாண்டமாக, கம்பீரமாக ஏற்பாடு செய்திருக்கிறார் நம்முடைய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அவர்கள்! மாணவராக அரசியலில் நுழைந்து, 1983-ஆம் ஆண்டு இளைஞரணி காலத்திலிருந்து இப்போது வரை என்னோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், கழக அரசு எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் ஏராளமான சாதனைகளை செய்திருக்கிறோம். அதில், முக்கியமான சிலவற்றை மட்டும் பட்டியலிட்டு சொல்ல வேண்டும் என்றால்,
* சேலம் உருக்காலை
* ஐம்பது ஆண்டு கனவுத் திட்டமான சேலம் இரயில்வே கோட்டம்
*பெரியார் பல்கலைக்கழகம்
*சேலத்தில் அரசு மகளிர் கலைக் கல்லூரி
*ஆத்தூரில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி
*சேலம் மாநகராட்சிக்காக காவிரி தனி கூட்டுக் குடிநீர் திட்டம்
*சேலம் மாநகரத்திற்கு பாதாளச் சாக்கடைத் திட்டம்
*திருமணி முத்தாறு – வெள்ளக்குட்டை ஓடையை தூய்மைப்படுத்த திட்டம்
*ஏத்தாப்பூரில் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம்
*ஏற்காட்டில் தாவரவியல் பூங்கா
* 9 உழவர் சந்தைகள்
* சேலம் – ஆத்தூர் குடிநீர்த்திட்டம்
*புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
*சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம்
*ஆத்தூர், சங்ககிரி, ஓமலூர் பகுதிகளில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடங்கள்
*மேட்டூரில் 600 மெகாவாட் அனல் மின் திட்டம்
*சேலம் – கிருஷ்ணகிரி நான்கு வழிச்சாலை
*சேலம் – நாமக்கல் நான்கு வழிச்சாலை
*சேலம் – செங்கப்பள்ளி நான்கு வழிச்சாலை
*பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
இப்படி கணக்கற்ற திட்டங்களை சேலம் மாவட்டத்திற்கு கொண்டு வந்து நிறைவேற்றிய ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி; நம்முடைய கலைஞரின் ஆட்சி! அதே வழியில், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், கடந்த 4 ஆண்டுகளில், 7 ஆயிரத்து 660கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும், 22 ஆயிரத்து 117 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சேலம் மாவட்டத்திற்கு நாம் செய்திருக்கிறோம்!
அதில் சிலவற்றை நாம் பட்டியலிட்டு சொல்ல வேண்டும் என்றால்……
*மினி டைடல் பார்க் அறிவித்தோம்; ஓமலூர் வட்டம், ஆணைக் கவுண்டன்பட்டியில் அமைத்துவிட்டோம்!
*கொலுசு உற்பத்தியாளர்களுக்கான பன்மாடி உற்பத்தி மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தோம்; அரியாக்கவுண்டன்பட்டியில் திறந்து வைத்துவிட்டோம்!
*மூன்று நீர்நிலைகளைச் சீரமைக்க 52 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தோம்; அல்லிக்குட்டை ஏரியை திறந்து வைத்துவிட்டேன். போடிநாயக்கன்பட்டி ஏரியும், மூக்கனேரி ஏரியும் விரைவில் திறந்து வைக்கப்படும்.
*அம்மாபேட்டை பகுதியில் இரயில்வே மேம்பாலம்அமைக்கப்படும் என்று சொன்னோம்; 92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இரயில்வே பாலத்தை கடந்த ஆண்டு திறந்து வைத்துவிட்டோம்.
* தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் வழங்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போன்று, வடிகால் பணிகளும் முடிந்துவிட்டது.
*ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்று சொன்னேன்;ஜாகீர் அம்மாபாளையத்தில், 119 ஏக்கர் பரப்பளவில் 880 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க இன்றைக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன்!
* 548 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 520 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
* பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்தோம்; ஏற்கனவே, துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள் அதை அடிக்கல் நாட்டி இருக்கிறார். இப்படி சொன்னால், சொன்னதை செய்து முடிக்கும் ஆட்சியாக, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறோம்!
இந்த வரிசையில், சேலம் மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
முதலாவது அறிவிப்பு – சேலம் மாநகராட்சி பகுதிகளில், 100 கோடி ரூபாய் செலவில் சாலைகள் மேம்பாடு, போதிய கழிவுநீர்க் கால்வாய்கள் மற்றும் சிறுபாலங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
இரண்டாவது அறிவிப்பு – சேலம் மாநகராட்சி செவ்வாய்ப்பேட்டையில் இருக்கும் தினசரி சந்தை 9 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
மூன்றாவது அறிவிப்பு – தலைவாசல் வட்டத்தில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் இலுப்பநத்தம் கிராமத்தில் இருக்கும் வேளாண் விற்பனை நிலையம் 10 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும்.
நான்காவது அறிவிப்பு – மேட்டூர் மற்றும் நரசிங்கபுரத்தில் புதிய நகராட்சி அலுவலக கட்டடங்கள் கட்டப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு – சங்ககிரி நகராட்சியில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும்.
ஆறாவது அறிவிப்பு – தாரமங்கலம் நகராட்சியில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் இடைப்பாடி நகராட்சியில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் ஆத்தூரில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் புதிய குடிநீர்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தூரத்தில் இருக்கும் இலக்குகளையும், விரைவாக அடைவதற்கான பாதையை நாம் அமைத்துகொண்டு இருக்கிறோம்! அதனால்தான், ஒவ்வொரு மாவட்டத்திலும் நம்முடைய ஆட்சியில் பயன்பெற்றவர்களின் பட்டியலை புள்ளிவிவரத்தோடு என்னால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடிகிறது!
மகளிருக்கு, மாணவிகளுக்கு, மாணவர்களுக்கு மாதம், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டு வருகிறோம். நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் இந்த முத்திரைத் திட்டங்களால் சேலம் மாவட்டத்தில் மட்டும் பயனடைந்தவர்களின் விவரங்களை சொல்ல வேண்டும் என்றால்,
*கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 5 இலட்சத்து 58 ஆயிரம் மகளிர்.
*புதுமைப்பெண் திட்டத்தில் 59 ஆயிரம் மாணவிகள்
*தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 18 ஆயிரம் மாணவர்கள்
*வீட்டிற்கே சென்று சிகிச்சை அளிக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 29 இலட்சம் முறை சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
* 86 ஆயிரம் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தில் சூடாகவும், சுவையாகவும் உணவு பரிமாறுகிறோம்!
*கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைப்பு திட்டத்தில் 2 இலட்சம் விவசாயிகள் பலன் பெற்றிருக்கிறார்கள்!
* நான் முதல்வன் திட்டத்தில் 4 இலட்சம் இளைஞர்கள் திறன் பயிற்சிகள் பெற்றிருக்கிறார்கள்.
*தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்திருக்கிறோம். அதில், சேலம் மாவட்டத்தில் மட்டும் 56 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றிருக்கிறது. இப்படி நம்முடைய சாதனைகளை நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
இதன் தொடர்ச்சியாகதான், இந்த விழாவில், 17 அரசுத் துறைகளைச் சேர்ந்த திட்டங்களின் மூலமாக, ஒரு இலட்சத்து ஆயிரத்து 203 பயனாளிகளுக்கு 204 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது! இப்படி அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, நலத்திட்ட உதவிகளை நான் தொடர்ந்து வழங்கிக் கொண்டு வருகிறேன்.
தினமும் செய்திகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்… காலையில் ஒரு ஊரில் நலத்திட்ட உதவிகள் வழங்கியிருப்பேன்.. மாலையில், இன்னொரு ஊரில் வேறு ஒரு நிகழ்ச்சியில் மக்களை சந்தித்துக்கொண்டு இருப்பேன்.
சென்னையில் இருக்கும் நாட்களில், அங்கு நடக்கும் திட்டங்களை தொடங்கி வைப்பது, நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய திட்டங்களை ஆய்வு செய்வது, புதிய திட்டங்களை வகுக்க ஆய்வுக் கூட்டங்களை
நடத்துவது, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பணியாணைகள் வழங்குவது, நேரில் போக முடியாத திட்டங்களை எல்லாம் தலைமைச் செயலகத்தில் இருந்தே, காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைப்பது என்று தொடர்ந்து மக்களான உங்களுக்காகத்தான் உழைத்துக்கொண்டு இருக்கிறேன்.
அதனால்தான், நான் எங்கு சென்றாலும், அன்போடு, உறவோடு, உரிமையோடு நீங்கள் என்னை வரவேற்கிறீர்கள்… முதலமைச்சராக மட்டும் என்னை பார்க்காமல், உங்களில் ஒருவராக, உங்கள் நம்பிக்கைக்கு உரியவனாக பார்க்கிறீர்கள். அன்பைப் பொழிகிறீர்கள்.
இதையெல்லாம் சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை… தி.மு.க. அரசின் செல்வாக்கைப் பார்த்து வயிறு எரிகிறார்கள்.. சில நாட்களுக்கு முன்னால், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் மதுரைக்கு வந்தார்… அவர் அரசியலை மட்டும் பேசிக் கொண்டு சென்றிருந்தால் இங்கு நான் பதில் பேசியிருக்க மாட்டேன்.
அரசியல் கூட்டத்தில் பேசியிருப்பேன். ஆனால் ஆட்சியில் குறை சொல்லி, எதுவும் செய்யவில்லை – எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை – சும்மா வெறும் அறிவிப்புகளாக தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற விமர்சனத்தை செய்து கொண்டு போயிருக்கிறார். அதனால், கட்டாயத்தின் அடிப்படையில் நான் அதற்கு விளக்கம் சொல்ல விரும்புகிறேன்.
அமித்ஷா அவர்களின் பேச்சிலேயே தன்னுடைய ஆத்திரத்தை கொட்டி தீர்த்திருக்கிறார்! “ஒன்றிய பா.ஜ.க. அரசு அளிக்கும் திட்டங்களை மடைமாற்றி, மக்களுக்கான நன்மைகளை கிடைக்கவிடாமல் செய்கிறது தி.மு.க. அரசு” என்று அவர் பேசியிருக்கிறார்! ஆனால், உண்மை என்ன? குடிநீர் திட்டமாக இருந்தாலும் சரி, வீடுகட்டும் திட்டமாக இருந்தாலும் சரி, ஒன்றிய அரசு ஒதுக்கும் பணத்தை வைத்து செயல்படுத்த முடியாது என்று மாநில அரசுதான் கூடுதல் பணம் வழங்குகிறது. பிரதமரின் பெயர் வைத்திருக்கும் திட்டங்களுக்கே 50 விழுக்காட்டுக்கு மேல் மாநில அரசுதான் நிதி ஒதுக்கீடு செய்து அதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
நீங்கள் எல்லாம் படையப்பா சினிமா பார்த்திருப்பீர்கள்.. அதில் ஒரு காட்சி வரும் – “மாப்பிள்ளை அவர்தான், ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது” என்று அதில் ஒரு டயலாக் வரும். அதுபோல்தான் ஒன்றிய அரசு பெயரிலான திட்டங்களுக்கும் நாம் நிதி வழங்கிக் கொண்டு வருகிறோம்! இந்த நிலையில் எந்த அடிப்படையில் நாம் மடைமாற்றம் செய்கிறோம் என்று உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டுகிறார்?
இன்னும் சொல்ல வேண்டும் என்றால், ஒன்றிய பா.ஜ.க. அரசுதான், தமிழ்நாட்டிற்கான எந்த சிறப்புத் திட்டத்தையும் தராத அரசு… மிகச் சில திட்டங்களுக்கு ஒதுக்கும் பணமும் முழுமையாக வந்து சேருவது இல்லை. ஆனால், உள்துறை அமைச்சர் அப்படியே பிளேட்டை திருப்பிப் போடுகிறார்!
நான் கேட்கிறேன்… அமித்ஷா அவர்களே… மதுரை வந்தீர்களே.. பத்து ஆண்டுக்கு முன்பு உங்கள் அரசு அறிவித்த மதுரை எய்ம்ஸ் என்ன நிலையில் இருக்கிறது என்று சென்று பார்த்தீர்களா? அதே மதுரையை சுற்றி, நாம் ஆட்சிக்கு வந்த இந்த 4 ஆண்டுகளில், கலைஞர் நூற்றாண்டு நூலகம், உலகத் தரத்திலான ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம் என்று ஏராளமான பணிகளை நாங்கள் முடித்திருக்கிறோம்… இதுதான் BJP மாடலுக்கும், திராவிட மாடலுக்கும் உள்ள வித்தியாசம்!
பத்தாண்டுகளாக தொடர்ந்து கட்டிக் கொண்டிருப்பதற்கு, அது எய்ம்ஸ் மருத்துவமனையா? இல்லை, விண்வெளி ஆராய்ச்சி நிலையமா? ஒழுங்காக நிதி ஒதுக்கியிருந்தால் இரண்டே ஆண்டுகளில் கட்டி முடித்திருக்கலாமே? இந்த இலட்சணத்தில் தமிழ்நாட்டை குறை சொல்லி நீங்கள் பேசலாமா?
ஒன்றே ஒன்றைக் கேட்கிறேன்… மூன்றாவது முறையாக ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைத்திருக்கிறீர்கள்… தமிழ்நாட்டுக்கு என்று நீங்கள் செய்த ஒரே ஒரு சிறப்புத் திட்டத்தை சொல்லுங்கள்… 9 ஆண்டுகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நாங்களும் இடம் பெற்றிருந்தோம். எங்களின் சாதனைகளை நான் பட்டியல்போட்டு பலமுறை சொல்லியிருக்கிறேன் – சட்டமன்றத்திலும் பலமுறை பதிவு செய்திருக்கிறோம்.
ஆனால், நீங்கள் ஆட்சிக்கு வந்த 11 ஆண்டுகளாக, நீங்கள் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தீர்கள்? என்று கேட்டுக்கொண்டே இருக்கிறோம். ஆனால், அதை மட்டும் சொல்லவே மாட்றீங்களே… சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்! இந்த நிலைமையில், 2004-ஆம் ஆண்டு காலகட்டத்தையும், 2025-ஆம் ஆண்டையும் ஒப்பிட்டு பேசியிருக்கிறீர்கள்.
அன்றைக்கு இருந்த பட்ஜெட் என்ன? இப்போது இருக்கக்கூடிய பட்ஜெட் என்ன? அன்றைக்கு தங்கம் ஒரு பவுன் 5 ஆயிரம் ரூபாய். ஆனால், இன்றைக்கு 71 ஆயிரம் ரூபாய்! 2004-ஆம் ஆண்டு பணமும், இப்போது இருக்கக்கூடிய பணமும் ஒன்றா?
மதுரைக்கு வந்த அமித்ஷா இப்படி பேசினால், மதுரையின் தொன்மையை நிராகரிப்பது போல பேசியிருக்கிறார் இன்னொரு ஒன்றிய அமைச்சரான ஷெகாவத் அவர்கள். என்ன பேசினார்? கீழடியில் உள்ள அள்ள அள்ள குறையாமல் அத்தனை சான்றிதழ்களை கண்டுபிடித்து அறிவியல் ஆய்வு அடிப்படையில் எழுதப்பட்ட ஆய்வறிக்கையை திருத்த வேண்டும் என்று சொல்கிறார்.
தமிழ்நாட்டில் இரும்பின் தொன்மையை பற்றி உலகளாவிலான ஆய்வகங்களில் சோதனைக்குட்படுத்தி நாம் தான் முதல் ரிசல்ட்டை வெளியிட்டோம். அப்போதாவது அவர்கள் பாராட்டினார்களா? பாராட்டக்கூட வேண்டாம் atleast அந்த முடிவுகளை அங்கீகரித்து ஒரு வார்த்தையாவது பேசினார்களா? தமிழர்களுடைய தொன்மைகளை மறைக்கவும், அழிக்கவும் ஒன்றிய அரசு தொடர்ந்து முயற்சி செய்கிறது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடியவர் இதையெல்லாம் எதிர்த்துக்
கேள்வி கேட்பதற்கு துணிச்சல் இல்லாமல், அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, டில்லிக்கு தலையாட்டி பொம்மையாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில், அவர்கள் அருகில் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
இப்படி தமிழுக்கும், தமிழினத்திற்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் எதிரான அத்தனை சிந்தனைகளையும் வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை புறக்கணிப்பதால்தான் தமிழ்நாட்டு மக்களும் இவர்கள் கூட்டணியை நிச்சயமாக புறக்கணிக்கிறார்கள் – புறக்கணித்துக் கொண்டே இருப்பார்கள்.
நான் கேட்பது, உங்களுடைய பதவியைக் காப்பாற்றிக்கொள்ள ஏற்கனவே ஒருமுறை வெளிப்படையாக கூட்டணி வைத்தீர்கள். தமிழ்நாட்டிற்கான ஒரு சிறப்புத் திட்டத்தையாவது அப்போது கேட்டு பெற்றீர்களா? இல்லை, தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோனபோது எதிர்த்து ஒரு கேள்வி கேட்டீர்களா? கேட்கவில்லை.
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் ‘ப்ராக்சி’ ஆட்சி நடந்தபோதும் எதிர்த்து குரல் எழுப்பவில்லை. இப்போதும், தமிழ்நாட்டில் அடுத்து பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷாவும், மற்றவர்களும் நேரடியாகவே சொல்கிறார்கள். அதைப் பார்த்தும் எதையும் பேசமுடியாமல் வாய்மூடி இருக்கிறார்கள். சுயநலத்திற்காக, சுயலாபத்திற்காக சொந்தக்
கட்சியையே அடமானம் வைத்தபிறகு எப்படி பேசமுடியும்? ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மீண்டும் அவர்கள் உங்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் – உங்களிடம் ஏமாறமாட்டார்கள்.
சுயமரியாதை உள்ளவர்கள் தமிழர்கள்! நான் உறுதியோடு சொல்கிறேன். டெல்லியிலிருந்து தமிழ்நாட்டை ஆள நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்! நெருக்கடிகளை மீறி நெருப்பாற்றில் நீந்தி தமிழ்நாட்டை உயர்த்தி வரக்கூடிய திராவிட மாடல் அரசுக்கு ஆதரவாக
மக்கள் இருக்கிறீர்கள்! இப்போது இருப்பதுபோலவே 2026-லும் நீங்கள் ஆதரவாக இருப்பீர்கள். எப்போதும் நாங்கள் உங்களுக்கு துணையாக இருப்போம், இருப்போம் என்று கூறி விடைபெறுகிறேன்!
The post ஒன்றிய அரசு பெயரிலான திட்டங்களுக்கும் நாம் நிதி வழங்குகிறோம்! : படையப்பா திரைப்பட காட்சியை சுட்டிக் காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!! appeared first on Dinakaran.