கோத்தகிரி, ஜூன் 12: கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஜமாபந்தி முகாமில் கோத்தகிரி பொது மயானத்தை பராமரிப்பு செய்து, மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் உதவி கலெக்டரிடம் மனு அளித்தனர். கோத்தகிரி தாலுகா வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, நெடுகுளா உள்வட்டத்திற்கான ஜமாபந்தி முகாம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஜமாபந்தி முகாம் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் பங்கேற்ற இந்த முகாமிற்கு குன்னூர் உதவி கலெக்டர் சங்கீதா தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். முகாமின் முதல் நாளான திங்களன்று கீழ்கோத்தகிரி கிராமப் பகுதிகளை சேர்ந்த பொது மக்களிடம் 55 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நெடுகுளா உள் வட்டத்திற்கு உட்பட்ட கிராம மக்களிடமிருந்து மொத்தம் 138 மனுக்கள் பெறப்பட்டன. முகாமின் கடைசி நாளான நேற்று கோத்தகிரி உள் வட்டத்திற்கு உட்பட்ட பகுதி மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் அளித்த மனுவில், கோத்தகிரி பேரூராட்சி தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பகுதி சுமார் 40 ஆயிரம் மக்கள் தொகை கொண்டுள்ள பகுதியாக உள்ளது. ஆனால் இந்த மக்கள் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய கடைவீதி அருகே ஒதுக்கப்பட்டுள்ள பொது மயானம் போதிய இடவசதியின்றியும், பாதுகாப்பு சுற்றுச்சுவர் கட்டாமலும், புதர்ச்செடிகள் அடர்ந்து வளர்ந்து கரடிகள், தெரு நாய்கள் மற்றும் விஷ ஜந்துக்களின் இருப்பிடமாக மாறியுள்ளது.
இதனால் இறந்தவர்களின் உடலை எரியூட்ட மேட்டுப்பாளையத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய சிரமமான நிலை உள்ளது. எனவே பொது மயானத்தை பராமரித்து, அடக்கம் செய்ய போதிய இடமில்லாததால் இப்பகுதியில் மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார். இதேபோல கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகி சோழா மகேஷ் அளித்த மனுவில், கோத்தகிரி அரசு பேருந்து கழக புதிய பணிமனை குன்னூர் செல்லும் சாலையில் கோத்தகிரியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு டீசல் நிரப்ப பம்ப் அமைக்கப்படவில்லை. எனவே பணிமனையில் இருந்து கோத்தகிரி பஸ் நிலையத்திற்கு வரும் அரசு பஸ்கள் டீசல் நிரப்புவதற்காக ஏற்கனவே காமராஜர் சதுக்கம் பகுதியில் இருந்த பழைய பணிமனைக்கு செல்ல வேண்டி உள்ளது.
இதனால் பயணிகள் நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் காத்திருந்து சிரமப்படும் நிலை உள்ளது. எனவே புதிய பணிமனையில் டீசல் பம்ப் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், ஜாதி, வருமான, இருப்பிடச் சான்றிதழ்கள் பட்டா, சிட்டா பெயர் மாற்றம், உட்பிரிவு உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் முகாமில் பெறப்பட்டன. நேற்று ஒருநாளில் மட்டும் 201 மனுக்கள் உள்பட கடந்த மூன்று நாட்கள் நடைபெற்ற ஜமாமந்தி முகாமில் மொத்தம் 394 மனுக்கள் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
The post கோத்தகிரியில் மின் மயானம் அமைக்க வேண்டும் உதவி கலெக்டரிடம் பொது மக்கள் மனு appeared first on Dinakaran.