கால புருஷனுக்கு இருபத்தி ஆறாவது நட்சத்திரம் (26) உத்திரட்டாதி நட்சத்திரமாகும். உத்திரட்டாதி இது ஒரு முழுமையான நட்சத்திரம். மீனத்தின் நடுப்பகுதியை ஆக்கிரமித்துள்ள நட்சத்திரமாகும்.
உத்திரட்டாதி என்பது சனி பகவானின் ஆதிக்க நட்சத்திரம். இருப்பத்தி ஏழு நட்சத்திரங்களில் மூன்று நட்சத்திரமாகிய பூசம் (8), அனுஷம் (17), உத்திரட்டாதி (26) ஆகியவற்றின் கூட்டுத் தொகையானது எட்டாம் எண்ணுடன் தொடர்புடையது என்பதை குறிக்கிறது. அவ்வாறு எட்டாம் எண்ணானது சனி பகவானின் எட்டாம் எண்ணிற்கு உரியது.
இந்த நட்சத்திரத்தை சமஸ்கிருதத்தில் உத்திர பாத்ரா என்று அழைக்கின்றனர். உத்திர என்பதற்கு ‘வடக்கு’ என்றும் பத்ரா என்பது நூறு நட்சத்திரங்கள் என்றும் பொருள்படும். வடக்கு வானில் உள்ள நூறு நட்சத்திரங்களின் கூட்டம் என்று பொருள். வடக்குத் திசை என்றாலே உயர்ந்த என்ற பொருளும் உண்டு. பூகோளத்தின் மேல் பகுதியை குறிக்கும் திசையாகும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தோன்றியவர்கள் ஜடாயு மற்றும் காமதேனு ஆவர். இந்த நட்சத்திரத்திற்கு மங்களபாதம் என்ற பொருளும் உண்டு.
இருபத்தி ஏழு நட்சத்திரங்களையும் மூன்று பிரிவுகளில் உள்ள நாட்களுக்குள் உள்ளடக்கியுள்ளனர். அவ்வாறு மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு எனப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் உத்திரட்டாதி மேல்நோக்கு நாளில் வருகிறது.
உத்திரட்டாதி நட்சத்திரம் அதர்வண வேதத்தைக் குறிக்கிறது.
உத்திரட்டாதி அதிதேவதை புராணம்
தேவர்கள் வீற்றிருக்கும் தேவலோகத்தின் தலைவனான இந்திரன் ஒருமுறை துர்வாசர் அளித்த மாலையை அலட்சியமாகத் தன்னுடைய யானைக்கு அளித்தான். அந்த மாலையை யானை தும்பிக்கையால் துண்டுதுண்டாக உதிர்த்துப் போட்டது. இதனைக் கண்ட துர்வாச முனிவர் கடுஞ் சினத்தால் தேவர்களின் வலிமையும் பாக்கியமும் அழியட்டும் என்று சாபமிட்டார். இக்காரணத்தால், அசுரர்களின் வலிமை அதிகரிக்கவே தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டனர். தேவர்களைக் காக்க திருமால் சாகா வரம் பெறுவதற்கும் தேவர்கள் வலிமை பெறுவதற்கும் அமிர்தமானது பாற்கடலில் இருக்கிறது என அறிந்து திருப்பாற்கடலைக் கடைவதற்கு ஆமையாக மாறிய திருமால் மந்தாரமலை முழ்காமல் இருப்பதற்கு அவதாரம் எடுத்தார். தனது ஆசனமான ஆதிசேஷனின் சகோதரனான வாசுகி பாம்பை கயிறாக மாற்றி பாற்கடலை கடைவதற்கான சிரமம் மேற்கொண்டார்.
ஏகாதசி அன்று தொடங்கிய இந்த செயல் துவாதசி அன்று பாற்கடலில் இருந்து ஒவ்வொரு அற்புதமான பொருட்கள் எல்லாம் வெளிப்படத் தொடங்கின. அவற்றில் முதன்முதலாக காமதேனு பசு பாற்கடலில் இருந்து வெளிவந்தது. இந்த காமதேனு தோன்றிய நன்நாள் உத்திரட்டாதி நட்சத்திரமாக உள்ளது என புராணங்கள் கூறுகின்றன.
காமதேனு பசுக்களின் தாயாக விளங்குகிறது. கேட்டதைக் கொடுக்கும் அம்சமாக விளங்குகிறது காமதேனு. காமதேனுவை கற்பக விருட்சம், சுரபி என்ற பெயர்களில் புராணங்கள் அழைக்கின்றன. காமதேனுவின் மகளின் பெயர் நந்தினி என்று சொல்லப்படுகிறது. காமதேனுவை தேவர்கள் வசிஸ்டருக்கு கொடுத்தனர். இந்த தெய்வீக பசு வசிஸ்டரை விட்டு வருவதற்கு மறுத்தது.
காமதேனுவை கவர்ந்து வந்த அஷ்ட வசுக்கள் முடிவெடுத்து கவர்ந்தனர். இறுதியில் முனிவரின் சாபத்தால் கங்கா தேவிக்கு மகனாக பிறந்து உடனே மரணம் அடைந்தனர். இதில் பீஷ்மர் மட்டுமே சாபத்தால் நீண்டகாலம் மண்ணில் வாழும் சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டார்.
ஜடாயு என்பது கழுகு வடிவத்தில் உள்ள பேசுகின்ற தெய்வீகப் பறவை. அருண ரிஷியின் மகனாவார்.
ராமாயணத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்லும் பொழுது ராவணனுடன் போர் செய்து தனது இறக்கைகளை ராவணனன் வெட்டி வீழ்த்தவே கீழே விழுந்த தகவலை ராமனிடம் சீதையை இராவணன் தூக்கிச் செல்வதை சொல்வதற்கு உயிர் போகும் தறுவாயில் காத்திருந்த பறவை வடிவில் வந்த விஷ்ணுவின் வாகனம்தான்.
பொதுப்பலன்கள்
மென்மையான மனம் படைத்த வர்களாக இருப்பதால் இரக்கம் கசியும் குணம் கொண்டவர்கள். போலித்தனமாக வாழும் பழக்கம் உங்களிடம் இருக்காது. மற்றவர்களின் துயரத்தை உங்களால் சகித்துக் கொள்ள இயலாது. ஆகையால், கஷ்டப்படும்பொழுது ஓடிப் போய் உதவ வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். கல்வி மற்றும் கேள்விகளில் மத்திமமாக இருந்தாலும் நல்ல குணம் கொண்டவர்கள் நீங்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற விரும்பம் உடையவர்களாக இருப்பீர்கள். எளிமையான வாழ்க்கைதான் உங்களுக்கு பிடிக்கும்.
ஆரோக்கியம் நீர் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்னைகள் வர வாய்ப்புகள் உள்ளதால் உணவு மற்றும் மற்ற பழக்க வழக்கங்களில் கவனம் தேவை. அஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது கவனம் தேவை.
உத்திரட்டாதிக்குரிய வேதை நட்சத்திரம்…
வேதை என்பது தொந்தரவுகளையும் மனஸ்தாபங்களையும் ஏற்படுத்தக் கூடிய நட்சத்திரமாகும். பூரம் என்பது வேதை நட்சத்திரமாக உள்ளது. பூர நட்சத்திர நாளில் புதிய காரியங்களைத் தொடங்குவது வேண்டாம்.
பரிகாரம்
வேம்பு மரம் தலவிருட்சமாக உள்ள தலத்தில் வழிபட்டு பின்பு அங்குள்ள கோசாலையில் உள்ள பசுக்களுக்கு அகத்திக்கீரை மற்றும் பழங்களை உணவாகக் கொடுத்து வந்தால் உங்களுக்கு வாழ்வில் முன்னேற்றமும் நல்ல
சிந்தனைகளும் உண்டாகும்.
The post உத்திரட்டாதி நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்… appeared first on Dinakaran.