கோவை மண்டலத்தில் செல்வமகள் சேமிப்பு கணக்கு அதிகரிப்பு

கோவை, ஜூன் 12: ஒன்றிய அரசு சார்பில் பெண் குழந்தைகளின் நலனுக்காக கடந்த 2015ம் ஆண்டு செல்வ மகள் சேமிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் துவங்கியதில் இருந்து கோவை மண்டல அளவில் செல்வமகள் சேமிப்பு கணக்குகளின் எண்ணிக்கை 8.5 லட்சத்தை தாண்டி விட்டது. கோவை மண்டலத்தில் கோவை அஞ்சல் கோட்டம் தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பொள்ளாச்சி, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, திருப்பத்தூர், திருப்பூர் ஆகிய அஞ்சல் கோட்டங்கள் இடம் பெற்றுள்ளது. பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் செல்வமகள் சேமிப்புக் கணக்குகளை தொடங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கிளை தபால் அலுவலகம் தவிர, அனைத்து தபால் அலுவலகங்களிலும் செல்வமகள் சேமிப்புக் கணக்கை தொடங்கலாம்.

இந்த திட்டத்தின் கீழ், 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மூலம் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சம் 250 ரூபாய் அதிகபட்சம் 1.5 லட்ச ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கலாம்.  இந்தத் திட்ட கணக்கிற்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சி படி, ஒரு நிதியாண்டிற்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை வழங்கப்படுகிறது. பெண் குழந்தையின் 18 வயதில் அல்லது 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் உயர்கல்வி தேவைகளுக்காக கணக்கில் இருந்து 50 சதவீத பணத்தை எடுக்கலாம். கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்குப் பின் கணக்கு முதிர்ச்சி அடைகிறது. 18 வயது நிரம்பிய பின் (திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன் அல்லது 3 மாதங்களுக்குப் பின்) திருமணத்தின் போது கணக்கை முடித்துக் கொள்ளவும் வழி வகை செய்யப்பட்டிருக்கிறது என தபால் துறையினர் தெரிவித்தனர்.

The post கோவை மண்டலத்தில் செல்வமகள் சேமிப்பு கணக்கு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: