நன்றி குங்குமம் தோழி
எந்த ஒரு தொழிலையும் துவங்கும் போது நிறைய சவால்கள் இருக்கும். கடுமையான முயற்சிகளுடன், சீரிய குறிக்கோளை நோக்கி தன்னம்பிக்கையுடன் தளராமல் உழைத்தால் பெண்களுக்கான வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். முயற்சிகளுடன் அதற்கான முறையான பயிற்சிகளையும் பெற்றுக்கொண்டால், அதன் மூலம் வரும் எந்த சவாலையும் துணிவுடன் ஏற்கலாம் என தன்னம்பிக்கை மிளிர பேசுகிறார் சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சுகன்யா சீனிவாசன். இவர் இயற்கையான முறையில் ஹேண்ட் மேட் சோப்புகளை வீட்டிலிருந்தே தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
ஹேண்ட் மேட் சோப் தயாரிக்க காரணம்…
சந்தையில் விற்கப்படும் குளியல் சோப்புகள் அனைத்திலும் கண்டிப்பாக கெமிக்கல் கலக்கப்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்தும் போது நாளடைவில் சருமத்தில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், ரசாயனம் இல்லாத குளியல் சோப்பினை நாமே வீட்டில் தயாரிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதனை விற்பனை செய்தால், கண்டிப்பாக நல்லதொரு வரவேற்பு கிடைக்கும்ன்னு நினைத்தேன்.
இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஹேண்ட் மேட் சோப்புகளால் பல சரும பிரச்னைகளை சரி செய்யவும் முடிகிறது. முதலில் என்னுடைய மகளுக்காக தான் தயாரித்தேன். முதல் இரண்டு வருடங்கள் சொந்த உபயோகத்திற்காக மட்டுமே தயாரித்து பயன்படுத்தி வந்தேன். நான் சோப் தயாரிப்பதை தெரிந்துகொண்ட நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கேட்க அவர்களுக்கு தயாரித்து தந்தேன். இன்று அதுவே என்னுடைய தொழிலாக மாறிவிட்டது. ஸ்கின் டூ ப்ரீத் என்ற பெயரில் வீட்டிலேயே இந்த சோப்புகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன்.
விற்பனை வாய்ப்புகள்…
தற்போது நிறைய டிஜிட்டல் சந்தைகள் மற்றும் வியாபார ஸ்டால்கள், சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் எனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறேன். சமூகவலைத்தளங்களில் நல்லதொரு வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது 15க்கும் மேற்பட்ட சோப் வகைகளை தயாரிக்கிறேன். கொஞ்சம் கிரியேட்டிவிட்டியும், நிறைய ஆர்வமும், உழைப்பும், இருந்தால் போதும் நம் பொருட்கள் தனித்தன்மை நிறைந்ததாக மிளிரும். நலங்கு மாவு சோப்பில் 23 வகை மூலிகைகள் சேர்த்து தயாரிப்பதால் அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது. இதனை பிசினசாக கடந்த நான்கு வருடமாக செய்து வருகிறேன்.
சோப் வகைகள்…
வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் முறையில் தயாரிக்கிறேன். சிலர் குறிப்பிட்ட ஃபிளேவர் மற்றும் டிசைன்களில் கேட்பார்கள். அதேபோலும் செய்கிறேன். மேலும் வாடிக்கையாளர்களின் சருமத்திற்கு ஏற்ப அவர்கள் எந்த சோப்பினை பயன்படுத்தலாம் என்று பரிந்துரை செய்கிறேன். நலுங்குமாவு, சார்க்கோல், சியா பட்டர், ரெட் சான்டில் வுட், துளசி, வேம்பு, பீட்ரூட் , அதிமதுரம், பூவரசன், காபி என பல்வேறு வகையில் சோப்கள் என்னிடம் உள்ளன. மேலும் சில வகைகளை அறிமுகம் செய்யும் எண்ணம் உள்ளது. எந்தவித ரசாயனம் இல்லாமல் சுத்தமான செக்கு எண்ணையினை மட்டுமே பயன்படுத்தி தயாரிப்பதால், பலரும் விரும்புகிறார்கள். இங்கு மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் எனது தயாரிப்புகளை இங்கிருந்து வாங்கி எடுத்து செல்கிறார்கள்.
இதர தயாரிப்புகள்…
சோப் தவிர மூலிகைப் பற்பொடியும் நான் தயாரிக்கிறேன். பற்பசைகளுக்கு ஒரு சிறந்த இயற்கை மாற்றாக இதனை பயன்படுத்தலாம். பற்கள் மற்றும் ஈறுகளுக்கு மென்மையானது. பற்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும். வேம்பு, மஞ்சள் மற்றும் கிராம்பு போன்ற இயற்கையான பொருட்கள் இருப்பதால், இவை பாக்டீரியாவை எதிர்த்து வாய் துர்நாற்றம் மற்றும் ஈறு அழற்சியைக் குறைக்க உதவுகின்றன. இஞ்சி, லவங்கப்பட்டை மற்றும் ஏலக்காய் போன்ற பொருட்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளது, இது ஈறுகளில் வீக்கம் மற்றும் வலியை குறைக்க உதவும்.
மூலிகை பற் பொடியில் வைட்டமின் சி போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பற்கள் மற்றும் ஈறுகளை பாதுகாக்க உதவும்.பற்பொடியை தொடர்ந்து பாத்திரம் துலக்கும் ஜெல்லையும் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். மேலும் நாட்டுச் சர்க்கரையும் விற்பனை செய்து வருகிறோம். புதியதாக செம்பருத்தி மற்றும் மஞ்சிஸ்தா சோப்பினை அறிமுகப்படுத்தியுள்ளோம். சரும செல்களுக்கு ஊட்டமளித்து, முகப்பருவைக் குறைத்து, சூரிய ஒளி மற்றும் மந்தமான தன்மையை நீக்கி, உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தும்.
மூலிகை மற்றும் மரச்செக்கு எண்ணெய்களில் இருந்து 100% இயற்கையான சோப்பை தயாரிப்பதால், சருமத்திற்கு ஏற்றது, பாதுகாப்பானது. எங்க தயாரிப்பின் குறிக்கோள் ‘நம் தோல் நன்றாக
சுவாசிக்க வேண்டும்’ என்பதுதான். இந்த சோப்பினை ஆறு மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்’’ என்கிறார் சுகன்யா சீனிவாசன்.
தொகுப்பு: தனுஜா ஜெயராமன்
The post தோல் நன்றாக சுவாசிக்க வேண்டும்! appeared first on Dinakaran.