பருவ மழை தீவிரம் அடையும் முன் ஊட்டி டவுன் பஸ் ஸ்டாண்டில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

ஊட்டி, ஜூன் 12: ஊட்டி டவுன் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் நலன் கருதி நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊட்டி அருகே காந்தல், தலைகுந்தா, எச்பிஎப்., பிங்கர்போஸ்ட், கேர்ன்ஹில், ஏக்குன்னி, கல்லட்டி உட்பட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள், டவுன் பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் என 25க்கும் மேற்பட்ட பஸ்கள் ஊட்டி டவுன் பஸ் ஸ்டேண்டிற்கு வந்து செல்கின்றன. குறிப்பாக, காந்தல் பகுதிக்கு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை டவுன் பஸ்கள் செல்கின்றன. அதேபோல, தலைகுந்தா பகுதிக்கு மினி பஸ்கள் செல்கின்றன. ஆனால், இந்த இரு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் தற்போது லோயர் பஜார் சாலையில் நடைபாதை அருகே நிறுத்தப்படுகிறது. சில சமயங்களில் இவ்விரு பகுதிகளுக்கும் செல்லும் பஸ்கள் வர தாமதமானால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நடைபாதையிலேயே பஸ்சிற்காக காத்து நிற்க வேண்டியுள்ளது.

இதுபோன்ற சமயங்களில் மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும் மக்கள் சாலையிலேயே நிற்க வேண்டியதால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, பெண்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, இப்பகுதியில் பொதுமக்கள் பஸ்சிற்கு காத்து நிற்கும் போது, மழை பெய்தால் பாதிக்காமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நிழற்குடை அமைத்து கொடுக்கலாம். ஆனால், இதுவரை இப்பகுதியில் நிழற்குடை அமைத்து கொடுக்கப்படவில்லை. மழை பெய்யும் சமயங்களிலும் பொதுமக்கள் சாலையோரங்களில் பஸ்சிற்காக காத்து நிற்க வேண்டியுள்ளது. பருவமழை ஓரிரு நாட்களில் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதியில் நிழற்குடை அமைக்க நகராட்சி நிர்வாகம் முயற்சிகள் மேற்க்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post பருவ மழை தீவிரம் அடையும் முன் ஊட்டி டவுன் பஸ் ஸ்டாண்டில் நிழற்குடை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: