ஒரு வீடு… இரண்டு வெற்றிக் கதைகள்!

நன்றி குங்குமம் தோழி

இங்கிலாந்தைச் சேர்ந்த ‘குளோபல் புக் ஆஃப் எக்ஸ்செலன்ஸ்’ நிறுவனத்தின் ஹைதராபாத் கிளை கோவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கடந்த மாதம் விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. அந்த விழாவில் பரதத்தில் சாதனை நிகழ்த்தி வரும் அபிராமி என்ற பெண்ணின் நடன நிகழ்ச்சி அரங்கேற இருப்பதாக அறிவித்தார்கள். பரதத்தில் பலர் பலவித சாதனைகளை படைத்திருக்கிறார்கள். இதில் என்ன ஆச்சரியம் என்று பார்த்த போது, நடனமாடிய அந்தப்பெண் தன்னுடைய ஒரு வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு இன்று பரதக் கலையில் பல சாதனைகளை செய்துள்ளார் என்று தெரியவந்தது.

சிறுவயதில் புற்றுநோயா… அதிலிருந்து எப்படி இந்த பிஞ்சுக் குழந்தை விடுதலை பெற்றது என்பதை தெரிந்துகொள்ள அவரை சந்தித்தோம்… ‘‘எனக்கு இப்போது 17 வயதாகிறது. +2 படிக்கிறேன். ஒன்றரை வயதில் எனக்கு புற்றுநோய் (T-cell lymphoblastic lymphoma) பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது. மருத்துவமனை சிகிச்சைகள் என பல போராட்டங்களை சந்தித்தேன். உரிய நேரத்தில் புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை அளித்ததால் நான்கு ஆண்டுகளில் அதிலிருந்து முற்றிலும் மீண்டேன். என்னுடைய இந்தப் போராட்டத்தில் எனக்கு ஊக்கம் அளித்து அந்த நோயின் பிடியில் இருந்து என்னை காப்பாற்றியது என் அம்மாவும், தாத்தா, பாட்டியும்தான்.

நோயின் தாக்கம் இல்லை என்று தெரிந்த பிறகு பரதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இதுவரை 200 மேடை நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறேன். பல் வேறு அகில இந்திய சாதனைப் புத்தகங்களில் இடம் பிடித்திருக்கிறேன். கின்னஸ் சாதனை பொறுத்தவரை ஏகப்பட்ட விதிமுறைகள் உள்ளது. அதற்கு நிறைய செலவாகும். எங்களின் இன்றைய சூழலில் அதனை ஏற்க முடியாது என்பதால் அந்த சாதனையை கொஞ்ச காலத்திற்கு தள்ளி வைத்திருக்கிறேன்’’ என்றவர், பரதக் கலையில் இவர் செய்திருக்கும் சாதனை குறித்து பேசினார்.

‘‘இசைக்கு ஏற்ப முகபாவங்கள் கொண்டு நடனமாடுவது எல் லோரும் செய்வது. அந்தக் கலையில் எனக்கான ஒரு அடையாளம் மற்றும் வித்தியாசத்தை கொடுக்க விரும்பினேன். அதற்காக சாதனைப் பட்டியலில் என் பெயர் இடம் பெற வேண்டும் என்று விரும்பினேன். சாஸ்திரிய நடனத்துடன், தலையில் ஒரு விளக்கு, கைகளில் இரண்டு விளக்குகள் ஏந்தி செம்பின் மேல் நின்று இரண்டு மணி நேரம் நடனம் ஆடினேன்.

கீழே ஒரு நெருப்பு வளையம், மேலே அந்தரத்தில் மற்றொரு வளையத்தில் நின்று கொண்டு இரண்டு மணி நேரம் நடனம் ஆடியிருக்கிறேன். தீட்டப்பட்ட 24 கூர்மையான கத்திகள், நான்கு அடி நீளம், மூன்றடி அகலமுள்ள ஒரு டிரேயில் படுக்கையாகப் பொருத்தப்பட்டிருக்கும். அந்தக் கூர்மையான கத்திகள் மேல் நின்று இரண்டு மணி நேரம் பரதம் ஆடினேன். அவை எல்லாம் என்னுடைய பெயர் சாதனை புத்தகங்களில் இடம் பெற காரணமாக அமைந்தன’’ என்றவர், வார இறுதி நாட்களில் நடன வகுப்புகளும் எடுத்து வருகிறார்.

‘‘புற்றுநோயில் இருந்து முற்றிலும் நான் குணமாகி இருந்தாலும், அந்த அணுக்கள் என் உடம்பில் இருந்து கொண்டு தான் இருக்கும். அதனால் மீண்டும் அதன் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு ஆண்டும் அதற்கான சோதனைகளை மேற்கொண்டு வருகிறேன். இதன் மூலம் புற்றுநோயிலிருந்து முழுமையாக விடுபட்டு நிம்மதியாக வாழ முடியும். என்னுடைய இந்த வளர்ச்சிக்கு முழு காரணம் என் அம்மாதான்’’ என்றவரை தொடர்ந்தார் அபிராமியின் அம்மா கஸ்தூரி பிரியதர்ஷினி.

அபிராமி புற்றுநோயில் இருந்து வெற்றிக் கண்டு, பரதத்தில் சாதனை நிகழ்த்தி இருப்பது ஒரு வெற்றிக் கதை என்றால் அவரது அம்மாவின் வெற்றிக் கதையை கேட்கும் அனைவரையும் நெகிழவைத்துவிடும். எந்தப் பெண்ணிற்கும் இது போன்ற இடர்கள் வரவேக்கூடாது என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வைக்கும் கதைதான் அவருடையது. கல்வி மட்டும் இருந்திருக்காவிட்டால் வாழ்க்கை என்னும் சுனாமியில் தத்தளித்து மூழ்கி இருப்பார் கஸ்தூரி. கஸ்தூரியை பார்க்கும் போது அவருக்கு குறைபாடு உள்ளது என்பதை கண்டறிய முடியாது. ஆனால் அவருக்கு பார்வைக் குறைபாடு உள்ளது. எதிரில் உள்ளவர்களின் உருவம் அவருக்கு நிழல் போலதான் தெரியும். தன் குடும்பத்தை தாங்கி நிற்கும் தூணாக இருந்து வருகிறார் கஸ்தூரி.

‘‘என்னுடைய பூர்வீகம் காரைக்குடி. அப்பா சென்னையில் சொந்தமாக பிசினஸ் செய்து வந்தார். நான் பிகாம் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரி, எனக்கு சிறு வயதிலேயே பார்வைக்குறைபாடு இருந்தது. கண் நரம்புகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்தக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள். நாளடைவில் படிப்படியாக பார்வை குறைந்துவிடும் இதற்கான சிகிச்சை இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஒரு காலக்கட்டத்தில் மாலை நேரத்தில் பார்வை மங்கலானது.

அதனால் இரவு நேரங்களில் எங்கும் வெளியே செல்ல மாட்டேன். கல்லூரி படிப்பு முடிந்ததும் திருமணம் நிச்சயமானது. அதன் பிறகு அபிராமி பிறந்தாள். அவளின் ஒன்றரை வயதில் அவளுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை தெரிந்து நான் இடிந்து போனேன். அதற்கான செலவு செய்ய எங்களிடம் போதிய வசதி இல்லை. பல தொண்டு நிறுவனங்கள், புற்று நோயில் இருந்து மீள்வது கடினம் என்று கூறி உதவி செய்ய மறுத்துவிட்டனர். என் மகளை எப்படியாவது குணப்படுத்த வேண்டும் என்ற வைராக்கியம் இருந்தாலும், அதற்கான செலவை நினைத்து இடிந்து போனேன்.

இந்த நிலையில் என்னையும் அபிராமியையும் என் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் தனியாக தவிக்கவிட்டு என் கணவர் எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். என் பெற்றோர்தான் எனக்கு அந்த ேநரத்தில் பக்கபலமாக இருந்தார்கள். அப்பாவின் வீட்டை அடகு வைத்து அந்தப் பணத்தில்தான் அபிராமிக்கான சிகிச்சையை மேற்கொண்டோம். இந்த நிலையில் பகல் நேரத்திலும் எனக்கு பார்வை மங்க ஆரம்பித்தது. என் முன் நிற்பவர்களின் உருவம் மட்டும்தான் தெரியும். அவர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியாது. பல போராட்டங்களுக்கு இடையேதான் அபிராமியின் சிகிச்சையை மேற்கொண்டேன். அதற்கு பலனாக அவள் பூரணமாக குணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

முதல் முறையாக மனதுக்குள் அப்படி ஒரு சந்தோஷத்தை உணர்ந்தேன். அவள் குணமாகிவிட்டாள். இரண்டு குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்து வளர்க்க வேண்டும். பெற்றோருக்குப் பாரமாக இருக்கக் கூடாது என்று தீர்மானித்தேன். ஸ்க்ரைப் உதவியால், அரசு வங்கியில் கிளர்க் வேலைக்கான தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தேன். வேலையும் கிடைத்தது. முதலில் நான் வேலை பார்த்த வங்கி என் வீட்டில் இருந்து அதிக தூரத்தில் இருந்தது. போய்வர சிரமமாக இருந்தது. அதன் பிறகு என் வீட்டின் அருகேயுள்ள வங்கியில் வேலையினை மாற்றிக் கொண்டேன். என்னுடைய குறைபாடு அறிந்து எனக்கான கம்ப்யூட்டரில் பார்வைக் குறையுள்ளவர்களுக்கான மென்பொருளை நிறுவியிருக்கிறார்கள்.

அதனால் கணினியில் இருந்து வெளிப்படும் குரலைக் கேட்டு என்னால் கணினியை இயக்க முடிகிறது. என்னுடன் இருக்கும் சக ஊழியர்கள் என் நிலையை புரிந்து கொண்டு எனக்கு மிகவும் உதவியாகவும் ஆறுதலாகவும் இருக்கிறார்கள். என் பெற்றோருடன்தான் வசிக்கிறேன். எனக்கு என் குழந்தைகள் டாக்டர், என்ஜினியராக வேண்டும் என்ற கனவெல்லாம் கிடையாது. அவர்களுக்கு பிடித்த துறையில் அவர்களுக்கான வாழ்க்கையினை வெற்றிகரமாக அமைத்து தர வேண்டும் அவ்வளவுதான்.

பார்வைக் குறைபாடு எனக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தவில்லை என்றாலும், ஒரே ஒரு மனக் குறைதான். மகளின் நடன நிகழ்ச்சியினை ஆசை தீர பார்த்து ரசிக்க முடியவில்லை என்பதுதான். நிகழ்ச்சியில் ஒலிக்கும் கைத்தட்டல்களை, பாராட்டுகளை காது குளிரக் கேட்டு ரசிப்பேன்” என்று முடிக்கும் போது, நம்முடைய கண்கள் மட்டுமல்ல… கஸ்தூரி பிரியதர்ஷினியின் கண்களும் பனித்தன.

தொகுப்பு: கண்ணம்மா பாரதி

 

The post ஒரு வீடு… இரண்டு வெற்றிக் கதைகள்! appeared first on Dinakaran.

Related Stories: