அனுமனும் ஐந்து மூல பிருந்தாவனமும்
ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீ வியாச ராஜ மடம் பிரபல்யம். இங்கு ஸ்ரீ வியாசராஜர் குருபரம்பரையில் வந்த ஐந்து மூல பிருந்தாவனம் உள்ளது. மேலும், மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனும் வீற்றிருக்கிறார். முதலில், ஸ்ரீரங்கம் வியாசராஜ மடத்தில் ஐந்து மூல பிருந்தாவனங்கள் மட்டும்தான் இருந்திருக்கிறது. அதன் பிறகே வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமார், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அது எப்படி?.. ஐந்து மூல பிருந்தாவனங்களும் வியாசராஜரின் சீடர்கள். அப்படி இருக்க, முதலில் அனுமார் அல்லவா பிரதிஷ்டை ஆகியிருப்பார்? எங்கோ இடிக்கிறதே? என்ற இந்த தகவல்களை நாம் கேள்விப்பட்டதும் நேரடியாக ஸ்ரீரங்கம் வியாசராஜர் மடத்திற்கு விசிட் செய்தோம்.
அனுமனையும், மகான்களையும் தரிசித்த பின்னர், அங்கு பூஜை செய்யும் திரு. ஜெயசிம்மாச்சாரிடத்தில் அனுமனைப் பற்றியும், ஐந்து மூல பிருந்தாவனங்கள் பற்றியும் விவரமாகக்
கேட்டறிந்தோம்.
மூன்று பிறவிகள்
“மகான் ஸ்ரீ வியாசராஜர் தீர்த்தரின் அவதாரம் சாதாரணமானது கிடையாது. இவரின் முந்தைய அவதாரம் பிரகலாதன். இவரின் பிந்தைய அவதாரம் ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர். அதாவது, பிரகலாதன், வியாசராஜ தீர்த்தர், ராகவேந்திர தீர்த்தர் என மூன்று அவதாரங்களாகும்.
நரசிம்ம பெருமாள், இரண்யனை வதம் செய்கிறார். அதன் பின், பிரகலாதனிடம்
“உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்’’ என்கிறார், நரசிம்மர்.
“உன்னையே என்றும் பூஜித்து முக்தியடைய வேண்டும்’’ என்று வேண்டுகிறார், பிரகலாதன்.
“நிச்சயம் உனக்கு முக்தி கிடைக்கும். உனக்கும் கிடைக்கும், பிறருக்கும் வழிகாட்டியாக இருந்து அவர்களையும் முக்தி பெற வழிவகை செய்வாயாக’’ என்று அருள்கிறார், நரசிம்மர்.
அதுபோலவே, ஸ்ரீ வியாசராஜராக அவதரித்து நமக்கெல்லாம் குருவாக இருந்து, இன்றும் நாம் முக்திக்கு செல்ல வழிவகை செய்து கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.
காவேரிக் கரையில் மூன்று அனுமன்கள்
நாம் முன்பே சொன்னதுபோல், வியாசராஜர் 732 அனுமன்களை பிரதிஷ்டை செய்திருக்கிறார். அதில், காவேரி வட்டத்துக்குள்ளே, ஸ்ரீரங்கத்தில் விசேஷமாக மூன்று பகுதியில் அனுமன்களை பிரதிஷ்டை செய்திருக்கிறார். இதில், சென்ற இதழில் நாம் கண்டோமே… “ஸ்ரீரங்கத்தின் எல்லை அனுமன்’’ அவர்தான் முதல் அனுமன்.
அப்போது அகண்ட காவேரியாக இருந்த சமயத்தில், திருச்சி அருகில் இருக்கும் முசிறி என்னும் இடத்தில், அங்கொரு அனுமனையும் பிரதிஷ்டை செய்தார். இது இரண்டாவதாக பிரதிஷ்டை செய்யும் அனுமன்.
ஸ்ரீரங்கம் வியாசராஜ மடத்தில் உள்ள அனுமனை இப்போது நாம் இந்த தொகுப்பில் கண்டு வருகின்றோமே… இந்த அனுமன் மூன்றாவதாக பிரதிஷ்டை ஆனவர். ஆக, காவேரி தாயின் கரையின் அருகிலேயே மூன்று அனுமன்களை பிரதிஷ்டை செய்திருக்கிறார், ஸ்ரீ வியாசராஜர்.
திருமஞ்சன வீதி
ஸ்ரீரங்கத்தில் உள்ள ராஜகோபுரம், முன்னொரு காலத்தில் மொட்டைக் கோபுரமாக அதாவது பெரிய கோபுரமாக இல்லாமல் சிறியதாக பாதி அளவில் மட்டுமே இருக்கும். அப்போதுள்ள ராஜகோபுரம் முதல் ஸ்ரீரங்கம் மலட்டாறு பாலம் என்று சொல்லக் கூடிய மங்கம்மா நகர் பாலம் வரையில் “திருமஞ்சன வீதி’’ என்று பெயர். திருப்பதி வெங்கடாஜலபதிக்கு தொடர்ந்து 12 ஆண்டுக் காலம் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் பூஜைகளை செய்திருக்கிறார். அதன் காரணமாக, அப்போதுள்ள ராஜாக்கள் வியாசராஜருக்கு திருமலையில் சில மண்டபங்களைக் கட்டிக் கொடுத்து, அவரின் நித்ய பூஜைகளுக்கு உதவி செய்திருக்கிறார்கள்.
அது போலவே, வியாசராஜர் ஸ்ரீரங்கத்தில் தேச சஞ்சாரம் மேற்கொள்ளும் சமயத்தில், திருமஞ்சன வீதியில், திருமஞ்சன காவேரி என்று ஒன்று இருந்திருக்கிறது. அதாவது பெரிய காவேரிக்கு முன்பாக இந்த திருமஞ்சனக் காவேரி இருந்திருக்கிறது. இங்குதான் நம்பெருமாளுக்கு நித்யமும் திருமஞ்சனம் ஆராதனை செய்ய தீர்த்தம் கொண்டு செல்வது வழக்கம்.
இதன் அருகிலேயே மகான் ஸ்ரீ வியாசராஜர், சந்திரிக்கா என்னும் நூலை எழுதிய காரணத்தால் “சந்திரிக்கா’’ என்ற பெயரிலேயே மண்டபம் ஒன்றை ஏற்படுத்தி, வியாசராஜ தீர்த்தர் ஸ்ரீரங்கத்தில் சில காலம் ஆன்மிகம் செய்யவேண்டுமாய் அன்றைய திருவரங்கத்தை ஆண்ட ராஜாக்களும் – ராணிகளும் வேண்டினார்கள். இதனை ஏற்ற வியாசராஜர், சந்திரிக்கா மண்டபத்தில் அனுமனை பிரதிஷ்டை செய்து தனது ஆன்மிகப் பணிகளை மேற்கொண்டார். வியாசராஜருக்கு பின்னரும் பல நூறு ஆண்டுகள் சந்திரிக்கா மண்டபத்திலேயே அனுமன் பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்து வந்தார்.
சமீபத்தில் இடம் மாற்றம்
காலப் போக்கில், சுமார் 1986 – 88 காலகட்டத்தில்தான் தற்போதுள்ள ஸ்ரீரங்கம் வியாசராஜ மடத்தில் அனுமார் மீண்டும் மறு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். இப்போது புரிகிறதா… ஸ்ரீரங்கம் சந்திரிக்கா மண்டபத்தில்தான் வியாச
ராஜர் பிரதிஷ்டை செய்திருக்கிறார். அந்த அனுமாரைத்தான் ஸ்ரீரங்கம் வியாசராஜ மடத்தில் மீண்டும் மறு பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அனுமனின் முன்பாக, ஸ்ரீ வியாசராஜரின் மிருத்திகா பிருந்தாவனமும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த இடமும் அனுமாருக்கு பொருத்தமான இடம்தான். காரணம், வியாசராஜர் சீடரின் ஐந்து மூல பிருந்தாவனம் இங்கு இருக்கின்றதே!
பஞ்ச குரு சந்நிதானம்
இதில், மிக முக்கிய மூல பிருந்தாவனம், “ஸ்ரீ லக்ஷ்மிநாத தீர்த்தர்’’ ஆவார். வீரசோழபுரத்தில் (தற்போதைய விழுப்புரம் மாவட்டம்) இருக்கும் “ஸ்ரீ சத்யநாத தீர்த்தரும்’’, “ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தரும்’’, “ஸ்ரீ லக்ஷ்மிநாத தீர்த்தரும்’’ சமகாலத்தவர்கள். வியாசராஜர் எழுதிய அனைத்து கிரந்தங்களுக்கும் டிப்னி (எளிய உரை) எழுதியவர் லக்ஷ்மிநாத தீர்த்தர்.
ஸ்ரீரங்கம் வியாசராஜ மடத்தில், லக்ஷ்மிநாத தீர்த்தர் பிருந்தாவனமாகி சுமார் 364 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றளவும்கூட பக்தர்களுக்கு வேண்டியதை தந்தருள்வதாக ஸ்ரீரங்கம் வாசிகள் தெரிவிக்கிறார்கள். மிக முக்கியமாக
புத்திர பாக்கியமில்லாதவர்கள், வேலையில்லாதவர்கள், குடும்பப் பிரச்னைகள் என ஸ்ரீரங்கம் வாசிகளின் குறைகளை நிவர்த்தி செய்கிறார், லக்ஷ்மிநாத தீர்த்தர்.
லக்ஷ்மிநாத தீர்த்தருக்கு பின் அவரின் சீடரான “ஸ்ரீ லக்ஷ்மிபதி தீர்த்தரும்’’ தன் குருவான லக்ஷ்மிநாத தீர்த்தரின் அருகிலேயே இருக்க வேண்டும் என்பதற்காகவே, லக்ஷ்மிநாத தீர்த்தரின் பிருந்தாவனம் அருகில் லக்ஷ்மிபதி தீர்த்தரும் பிருந்தாவனம் ஆனார். இவரும் மிக பெரிய மகா தபஸ்வி. இவருக்குப் பின் லக்ஷ்மிநிதி தீர்த்தர், இவர் மடத்தின் சந்நிதானத்திற்கு வெளியே தனி சந்நதியில் பிருந்தாவனம் ஆகியிருக்கிறார்.
லக்ஷ்மிநிதி தீர்த்தருக்கு பின் “ஸ்ரீ வித்யா ஸ்ரீதர தீர்த்தர்’’, இவரின் காலத்தில் தினமும் சுமார் மூன்று லட்ச குடும்பங்களுக்கு அன்னதானம் செய்துவந்திருக்கிறார். இவருக்கு பின் “ஸ்ரீ வித்யாவாருதி தீர்த்தர் பிருந்தாவனமாக ஸ்ரீரங்கம் வியாசராஜ மடத்தில் இருக்கிறார்கள். இந்த ஐந்து மூல பிருந்தாவனத்தையும் “பஞ்சகுருமார்கள்’’ என்றும் அழைக்கிறார்கள்.
தோஷங்கள் அனைத்தும் விலகும்
இந்த பஞ்ச குரு சந்நிதானத்திற்கு வந்திருந்து பிருந்தாவனங்களை தரிசித்தால், சனிதோஷம், நவக்கிரக தோஷம் போன்ற அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்கிறார்கள், இங்கு மூல பிருந்தாவனமாக இருக்கும் பஞ்ச குருமார்கள். இவர் களின் ஆராதனை நாட்களில் மடத்தில் விசேஷ அபிஷேகங்களும், அலங்காரங்களும் நடைபெறும். மேலும், ஸ்ரீரங்கம் வியாசராஜ மடத்தில் அனைத்து விதமான ஹோமங்கள், பித்ரு காரியங்கள், பெரிய காரியங்கள் ஆகியவை நடக்கின்றன. மடத்தின் வெளியே மிக பெரிய அளவில் “கோ சாலை’’ இருக்கிறது. இங்கிருந்துதான் தினமும் பால் எடுத்து செல்லப்பட்டு, அனுமனுக்கு பால் அபிஷேகம் நடைபெறுகிறது.
ஸ்ரீ மத்வாச்சாரியாருக்கு பின் வந்த முக்கிய மகானான ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் இல்லையென்றால், துவைத தத்துவம் மக்களிடையே பரவியிருக்காது. அவருக்கு பின் வந்த ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தரால் இன்னும் துவைத தத்துவம் விரிவடைந்துள்ளது. தொடர்புக்கு: ஜெயசிம்மாச்சார் – 9750921088.
*மடம் திறந்திருக்கும் நேரம்: காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை.
அமைவிடம்: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் ஸ்ரீரங்கத்திற்கு பேருந்துகள் செல்கின்றன. அதில் பயணித்தால் கடைசி நிறுத்தம் ஸ்ரீரங்கம்தான். அங்கு இறங்கி “ராகவேந்திரா ஆர்ச்’’ என்று ஸ்ரீரங்கம் பேருந்து நிறுத்தத்திற்கு நேர் எதிர் திசையில் ஒரு ஆர்ச் இருக்கும் அதில் பயணித்தால் நடந்து செல்லும் தூரத்திலேயே ஸ்ரீரங்கம் ஸ்ரீ வியாசராஜர் மடத்தை அடைந்துவிடலாம்.
The post திருமஞ்சன வீதியில் அனுமனும் மஹானும் appeared first on Dinakaran.