நீடாமங்கலம், ஜுன் 12: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் முதற்கட்ட பயிற்சி நடைபெற்றது. தமிழக அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் பொருட்டு எண்ணும் எழுத்தும் திட்டம் 2022ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 2025-2026ம் ஆண்டிலும் எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தலை மேலும் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு, தொடக்க கல்வி நிலையில் உள்ள 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, நீடாமங்கலம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி நேற்று நடைபெற்றது. இப்பயிற்சியில் நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 92 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த 107 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியினை வட்டார கல்வி அலுவலர் இன்பவேணி தலைமையேற்று பயிற்சியை தொடங்கி வைத்து எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் ஆசிரியர்களின் செயல்பாடுகள் பற்றியும், ஆசிரியர்களை மாணவர் சார்ந்த ஆசிரியர்களாக செயல்பட ஆலோசனைகளை வழங்கினார். மேலும் பயிற்சிக்கு வட்டக்கல்வி அலுவலர் மணிகண்டன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் சத்யா ஒருங்கிணைப்பில் பயிற்சி சிறப்பாக நடைபெற்றது. பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரிய பயிற்றுனர்கள் ஆனந்தன், ராதிகா, பூவனூர் ஊ.ஒ.தொ.பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிச்செல்வி, ஆசிரியர்கள் சிவசிதம்பரம், ஞானசேகரன் ஆகியோர் ஒருநாள் பயிற்சியினை சிறப்பாக அளித்தனர்.
The post நெற்பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிக்கும் விவசாயி… நீடாமங்கலத்தில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி appeared first on Dinakaran.